புதுச்சேரி, செப்.12- அனைத்து மாநிலங் களிலும் நீதிபதி பதவிகளை பெண்கள் விரைவில் அலங்கரிப்பார் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித் பேசினார்.
புதுச்சேரி, காலாப்பட்டில் உள்ள அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி பொன் விழா ஆண்டின் நிறைவு விழா, கல்லூரி வளாகத்தில் நடந்தது. விழாவில், பொன் விழா ஆண்டின் நினைவு இதழை வெளியிட்டு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித் பேசியதாவது:
நீதித்துறையில் பெண்கள் அதிக எண்ணிக்கையில் நீதிபதிகளாக வர வேண்டும் என்பது பலரின் ஆதங்கமாக உள்ளது. தற்போது நிலை மாறி வருகிறது. பெண்கள் அதிகளவு சட்டம் படிக்க முன் வருகின்றனர். இதனால் வரும் காலத்தில் நீதித் துறையில் அதிகளவு பெண் வழக்குரைஞர்களும், நீதிபதிகளும் இடம் பெறுவர். கடந்த காலங்களில் உச்சநீதிமன்றத்தில் ஒன்று அல்லது இரண்டு பெண் நீதிபதிகள் இடம் பெறுவதே அரிதாக இருந்தது. தற்போது நான்கு பெண் நீதிபதிகள் உள்ளனர். வரும் காலத்தில் இந்த எண்ணிக்கை அதிகரித்து பெண்கள் அதிகளவில் இடம்பெறுவர். இதேபோல், நீதிபதிகள் பணியிடங்களுக்கான நுழைவு நிலையில், பெண்கள் தற்போது அதிக அளவில் இடம் பெறத் துவங்கியுள்ளனர்.
நாட்டில் தற்போது ராஜஸ்தான், ஜார்க்கண்ட், ஒடிசா, தமிழ்நாடு உள்ளிட்ட அய்ந்து மாநிலங்களில் பெண்கள் அதிகளவு நீதிபதிகளாக உள்ளனர்.
அனைத்து மாநில நீதிமன்றங்களிலும், விரைவில் நீதிபதி பதவிகளை பெண்கள் அலங்கரிப்பர். இன்றைக்கு சட்டப்படிப்பு முடித்த பிறகு நீதிபதிகளாக, நேரடியாக பணியாற்ற வாய்ப்புள்ளது.
இதுபோன்ற சூழ்நிலையில் நீதிமன்றங்களில் எவ்வாறு தீர்ப்பு வழங்கப்படுகிறது என்பதை தெரிந்து வைத்திருப்பது முக்கியம். நீதிமன்றங்களில் வழங்கப்படும் தீர்ப்பு முறைகள் குறித்து, தேசிய சட்டப் பல்கலை பாடத்திட்டத்தில் வைக்கப்பட் டுள்ளது. அது போன்று சட்டக் கல்லூரிகளிலும் பாடத் திட்டங்களில், தீர்ப்புகள் எப்படி வழங்கப்படுகிறது என்பது இடம் பெற வேண்டும். இது, சட்டம் படித்து, நீதிபதி பணிக்கு தயாராகும் மாணவர்களுக்கு பெரிதும் உதவும்.
- இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment