தலைவெட்டி முனியப்பன் அல்ல; புத்தர்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 1, 2022

தலைவெட்டி முனியப்பன் அல்ல; புத்தர்!

சேலம் கோட்டை பெரியேரியில் தலைவெட்டி முனியப்பன் கோயில் என்பது புத்தர் சிலை என்பது உறுதியாகி உள்ள நிலையில், அந்த இடத்தை தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், இந்திய புத்த சங்கத்தின் சேலம் மாவட்ட அமைப்பாளர் ரங்கநாதன் கடந்த 2011இல் தாக்கல் செய்த மனு:

"சேலம் மாவட்டம் பெரியேரி கிராமத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான நிலத்தில், தலைவெட்டி முனியப்பன் கோயில் உள்ளது. அங்குள்ள சிலைக்கு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், கோயிலில் உள்ளது புத்தர் சிலையாகும். இதுதொடர்பாக கடந்த 2008இல் சர்ச்சை எழுந்தது.

அந்த சிலை அமர்ந்த நிலையில் கைகளை மடியில் வைத்தபடி உள்ளது. சிலை மட்டுமின்றி அங்குள்ள, 26 சென்ட் நிலமும், புத்த சங்கத்துக்குச் சொந்தமானது. அந்த இடத்தை மீட்டு, புத்தர் சங்கத்திடம் மீண்டும் ஒப்படைக்கக்கோரி, இந்து சமய அறநிலையத் துறைக்கும், முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை" என அம்மனுவில் தெரிவித்திருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சேலம் பெரியேரியில் இருப்பது தலைவெட்டி முனியப்பன் சிலையா, புத்தர் சிலையா என ஆய்வு செய்து, தமிழ்நாடு தொல்லியல் துறை ஆய்வு அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து தொல்லியல் துறை சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை விவரம்:

"தலைவெட்டி முனியப்பன் கோயில் கட்டடம் நவீன தோற்றம் உடையது. அங்குள்ள சிலை கடினமான கல்லாலானது. தாமரை பீடத்தில், 'அர்த்தபத்மாசனம்' எனப்படும் அமர்ந்த நிலையில் சிலை உள்ளது. கைகள், தியான முத்ரா கொண்டு உள்ளன. புத்தருக்கான அடையாளங்கள், சிலையின் தலைப் பகுதியில் உள்ளன. தொல்பொருள் மற்றும் வரலாற்றுச் சான்றுகள்படி ஆய்வு செய்யப்பட்டன. இதில், அந்த சிற்பம் மகா இலட்சணங்களைக் கொண்டுள்ள புத்தர் சிலைதான்" எனத்தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, அரசு தரப்பில் 'தலைவெட்டி முனியப்பன் சிலை' எனக்கருதி பக்தர்கள், பொதுமக்கள் தொடர்ந்து வழிபாடு நடத்தி வந்துள்ளனர். எனவே, இந்து சமய அறநிலையத் துறை வசமே தொடர அனுமதிக்க வேண்டும் என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களுக்குப் பின் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

"பெரியேரியில் இருப்பது புத்தர் சிலைதான் என்பதை தொல்லியல் துறை தெளிவாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அந்த சிற்பம் புத்தர் சிலை என முடிவுக்கு வந்த பிறகு தலைவெட்டி முனியப்பன் சிலை என்பதை இந்து சமய அறநிலையத் துறை கருத அனுமதிக்க முடியாது.

எனவே, புத்தர் சிலை உள்ள இடத்தை தமிழ்நாடு தொல்லியல் துறை தன் கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும். அங்குள்ளது புத்தர் சிலைதான் என்று அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும். அந்த இடத்தில் பொது மக்களை அனுமதிக்கலாம். அதேவேளையில், புத்தர் சிலைக்கு பூஜை உள்ளிட்ட பிற சடங்குகள் செய்ய அனுமதிக்கப்படவில்லை என்பதை தொல்லியல் துறை உறுதி செய்ய வேண்டும்" என உத்தரவிட்டார். 

சேலம் பெரியேரியில் உள்ள தலைவெட்டி முனியப்பன் சிலை, புத்தர் சிலை எனவும், அது தங்களுக்கு சொந்தமானது என்றும் கடந்த 2010 இல் இந்திய புத்த சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அப்போது, மாநில சிறுபான்மை ஆணைய உறுப்பினர் பவுத்த பிக்கு வி.மௌரியா மெத்தபால், "தலைவெட்டி முனியப்பன் கோவிலில் வழிபடப்பட்டு வரும் சிலை முனியப்பன் சிலை அல்ல. புத்தரின் சிலை. அசோகர் காலத்தைச் சேர்ந்த அந்த சிலை 300 ஆண்டுகளுக்கு முன்பு சேலத்தில் உள்ள பெரியேரி என்ற இடத்துக்கு கொண்டு வரப்பட்டது. அந்த இடம்தான் இப்போது சேலம் அரசு சிறப்பு பல்நோக்கு மருத்துவமனைக்கு எதிரில் உள்ள இடமாகும்.

மேலும், இங்கு 3 கிரவுண்ட் நிலம் புத்த டிரஸ்டிற்குச் சொந்தமானது. வேறு சிலைகள் வைத்து வழிபடக் கூடாது. எதிர்காலத்தில் தியான மண்டபம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது" என தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து இந்திய புத்த சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் ரங்கநாதன் உள்ளிட்டோர் 2011 இல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த நிலையில், சேலம் கோட்டை பெரியேரியில் தலைவெட்டி முனியப்பன் கோயிலில் இருப்பது புத்தர் சிலை என்பது உறுதியாகி உள்ள நிலையில், அந்த இடத்தை தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இதுதொடர்பாக சேலம் வரலாற்று சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜே.பர்னபாஸ் கூறியது:

"சேலம் கோட்டையில் உள்ள தலைவெட்டி முனியப்பன் சிலை, புத்தர் சிலை என வரலாற்று ஆசிரியர் ஆர்.பூங்குன்றன் தனது "வரலாற்றில் சேலம் - 1979" நூலில் குறிப்பிட்டுள்ளார். அதேபோல புத்தர் சிலையை சமணர் உருவம் என ஆங்கிலேயேர் எப்.ஜே.ரிச்சார்ட்ஸ் குறிப்பிட்டுள்ளார். அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்டி வாழ்ந்த புத்தரின் உருவத்தைத் தான் தலைவெட்டி முனியப்பனாக வணங்கி வந்தனர். மேலும், அச்சிலையின் முன் ஆடு, கோழி பலியிடுவது முரண்பாடாகவும், வேதனையாகவும்உள்ளது.

1960-1970களில் திராவிடர் கழகத்தினர் தலைவெட்டி முனியப்பன் கோயில் முன்பு புத்தர் கோயில் என பதாகையை வைத்தனர்.  கோயிலில் ஆடு, கோழி பலியிடப்படுவதை பெரியார் தடுத்து நிறுத்தினார் என பஸ்நாகி ராஜண்ணன் தனது "சேலம் சைக்ளோபீடியா - 1992" என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

சேலம் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட புத்த மத உருவங்களில் இந்த சிலையும் ஒன்றாகும். ஆத்தூர் வட்டத்தில் உள்ள தியாகனூரில் இரண்டு பெரிய புத்தர் சிலைகள் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

குறிப்பாக கி.பி. 16 ஆம் ஆண்டில் சமய பூசல்களின்போது சமண, புத்தர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். மேலும், அவர்கள் வழிபட்ட புத்த, சமண சிற்பங்களின் தலைகள் உடைக்கப்பட்டு வீசப்பட்டன. அதுபோன்றுதான் சேலம் கோட்டையில் உள்ள புத்தரின் சிலையின் தலை உடைக்கப்பட்டது. நாளடைவில் இந்த சிலையின் தலை மீண்டும் ஒட்டவைக்கப்பட்டது. ஆனால், தலை வெட்டப்பட்டு, மீண்டும் ஒட்டப்பட்டதால் இந்த சிலை இடது பக்கமாக சாய்ந்துள்ளது. தலை வெட்டப்பட்டு பின்பு ஒட்டப்பட்டதால் தலைவெட்டி முனியப்பன் என்று மக்கள் அழைத்து வழிபடத் தொடங்கினர்.

தலைவெட்டி முனியப்பன் சிலை, புத்தர் சிலைதான் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் சிலை ஒப்படைக்கப்படும். அதேவேளையில் கொல்லாமையை வலியுறுத்திய புத்தர் சிலை முன் இனி உயிர்ப் பலி தடுக்கப்பட வேண்டும்" என்றார்.

வரலாறு எப்படி எல்லாம் திருத்தப்பட்டுள்ளது. எந்தெந்த பவுத்தப் பள்ளிகள் எல்லாம் இந்துக் கோயில்களாக மாற்றப்பட்டன என்கிற தகவல்களை கல்வெட்டு ஆதாரங்களுடன் மயிலை சீனி. வேங்கடபதி "பவுத்தமும் தமிழும்" என்ற நூலில் விவரித்துள்ளார்.

சாஸ்தா என்று புத்தருக்குப் பெயர் - இப்பொழுது இந்துக் கடவுளான அய்யப்பனுக்கு அந்தப் பெயரைச் சூட்டியுள்ளனர். விநாயகர் (தலைவர்) என்று புத்தருக்குப் பெயர். அதனை இப்பொழுது பிள்ளையாருக்குச் சூட்டியுள்ளனர். ஆரியத்தின் சூழ்ச்சி அன்று முதல் இன்று வரை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.


No comments:

Post a Comment