அண்ணாவின் கொள்கைகளைப் பின்பற்றி நடப்பதே அவருக்கு உண்மையான நினைவுச் சின்னம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 10, 2022

அண்ணாவின் கொள்கைகளைப் பின்பற்றி நடப்பதே அவருக்கு உண்மையான நினைவுச் சின்னம்!

செப்டம்பர் 15 அறிஞர் அண்ணா பிறந்த நாள்

25.2.1969 செவ்வாய் மாலை 3.30 மணியளவில் மணப்பாறை மன்ற உயர்நிலைப் பள்ளி இலக்கிய மன்றத்தின் சிறப்புக்கூட் டத்தில் தந்தை பெரியாரவர்கள் ஆற்றிய அறிவுரையாவது: 

இன்றைய தினம் இங்கே அண்மையில் காலம் சென்ற நமது அருமைத் தலைவரும் தமிழ்நாடு ஆட்சியின் முதல்வரும் அறிஞ ருமான அண்ணா அவர்களின் உருவப் படத்தினைத் திறந்து வைக்கும் விழாவாக இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக் கிறது. இதில் எனக்குப் பங்கு அளித்த மைக்காக நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன். பொதுவாக படம் திறந்து வைப்பது, சிலை வைப்பது, பிறந்த நாள், மறைந்த நாள் கொண்டாடுவது போன்ற பல நிகழ்ச்சிகள் பெரிதும் பெரியோர் களுக்கு நடைபெறுவதுண்டு. இம்மாதிரி யான நிகழ்ச்சிகளில் இப்பள்ளியில் அண்ணா அவர்களின் உருவப் படத்தினைத் திறந்து வைப்பதானது, அவரது கொள்கையை மாணவர்கள் பின்பற்ற வேண்டுமென்ப தற்காகவே ஆகும். பெரியவர்களுக்கும் மக்களுக்கு அரும்பெரும் தொண்டாற்றி யவர்களுக்கும் வழிகாட்டியவர்களுக்கும் வளர்ச்சிக்கு ஏற்ற கொள்கைகளை நிறை வேற்றியவர்களுக்கும் நினைவுச் சின்னம் வைப்பது என்பதானது, மற்றவர்களையும் அவர்கள் கொள்கையைப் பின்பற்றச் செய்யவும் அவர்கள் வழியில் நடக்கச் செய்யவுமேயாகும்.

சாதாரணமாக வெறும் பிரச்சாரத்திற் காகவே,  மூடநம்பிக்கைக் கருத்துகளைப் பரப்ப வேண்டுமென்பதற்காகவே மகான் களுக்கும் கடவுள்களுக்கும் மதவாதிக ளுக்கும் பிறந்தநாள் இறந்தநாள் என்பது கொண்டாடப்படுகிறது. இவைகளில் பல பொய்யாகவே இருக்கும். பலர் பிறந்தே இருக்கமாட்டார்கள். அவர்களைக் கடவுள் அவதாரமாக்கி அவன் பிறந்தான் என்பதும், அவனுக்கு விழாக் கொண்டாடு வதும், ஞாபகச்சின்னம் வைப்பதும் அதன் மூலம் மக்களிடையே முட்டாள்தனத்தை,  மூடநம்பிக்கையை, பக்தியை, கடவுள் நம்பிக்கையைப் பரப்பவேயாகும். இது போன்ற மூடநம்பிக்கை விழாக்கள் இன்று நேற்றல்ல; நூற்றுக்கணக்கான வருடங் களாக ஆயிரக்கணக்கான வருடங்களாக  நம் நாட்டில் நடைபெற்றுக்கொண்டுதான் வருகின்றன. ஆனால் உண்மையாகவே பிறந்து தொண்டாற்றியவருக்கு மனித சமுதாய முன்னேற்றத்திற்காகப் பாடுபட் டவருக்குத்தான் இங்கு நாம் படம் திறந்து வைக்கின்றோம் என்றால்  அவர் நம் மக்களுக்காக ஆற்றிய தொண்டிற்காகவே யாகும்.

அண்ணாவுக்கு உண்மையான ஞாபகச் சின்னம்

அண்ணா முடிவெய்திவிட்டார் என்றா லும் அண்ணா மறையவில்லை, நடக்கிறார் என்கின்ற வகையில் அவரது கொள்கை களை மக்கள் பின்பற்றிச் செயல்பட வேண்டும். அவரது கொள்கைகள் நிறை வேறப் பாடுபட வேண்டும். அதுதான் முதலாவது நாம் அவருக்குச் செய்யும் ஞாபகச்சின்னம். மனிதன் என்றால் பகுத்தறிவுவாதி. அந்தப் பகுத்தறிவைப் பயன்படுத்தாதவன் மற்ற ஜீவராசிகளோடு ஒப்பிடக்கூடியவனே ஆவான். சொந்த அறிவைப் பயன்படுத்தாமல், சொந்த அறி வில் பயிற்சி பெறாமல் சும்மா கண்ணை மூடிக்கொண்டுதான் நான் சாஸ்திரம் சொன்னபடி, கடவுள் சொன்னபடி முன் னோர்கள் சொன்னபடி நடக்கிறேன் என் கின்றவன் மனிதனல்ல. மற்ற ஜீவராசிகள் உடன் ஒப்பிடத்தக்கவனேயாவான். உல கிலுள்ள ஜீவராசிகளிலெல்லாம் மனிதன் உயர்ந்தவனாக இருப்பதற்குக் காரணம், அவனுக்கிருக்கும் பகுத்தறிவினால் தான். அந்தப் பகுத்தறிவினைப் பயன்படுத்தாத காரணத்தாலேயே மனிதன் சாதாரண ஜீவனோடு ஒப்பிடத்தக்கவனாகின்றான்.

அண்ணாவுக்கு அறிஞர் பெயர் வந்த காரணம்

முன்னோர் சொன்னது சாஸ்திரம் சொன்னது, பெரியோர் சொன்னது, 100 வருஷத்திற்கு முன் இருந்தவன், 1000 வருடத்திற்கு முன் இருந்த ரிஷி, முனிவன் என்ன சொன்னான் என்பதைத்தான் சிந்திக்கின்றானே தவிர, இன்றைக்கிருப் பவன் என்ன சொல்கின்றான், நாளை உல கம் எப்படிப் போகும், நம்முன் நடப்பவை கள் என்ன என்பதைப் பற்றி சிந்திப்பதே கிடையாது. இப்படிப்பட்ட மக்களிடையே தான் அண்ணா பிறந்தார். அவர் கொள்கை பகுத்தறிவு. அப்படி என்றால் எந்தக் காரியமானாலும் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து, நடப்பிற்கு- சிந்தனைக்கு அறிவிற்கு ஏற்புடையதையே ஏற்றுக் கொள்வார். அதனால்தான் அவருக்கு அறிஞர் என்கின்ற பெயரே ஏற்பட்டது. அறிவைக் கொண்டு சிந்தித்துச் செயல் பட்டதால் அண்ணா அறிஞரானார்.

யார் சொன்னதாக இருந்தாலும்,  அந் தக் கருத்து எத்தனை காலமாக நாட்டில் பரவி இருந்தாலும், அதை எவ்வளவு பேர் கடைப்பிடித்து வந்தாலும் அது அனுபவத் திற்கு - நடப்பிற்கு - தன் அறிவிற்கு ஒத் திருக்கின்றதா என்று பார்த்து, தன் அறி விற்கு ஏற்றதாக இருப்பவற்றையே ஏற் றுக் கொள்ளக் கூடியவராவார்.

மூடநம்பிக்கைக்காரர்கள் யார்-?

மூடநம்பிக்கைக்காரர்கள் யார் என்றால் முன்னோர்கள் சொன்னார்கள் - நம்ப சாஸ்திரம் சொல்கிறது, கடவுள் சொல்லி இருக்கிறார், புராணங்களில் அப்படி இருக்கிறது; ரிஷிகள், முனிவர்கள் தெய்வ சக்தி பொருந்தியவர்கள், கடவுள் அவதாரங்கள் யாவரும் சொல்லி இருக் கிறார்கள்; நடந்திருக்கிறார்கள். நீண்ட காலமாகப் பழக்கத்தில் இருந்து வருகிறது. இவற்றை நாமும் பின்பற்ற வேண்டும். ஏன் எதற்கு என்று கேட்கக் கூடாது; சிந்திக்கக்கூடாது. நம்பவேண்டும். நம்பி அதன்படியே நடக்கவேண்டும் என்பவர் களே மூடநம்பிக்கைக்காரர்களாவார்கள்.

நாவலர் பாவலர் புலவர்களை வென்றவர்

நம் நாட்டில் மூடநம்பிக்கையால் கட்டப்பட்ட கட்டடங்களையெல்லாம் இடித்துத் தகர்த்து, பெரிய பெரிய நாவ லர்கள், பாவலர்கள், புலவர்களையெல் லாம் வாதிட்டு தோல்வியடையச் செய்த வர் அண்ணா ஆவார். அது உண்மையான பகுத்தறிவாளர்களால்தான் முடியும். அண்ணா அவர்கள் நல்ல துணிந்த விளக்கம் கண்ட பகுத்தறிவுவாதியாவார். அதனால்தான் அவருக்கு இவ்வளவு பெருமை; தான் பகுத்தறிவுவாதி என்பதில் அவருக்கு ஆணவம் கிடையாது. மூடநம்பிக்கைக்காரர்களை தன் வாதத் திறமையால் தன் பக்கம் ஈர்க்கக்கூடியவர். எல்லோருடனும் எதிரிகளுடனும் அன் பாகப் பழகக் கூடியவர். அதனால் யாவ ரும் அவர்மேல் அன்பு கொண்டிருந்தனர்.

அண்ணா பெருமைக்குச் சான்று

அவரது சவ ஊர்வலத்தில் 30 லட்சம் மக்கள் வந்து 7 மைல் தூரமும் மூன்றரை மணி நேரம் வரை கால்நடையாக நடந்தே வந்தனர். வந்தவர்களும் அழுதுகொண்டே வந்தனர் என்பது  ஒன்றே அவரது பெரு மைக்குப் போதுமானதாகும்; உலகத்தில் வேறு எந்தத் தலைவரின் மறைவுக்கும் இவ்வளவு மக்கள் வந்து துக்கம் காட்ட வில்லை. நம் நாட்டிலேயே ‘மகாத்மா’ என்று மதிக்கப்பட்ட காந்திக்குக்கூட 4.5 இலட்சம் மக்களே வந்தனர். பெரிய அரசியல் தலைவராக மதிக்கப்பட்ட நேருவுக்குக்கூட 3.4 லட்சம் மக்களே வந்தனர் என்பதைப் பார்க்கின்ற போது அண்ணாவின் பெருமை மேலும் உயர் வாகத் தெரிகிறது. அதுவும் பகுத்தறிவு வாதிக்கு இவ்வளவு சிறப்பு என்றால் அது பெருமையேயாகும்.

நம் நாடு காட்டுமிராண்டி நாடு

நம்முடைய நாடு காட்டுமிராண்டி நாடு. அதில் நானும் ஒருத்தன்தான் என் பதில் நான் வெட்கப்பட வில்லை பக்கு வமற்ற நாடு. இதனைப் பக்குவப்படுத்து வதற்கு சரியான ஆளில்லாததால் காட்டு மிராண்டி நாடாக இருக்கிறது. அப்படிப் பட்ட நாட்டில் எல்லோரும் பகுத்தறிவா ளர்களாக இருக்க முடியாது. பண்பாட டையாத மூடநம்பிக்கையான நாடு. 3000, 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஜாதி, மத சாஸ்திரங்களை நம்பிக்கொண்டிருக்கும் மக்களை உடைய நாடு அப்படிப்பட்ட நாட்டில் நாஸ்திகரான அவரிடம் ஆட்சி போய்விட்டதே! மக்களெல்லாம் நாஸ்தி கர்களாகி விட்டால் என்ன செய்வது என்று மனிதனின் முட்டாள்தனம் மூட நம்பிக்கை இவைகளை முதலாக வைத் துப் பிழைத்துக்கொண்டிருந்தவர்கள் பயப்படுகிறார்கள். எப்படியாவது இந்த ஆட்சியை ஒழித்துவிட வேண்டுமென்று பார்க்கின்றார்கள்.

சமுதாய முன்னேற்றத்திற்காக பாடுபட்டார்

அண்ணா அவர்கள் முதலில் “நான் சுயமரியாதைக் கல்லூரியில் படித்தவன்; எனக்கு டெக்ஸ்ட்புக் ‘குடிஅரசு’தான்’’ என்று சொல்லிக்கொண்டு என்னிடம் வந் தார் - என்னுடனேயே இருந்து தொண்டு செய்து வந்தார். பல அரிய நூல்களைக் கற்றவர். எதையும் தத்துவத்தோடு, அறி வோடு பார்த்து விளக்கக் கூடியவர். அவர் ஆட்சி செய்த இரண்டாண்டு காலத்தில் தமிழக மக்கள் முன்னேற்றத்திற்காக தன்னால் இயன்றவரை செய்தார். இன் னும் அவர் எவ்வளவு காலம் இருந்தாலும் அவ்வளவு காலமும் மனித சமுதாய வளர்ச்சிக்கு- முன்னேற்றத்திற்கு ஆவன செய்வார். மனித சமுதாயமும் வளர்ச்சி பெற்றிருக்கும்; முன்னேற்றமடைந்திருக் கும். அவருக்கு அடுத்தபடியாக சொல்லக் கூடியவர்களே இப்போது கிடையாது.

இராமாயணம் ஆபாசக் களஞ்சியம்

தமிழர்களால் போற்றப்படும் கம்ப ராமாயணத்தை அது ஒரு ஆபாசக் களஞ்சியம், மனிதன் அருவெறுக்கத்தக்க நூல் என்பதை நிலை நாட்டியவர்; யாரிடம் நிலை நாட்டினார் என்றால் பெரிய நாவலர் சோமசுந்தர பாரதியார், ரா.பி. சேதுப்பிள்ளை ஆகியவர்களிடம் விவா தம் செய்து வெற்றி பெற்று கம்ப ராமா யணம் ஆபாசக் களஞ்சியம் என்பதை நிலைநாட்டினார்.

தான் நாத்திகன் என்பதை நிரூபித்தார்

அண்ணா அவர்களின் தொண்டு, அறிவு, ஆற்றல் இவைகளை பழையகால மூடநம்பிக்கைப்படி பார்த்தால் அவர் அதிசயமானவர். கடவுளின் அவதாரம், தெய்வ சக்தி பொருந்தியவர், மனிதத்தன் மைக்கு அப்பாற்பட்டவர், தெய்வ அருள் பெற்றவர் என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால், அவர் இவைகளில் எவற்றையும் நம்பாதவர். மற்ற மக்களும் நம்பக்கூடாது என்று தொண்டாற்றியவர். அவர் பகுத் தறிவுவாதி- நாஸ்திகர் என்பதற்கு அடை யாளமாக அவர் பதவி ஏற்கும்போது கடவுள் பெயரால் பதவி ஏற்கவில்லை. பதவிக்கு வந்ததும், கடவுள், மதம், சாஸ்திரம், சம்பிரதாயம், ஜாதி ஆகிய யாவற்றையும் விலக்கிய சுயமரியாதைத் திருமணத்தைச் சட்டபூர்வமாக்கியதன் மூலம் கடவுள், மத, சாஸ்திர சம்பிரதாயங் கள், ஜாதி ஆகியவைகளை உடைத்தெறிந் தார். அரசாங்க அலுவலகங்களில் இருக் கும் கடவுள் படங்களை அகற்ற வேண்டு மென்று உத்தரவு போட்டார். இந்தத் துணிவு இதுவரை யாருக்குமே வந்த தில்லை. துருக்கியில் கமால்பாட்சா செய் தார். அடுத்து இவர்தான் துணிவோடு இத னைச் செய்தார்.

அண்ணா போலவே பகுத்தறிவுடன் நடக்கவேண்டும்

நாம் எல்லோரும் அண்ணா கொள் கைகளை ஏற்று நடக்கவேண்டும். அண்ணா அவர்களின் படத்தினை வைப்பதன் மூலம் அவரது நினைவு என்றென்றும் இருக்கும்படியாகவும், அவர் கொள்கை வழியில் நாம் செல்லுவதற்கு ஒரு தூண்டுகோலாகவும் அமையுமெனக் கருதுகின்றேன். நீங்கள் ஒவ்வொருவரும் அண்ணாவைப் போலவே பகுத்தறிவைக் கொண்டு எல்லா காரியங்களையும் சிந் தித்து உங்கள் அறிவிற்குச் சரியென்று பட்டதை ஏற்று நடக்கவேண்டும். படிப்பு என்பது பாடங்களை உருப்போடுவதற் காக, பாஸ் பண்ணுவதற்காக மட்டுமல்ல; அறிவு வளர்ச்சி பெற சிந்திக்க என்பதை ஒவ்வொரு மாணவரும் உணர்ந்து அதன் படி நடந்துகொள்ள வேண்டும்.’’ 

-(‘விடுதலை’ 3.3.1969)


No comments:

Post a Comment