காவலர்களிடம் முதலமைச்சர் குறை கேட்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 23, 2022

காவலர்களிடம் முதலமைச்சர் குறை கேட்பு

சென்னை, செப்.23 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (22.9.2022) காவல்துறை  தலைமை இயக்குநர் அலுவலகத்திற்கு நேரில் சென்று  அங்குள்ள காவல்துறையினரைச் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு மனுக்களை வாங்கினார். இதில் 800 பேருக்கு உடனடி பலன் கிடைத்தது.  

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  சென்னை கடற்கரை காந்தி சிலை எதிரில் உள்ள காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்திற்கு நேரில் சென்றார். அவரை தமிழ்நாடு அரசின் உள் துறை கூடுதல் தலைமைச்செயலாளர் பணீந்திர ரெட்டி, காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந் திரபாபு, சட்டம்-ஒழுங்கு கூடுதல் காவல் துறை தலைமை இயக்குநர் தாமரைக் கண்ணன், உளவுப்பிரிவு கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர்  டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் மலர்கொத்து கொடுத்து வரவேற்றனர். மேலும் சென்னை காவல்துறை ஆணை யர் சங்கர்ஜிவால், நிர்வாகப்பிரிவு கூடுதல் காவல்துறை தலைமை இயக் குநர் சங்கர் உள்ளிட்ட ஏராளமான உயர் அதிகாரிகளும் அவரை வரவேற்றனர். 

பின்னர் காவலர் அணிவகுப்பு மரியாதை நடந்தது.  இதனையடுத்து காவல்துறை தலைமை இயக்குநர்  அலுவலக வளாகத்தில் மகிழ மரக்கன்று ஒன்றை நட்டார். அதன் அருகில் அவ ரது தந்தை கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது, காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலக வளாகத்தில் நட்ட மகிழமரக்கன்று, தற்போது பெரிய மரமாக வளர்ந்து கம்பீரமாக நிற்பது, குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சர்களாக இருந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலக வளாகத்தில் ஏற்கனவே மரக்கன்றுகளை நட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.  

உங்கள் துறையில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் காவல்துறையினரிடம் குறைகளை கேட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனுக்களை வாங் கினார். 4 பெண் காவலர் உள்ளிட்ட 10 காவலர்களிடம் மனுக்களை பெற் றார். உங்கள் துறையில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் இதுவரை எத்தனை காவலர்களிடம் மனுக்கள் பெறப்பட்டு, அவர்களில் எத்தனை பேரின் குறைகள் தீர்த்து வைக்கப்பட்டு உள்ளது என்பது பற்றிய விவரங்களை காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு விடம் கேட்டார். 

அதற்கு பதில் அளித்த டி.ஜி.பி. 'பணி இடமாறுதல், ஊதிய முரண்பாடு மற்றும் தண்டனையை குறைத்தல் போன்றவை தொடர்பாக பெறப்பட்ட மனுக்களில், தனது அதிகாரத்துக்கு உட்பட்ட வகையில் உள்ள மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அரசின் அதிகாரத்துக்கு உட்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது' என்று தெரிவித்தார்.

800 பேருக்கு உடனடி பலன்

அப்போது அரசின் அதிகாரத்துக்கு உட்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இதனால் 800 பேர் உடனடி பலன் அடைந்தனர். மேலும் காவல்துறை தலைமை இயக்குநர்  அலுவலகத்தின் கட்டிட வரலாறு குறித்தும் விவரங்கள் கேட்டார். தற்போதுள்ள காவல்துறை தலைமை இயக்குநர்  அலுவலக கட்டடத்தை இடிப்பதற்கு முடிவு செய்யப்பட்டது. மிகவும் தொன் மையான கட்டடம் என்பதால், எதிர்ப்பு கிளம்பியது. அதனால் இடிக்கும் முடிவு கைவிடப்பட்டது. பின்னர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது, தொன்மையான காவல்துறை தலைமை இயக்குநர்  அலுவலக கட்டடம் புதுப்பொலிவோடு புதுப்பித்து கட்டப்பட்டது பற்றியும், அதன் அருகே புதிதாக மேலும் 2 கட்டடங்கள் கட்டப்பட்டது பற்றியும் எடுத்து சொல்லப்பட்டது. முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் அந்த விவரங்களை கேட்டு தெரிந்து கொண்டார்.   சுமார் அரை மணி நேரம் காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் இருந்த மு.க.ஸ்டாலின் அங்கிருந்த அனைத்து உயர் அதிகாரிகளிடமும் கலந்துரையாடினார். 

அமைச்சு பணி யாளர்கள் சார்பிலும் முதல்வருக்கு சால்வை அணிவிக்கப் பட்டது. 


No comments:

Post a Comment