அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை: அண்மை உயர்நீதிமன்ற தீர்ப்பு-ஓர் ஆய்வரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 2, 2022

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை: அண்மை உயர்நீதிமன்ற தீர்ப்பு-ஓர் ஆய்வரங்கம்

சென்னை,செப்.2- அனைத்து ஜாதியின ருக்கும் அர்ச்சகர் உரிமை: அண்மை உயர்நீதிமன்ற தீர்ப்பு-ஓர் ஆய்வரங்கம் நேற்று (1.9.2022) மாலை சென்னை பெரியார் திடலில் அன்னை மணியம்மையார் அரங்கில் திராவிடர் கழக வழக்குரைஞரணி சார்பில் நடைபெற்றது.

திராவிடர் கழக வழக்குரைஞரணித் தலைவர் த.வீரசேகரன் வரவேற்றார். 

ஆய்வரங்கத்தில் வழக்குரைஞர் சிகரம் செந்தில்நாதன், விடுதலை இதழின் ஆசிரியர் பணியில் 60 ஆண்டு கால சாதனையைத் தொடரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களுக்கு தமிழர்களின் தகைசால் தலைவர் என்று குறிப்பிட்டு தம்முடைய வாழ்த்தினைத் தெரிவித்து சிறப்புரையாற்றினார். 

தமிழ்நாட்டில் ஆகம கோவில்கள் இல்லை

தமிழர்களின் தன்மான பிரச்சினைக்கு குரல்கொடுத்து, நிகழ்ச்சி நடத்துபவர் ஆசிரியர் வீரமணி என்று தனது உரையை வழக்குரைஞர் சிகரம். செந்தில்நாதன் அவர்கள் தொடங்கினார். தொடர்ந்து ஆகமத்தின் பெயரைக் கூறி, ஒவ்வொரு முறை அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தீர்ப்பு வரும் நேரத்தில் பார்ப்பனர்கள் எவ்வாறு தந்திரம் செய்கிறார்கள் என்பதையும், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தந்திரமான தீர்ப்பாக அரசாணை செல்லும், அதே நேரத்தில் ஆகம விதிகள் படி அமைய வேண்டும் என்ற சூழ்ச்சியினை விளக்கி, தற்போதைய வழக்கின் தீர்ப்பில், ஆகமம் அல்லாத கோவில்களுக்கு மட்டுமே அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் உரிமை பொருந்தும் என்று சொல்வது பற்றிய மனித உரிமை விரோத போக்கினை விளக்கினார். இந்த தீர்ப்பு உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாகவும் எதிராகவும் இருக்கிறது. ஆகம கோவில்கள் தமிழ்நாட்டில் இருக்கிறதா? என்ற கேள்வியை எழுப்பி, அதற்காக ஆகமம் பற்றியும், 28 ஆகமம் ஏன் வந்தது? உப ஆகமம் 27 ஏன் தோன்ற வேண்டும்? ஆகமங்களில் இருக்கும் முரண்பாடு என்ன? என்பதை எடுத்துரைத்தார். டாக்டர் கானே, பார்த்தசாரதி பட்டாச்சாரியா ஆகி யோரின் கருத்தை மேற்கோள் காட்டும் நீதி மன்றம்,  ஏன் ஓய்வு பெற்ற நீதி அரசர் ராஜன் குழுவின் அறிக்கையையும் மகாராஜன் குழு வின் அறிக்கையையும் எடுத்துக் கொள்ள வில்லை? இந்த தீர்ப்பில் நீதியரசர்.சொக்கலிங்கம் அவர்கள் தலைமையில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் குழு கோவிலுக்கு செல்லும்போது இதை யெல்லாம் கணக்கில் கொண்டு, பட்டியலை தயாரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார். ஜனவரி முதல் நாள் புத்தாண்டு கொண் டாடப்படும் எந்த கோவிலும் ஆகம கோவில் அல்ல என்று கூறி, வரிசையாக எதுவெல்லாம் ஆகம கோவில்கள் அல்ல என்பதை பட்டிய லிட்டு, கடவுளை ஆரியமாக்குவது தான் தமிழ்நாட்டில் நடந்தது, ஆரியத்தின் பிடியில் தமிழரின் மரபும் சமயமும் சிக்கிக் கொண்டது என்பதை சான்றுடன் விளக்கி, தமிழ்நாட்டில் ஆகம கோவில்களே தற்போது இல்லை. இதைத்தான் இந்த குழுவிடம் நாம் பரிந்துரை செய்ய வேண்டும். 

நிகழ்ச்சியில் உரை கேட்க திரண்டிருந்தோர்
1.9.2022

இந்த தீர்ப்பு முற்றிலும் எதிரான தீர்ப்பு. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணவும், அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையை சாதிக்கும் வாய்ப்பும் ஆசிரியர் வீரமணிக்குத் தான் உண்டு என்று நிறைவு செய்தார்.

ஆகமத்தை விட அரசியல் சட்டம் பெரிது

ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி மானமிகு து. அரிபரந்தாமன் அவர்கள் தனது ஆய்வு உரையில், 93 பக்கம் கொண்ட தீர்ப்பினைப் பக்கங்கள் வாரியாக பிரித்தும், இதற்கு முன்னால் வழங்கப்பட்ட சேஷம்மாள் வழக்கின் தீர்ப்பு, ஆதி சிவாச்சாரியார் வழக்கின் தீர்ப்பு ஆகிய வற்றையும், அதன் சாரம்சங்களையும் கோடிட்டு காட்டி, இந்த வழக்கில் அரசின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பதை  வலியுறுத்தினார். உச்சநீதிமன்றத்தில் ஒரே சமூ கத்தின் ஆதிக்கம் இருக்கிறது. பெரும்பாலா னோர் அங்கே ஒரு சமூகத்தின் ஆதிக்கத்தில் இருக்கின்ற போது, இந்த பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு நீதிமன்றம் தகுதியான இடமாக அமையாது. எனவே, தமிழ்நாடு அரசின் சார்பில் சட்டத்திருத்தத்தை கொண்டு வர வேண்டும் என்பதை பதிவு செய்தார். தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின் கீழ் வரும் பிரிவுகளைத் தெளிவாக விளக்கி, இந்த தீர்ப்பு ஆகம கோவில்களுக்கு பொருந்தாது என்று சொல்லுவதில் இருக்கும் தந்திரத்தை விளக்கினார். கலைஞரால் கொண்டு வரப்பட்ட சட்டம் பற்றி விவரித்து, திமுக தற்போது வழங்கிய பணி நியமனங்கள் செல்லும் என்றார். ஆனால்,  ஆகம கோவில்களுக்கு செல்லாது என்று சொல்கிற நேரத்தில், சட்டப்படி ஆகமம் என்பது என்ன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறி, இந்திய அரசமைப்புச் சட்ட சில சரத்துகளை விளக்கிப் பேசினார். அனைத்தையும்விட அரசியல் சட்டமே பெரியது. ஆகமத்தை விட சட்டம் தான் பெரிது. தற்போதைய தீர்ப்பு அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கு என்ன தகுதி என்பதை வேண்டுமானால் விவாதிக்கலாமே ஒழிய, அவர்களை உள்ளே அனுமதிப்பதற்கு தடை விதிப்பது என்பது அரசியல் சட்டத்திற்கு முரணானது என்பதையெல்லாம் விளக்கி, இதனை சாதிப்பதற்கு மிகப்பெரிய போராட் டத்தினை ஆசிரியர் தான் அறிவிக்க வேண்டும். இதற்கு தீர்வினை ஆசிரியர் தான் வழங்க வேண்டும் என்று கூறி நிறைவு செய்தார்.

வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி இணைப்புரை வழங்கினார். வழக்குரைஞர் அணி மாநிலஅமைப்பாளர் ஆ.வீரமர்த்தினி நன்றி கூறினார்.

சிறப்புக்கூட்டத்தில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், வெளியுறவு செயலாளர் கோ.கருணாநிதி, பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்செல்வன், பொதுச்செய லாளர் ஆ.வெங்கடேசன், பகுத்தறிவு எழுத் தாளர் மன்றத் தலைவர் வா.நேரு, பகுத்தறிவு கலை இலக்கிய அணி எழுத்தாளர் மஞ்சை வசந்தன், கழக அமைப்புச்செயலாளர் வி.பன் னீர்செல்வம், சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால், சி.வெற்றிசெல்வி, தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வ நாதன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன்,  திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், இளைஞரணி சோ.சுரேஷ், க.கலைமணி, புரசை அன்புசெல்வன், உடுமலை வடிவேல் அரும் பாக்கம் சா.தாமோதரன், புலவர் வெற்றியழகன், ஜனார்த்தனன், த.கு.திவாகரன்,  டி.ஆர். செங் குட்டுவன், த.க. நடராசன், தமிழ்நாடு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத் தலைவர் வா.ரங்கநாதன், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மய்ய பொறுப்பாளர்கள், பெரியார் நூலக வாசகர் வட்ட பொறுப்பாளர்கள், புதுமை இலக்கிய தென்றல் பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment