உச்சநீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது!
பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்புதான் ஆபத்து - எச்சரிக்கை!
சமஸ்கிருதத்தை தேசிய பாஷையாக அறிவிக்கக் கோரும் வழக்கைத் தள்ளுபடி செய்து, வெறும் விளம்பரத்திற்காக இதுபோன்ற வழக்கைத் தாக்கல் செய்யவேண்டாம் என்று உச்சநீதிமன்றம் எச்சரித்ததை வரவேற்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
உச்சநீதிமன்றத்தில், சமஸ்கிருதத்தை ‘தேசிய பாஷையாக' அறிவிக்கக் கோரும் பொது நல மனு ஒன்றை ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரியும், வழக்குரைஞரும் (பா.ஜ.க. ஆதரவாளரும்) ஆன கே.ஜி.வன்சுரா என்ற நபர் தாக்கல் செய்துள்ளதை, உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் கிருஷ்ணமுராரி ஆகியோர் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்துள்ளது.
அப்போது நீதிபதிகள் மனுதாரரைப் பார்த்து சில சுருக்கென்று தைக்கும் கேள்விகளையும் கேட்டு, அம்மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்.
உச்சநீதிமன்ற நீதிபதி கேட்ட கேள்வி!
‘‘எத்தனை நகரங்களில் சமஸ்கிருதம் பேசப்படுகிறது? நீங்கள் சமஸ்கிருதத்தில் பேசுவீர்களா? அல்லது நீங்கள் போட்டிருக்கும் இந்த மனுவை சமஸ்கிருதத்தில் உங்களால் மொழி பெயர்க்க முடியுமா?
ஒரு மொழியை தேசிய மொழியாக அறிவிப்பது நீதிமன்றத்தின் கைகளில் இல்லை. அதற்கு அரசமைப்பில் (சட்டத்தில்) திருத்தம் கொண்டு வரவேண்டும். உங்கள் விளம்பரத்திற்காக இந்த வழக்கை ஏற்க முடியாது'' என்று திட்டவட்டமாக கூறி, ‘டிஸ்மிஸ்' செய்தனர்!
இது மனுதாரருக்கு மட்டும் எழுப்பப்பட்ட கேள்வி என்றாலும், இந்தியாவின் ஒரே பொது மொழி சமஸ்கிருதம்தான் என்று அடம்பிடித்து, பல கோடி மக்கள் வரிப் பணத்தை வாரி இறைக்கும் ஆர்.எஸ்.எஸ். அரசுக்கும், அதன் அக்கிரம பிடிவாதத்திற்கும் எதிராக எழுப்பப்பட்ட கேள்வியும் ஆகும்!
ஆரியத்தின் நீண்ட கால பொய்ப் பிரச்சாரம்!
சமஸ்கிருதம் ‘தாய்மொழி' மற்ற மொழிகளுக்கு என்ற திட்டமிட்ட புரட்டுப் பிரச்சாரத்தை ஆரியம் இன்று நேற்றல்ல பல ஆண்டுகளாகவே செய்து வருகின்றது.
வடலூர் வள்ளலார் இராமலிங்கர் அன்றே இதற்கு மண்டையிலடிப்பதைப்போல ஓர் அருமையான பதிலைக் கூறினார்.
சமஸ்கிருதம் தாய்மொழியானால், தமிழ்மொழி தந்தை மொழியாகும் என்றார்!
சமஸ்கிருதத்திற்கு தமிழ் பல சொற்களை வழங்கி யிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
தமிழ் அறிஞர்கள் கூறுவது என்ன?
திராவிட மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், பெருஞ்சித்திரனார் போன்ற பல தமிழறிஞர்கள், ஏனைய பிற தமிழ் ஆய்வாளர்களும் கூறியுள்ளனர்!
பிரபல வங்காள மொழி ஆய்வறிஞர் சுன்னிதகுமார் சாட்டர்ஜி அவர்கள் ‘பூஜை' என்ற வடமொழிச் சொல் - சமஸ்கிருதச் சொல் அல்ல - ‘‘பூசெய்'' - பூவை வைத்துக் கும்பிடு என்பதன் சமஸ்கிருத மயமாக்கல்தான் என்றார்.
இன்றைய பா.ஜ.க. பெயரில் நடைபெறும் ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். அரசின் புதிய கல்விக் கொள்கை விளக்க ஏட்டில் (வரைவிலும்கூட) 130 கோடி மக்கள் தொகை உள்ள இந்திய நாட்டில் சமஸ்கிருதம் பேசுவோர் (உண்மையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேட்ட கேள்வியை மறந்துவிட்டாலும்) எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?
24,821 பேர்தான்!
இவ்வளவு வெகு சிறுபான்மை மக்களின் மொழிதான் நாட்டின் ஒரே மொழியாக இருக்கவேண்டும் என்று வற்புறுத்துவதைவிட, பச்சைத் திணிப்பு - யதேச்சதிகாரப் போக்கு - பாசிச குணம் - ஆணவம் வேறு இருக்க முடியுமா?
சமஸ்கிருதத்தை ‘செத்த மொழி' என்று பலரும் அழைத்த ‘பெருமை' அதற்குண்டு.
ஆனால், ‘தேவ பாஷை' என்று அவர்கள் தங்களது மொழிக்குப் பெருமை சேர்த்தது பற்றிக் கூட நமக்குக் கவலையில்லை.
செம்மொழி தமிழ் மொழியை - இன்னும் ‘நீஷ'(நீச்ச) பாஷை' என்ற ஆணவத்தின் காரணமாகத்தானே, கோவில் வழிபாடு, குடும்பத்தில் முக்கிய இன்ப துன்ப நிகழ்வுகளில் அனுமதிக்க மறுக்கின்றனர் இன்னமும்!
இது கொடுமையிலும் கொடுமை அல்லவா!
தேசிய மொழி என்பது வேறு -
ஆட்சி மொழி என்பது வேறு!
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் ‘மொழிகள்' ' ‘Languages' என்ற தலைப்பில் (அதில் ‘தேசிய' என்ற சொற்றொடர் (National) எங்கும் கிடையாது) பட்டியலிடப்பட்ட 22 மொழிகளிலே வெகுவெகு குறைவான மக்களிடம் புழங்கும் இந்த மொழியை ‘‘தேவபாஷை'' என்று உயர்த்தி, தந்திரமாக அந்த சொல்லை - கருத்தை இந்திய அரசமைப்புச் சட்டத்திலும்கூடப் புகுத்தி விட்டனரே! (ஹிந்தி பற்றிய பிரிவு காண்க).
தேசிய மொழி (National Languages) என்ற தனித்தப் பெயர் அரசமைப்புச் சட்டத்தில் எங்கும் கிடையாது.
‘தேசிய மொழி' என்பது வேறு -
‘ஆட்சி மொழி' என்பது வேறு.
பொது மொழி என்ற சொற்றொடருக்கு அரசமைப்புச் சட்டத்தில் இடமே இல்லை.
பண்பாட்டுப் படையெடுப்பு என்னும் ஆபத்து!
செம்மொழித் தகுதிகூட (அதிகாரப்பூர்வமாக) முத்தமிழ் அறிஞர் கலைஞர் முன்பு எடுத்த விடா முயற்சியினால் தமிழ் (செம்மொழி தகுதி) - நெல்லுக்கு இறைத்த அந்த நீர் புல்லுக்கும் (தர்ப்பை) ஆங்கே பொசிந்தது. அதனால் பெற்றது என்பது அப்பட்டமான உண்மை அன்றோ!
பண்பாட்டுப் படையெடுப்புதான் படையெடுப்பு களிலேயே மிகமிக ஆபத்தனாது!
எனவே, விழிப்புடன் இருங்கள் தமிழர்களே! இல்லையானால் இப்படி கருநாகங்கள் புகுந்துவிடும்!
எச்சரிக்கை! எச்சரிக்கை!!
No comments:
Post a Comment