பெரியார் உலகமயம்! உலகம் பெரியார் மயம்!! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 27, 2022

பெரியார் உலகமயம்! உலகம் பெரியார் மயம்!!

"மனிதன் சுயேச்சைக்கு உரிமையுள்ளவன். காரணம் அவனுக்கு சவுகரியம் இருக்கிறது என்பது மாத்திரமல்லாமல் அதற்கு ஏற்ற அறிவு, சக்தி ஆகியனவும் இருக்கிறது. ஆனால், மனிதன் அப்படிப்பட்ட சவுகரியத்தையும், அறிவையும், சக்தியையும் அடிமைத் தன்மைக்கும் இழிவுக்குமே பயன்படுத்திக் கொள்கிறான். அதனாலேயே மனித வர்க்க வாழ்வில் ஒரு பெரிய புரட்சியை உண்டாக்க விரும்புகிறேன்" ('குடிஅரசு' - 19.1.1936) என்று இன்றைக்கு 86 ஆண்டுகளுக்குமுன் கூறியுள்ளார் தந்தை பெரியார்.

அறிவும், சக்தியும் மனிதனுக்கு இருப்பது அவனுக்குச் சவுகரியத்தைக் கொடுப்பதற்காகவே; ஆனால், அவன் அதனைத் தவறாகப் பயன்படுத்திக் கொள்ளும் கீழ்த் தன்மையால் அடிமைத் தன்மைக்கும், இழிவுக்குமே பயன்படுத்துவதைக் கண்டுதான் தந்தை பெரியார் வேதனைப்படுகிறார்.

அந்த நிலை மாற்றப்பட வேண்டும் என்று கருதுகிறார். மனிதன் மூளையில் மாட்டப்பட்ட விலங்கான கடவுள் நம்பிக்கை, மத நம்பிக்கை என்பவற்றால் மனிதன் தன்னிடம் உள்ள அறிவையும், சக்தியையும் பறி கொடுக்கிறான்.

அதன் காரணமாகத் தான் தந்தை பெரியார், மற்றவர்கள் எளிதில் தொட அஞ்சுகின்ற இந்தப் பிரச்சினைகளைக் கையில் எடுத்துக் கொண்டு உருவத்தில் மட்டும் மனிதனாக இருப்பவனை உள்ளபடியான மனிதனாக மாற்ற விரும்பினார். அந்தப் பணிக்காகவே தன் முழு வாழ்வையும் ஒப்படைத்து உழைத்தார் - அதனால்தான் அவர் உலகத் தலைவர் என்று போற்றப்படுகிறார்.

உலகம் பெரியார் மயமாக வேண்டும் என்று அவர் கண்ட இயக்கம் இருபத்து நான்கு மணி நேரமும் சிந்திக்கிறது - செயல்படுகிறது - உழைத்துக் கொண்டே இருக்கிறது.

ஆதிக்கத்திலே சுகம் கண்டவர்கள், அந்த ஆதிக்க வேரின் மூலமான  கடவுள், மதத்தின்மீது தாக்குதல் தொடுக்கிறவர்கள்மீது ஆத்திரப்படுகிறார்கள். அவர்களைப் பற்றிப் பொய்யும் புனையுமான அபாண்டங்களைச் சுமத்துகிறார்கள் -  இன்னும் சொல்லப் போனால் ஒருபடி மேலே சென்று அவர்களைக் கொல்லவும் செய்கிறார்கள்.

அந்த வகையில் தந்தை பெரியார்மீது கொலை முயற்சிகள் நடந்ததுண்டு. தந்தை பெரியாரின் அந்தத் தொண்டைத் தொடரும் தலைவர் ஆசிரியர்மீது எத்தனைக் கொலை முயற்சிகள் என்பதை நம் தலைமுறையில் கண்டதில்லையா? 

"நாதசுரக் குழாயாக இருந்தால் ஊதியாக வேண்டும்; தவிலாயிருந்தால் அடிபட்டுத் தானாக வேண்டும் என்பது போல் எனக்குத் தொண்டை குரல் உள்ளவரையில் பேசியாக வேண்டும். பிரசங்கம் செய்தாக வேண்டும்" என்கிறார் தந்தை பெரியார்.

தமிழ் மண்ணையும் தாண்டி இன்னொரு மாநிலத்தில்  (வைக்கத்தில்) தீண்டாமை தாண்டவமாடுகிறது என்று கேள்விப்பட்டு, அந்த மண்ணுக்கு தன் குடும்பத்தோடு சென்று - போர்க்களம் கண்டு இரண்டு முறை சிறைக் கொட்டடியிலும் கிடந்தார் என்றால், அதற்குக் காரணம் மனித உரிமைக்காகத்தானே.

"மக்கள் உலகம் முழுவதும் ஒன்றுபட வேண்டும் - மற்ற உயிர்களுக்குத் தன்னால் கெடுதி இல்லாத வாழ்வு பெற வேண்டும் - மனிதனிடத்திலே பொறாமை, வஞ்சகம், துவேசம், கவலை, துக்கம் ஏற்படுவதற்கு இடமில்லாத சாந்தி வாழ்வுக்கு வகை தேட வேண்டும். இதுதான் எனது ஆசை" ('குடிஅரசு' 7.8.1938).

மனிதனுக்குப் பகுத்தறிவு இருந்தும் சக மனிதனை ஏன் வெறுக்க வேண்டும்? அவன் பகுத்தறிவைப் பாழ்படுத்தியது எது?

இதில் கவனம் கொண்டு தான் தந்தை பெரியார், பகுத்தறிவுக்கும் மனிதநேயத்துக்கும் தடையாக இருப்பதைத் தகர்த்தெறியும் ஓயாப் போரில் ஈடுபட்டார்.

தூங்கி எழுந்த அந்த நொடியிலேயே மனிதத் தொண்டுக்காக புறப்பட்ட ஒரே தலைவர் தந்தை பெரியார். நமது தலைவர் ஆசிரியர் மொழியில் சொல்ல வேண்டுமானால் - இல்லறம், துறவறம் என்பதை எல்லாம் பின்னுக்குத் தள்ளி தொண்டறம் என்ற ஒன்றை மேற்கொண்ட மானுடத் தலைவர் தந்தை பெரியார்.

மதக்காரணங்களுக்காக மனித ரத்தம் சிந்தப்பட்டது போல, வேறு எந்தக் காரணத்துக்காகவும் சிந்தப்பட்டதில்லை என்பதை உலக வரலாறு நமக்குத் தெரிவிக்கிறது.

அதனால்தான் தந்தை பெரியார் பகுத்தறிவையும் மனிதநேயத்தையும் பல வகைகளிலும் போதித்துக் கொண்டே வந்தார்.

"தன் வாழ்க்கையில் பிறர் துன்பம் அடையா வண்ணம் நடந்து கொள்ள வேண்டும். இதையே மனித வாழ்வின் இலட்சியமாகக் கொண்டு ஒவ்வொருவரும் வாழ்க்கை நடத்த முயற்சிக்க வேண்டும்" ('விடுதலை' 20.3.1950).

"ஒருவன் வாழ்கிறான் என்றால் அவனுடைய வாழ்க்கையால் பிறர் நன்மையடைந்தார்கள் - மற்றவர்கள் சுகங் கண்டார்கள் என்று அமைய வேண்டும்" (விடுதலை 20.3.1956).

இந்தக் கொள்கையை மானுடத்துக்குப் போதித்ததாலும் - தானும் தன் வாழ்க்கையில் அப்படியே நடந்து காட்டியதாலும் - தந்தை பெரியாரின் கொள்கை உலக மானுடத்துக்கே தேவைப்படுகிறது - வரவேற்கப்படுகிறது.

உலகின் பல நாடுகளிலும் அவர்தம் மய்யக் கருத்தைப் பரப்புவதற்கு மாநாடுகள் நடத்தப்படுவதும் இந்த அடிப்படையில்தான் - உலகம் பெரியார் மயமாக வேண்டும் என்று நாம் கூவுவது எல்லாம் இதற்காகத்தான்.

"இந்த இயக்கமானது. இன்றைய தினம் பார்ப்பனரையும், மதத்தையும், சாமியையும், பண்டிதர்களையும் கண்டித்துக் கொண்டு 'மூடப் பழக்க வழக்கங்களையும் எடுத்துக்காட்டிக் கொண்டு மூடநம்பிக்கைகளைப் பரிகாசம் செய்து கொண்டிருப்பது போலவே என்றைக்கும் இருக்கும் என்றோ, அல்லது இவை ஒழிந்தவுடன் இயக்கத்திற்கு வேலையில்லாமல் போய் விடும் என்றோ யாரும் கருதிவிடக் கூடாது.

மேற்சொன்னவைகளின் ஆதிக்கங்கள் ஒழிவதோடு, ஒருவன் உழைப்பதும், ஒருவன் நோகாமல் சாப்பிடுவதும் என்ற தன்மை இருக்கின்ற வரையிலும் - ஒருவன் தினம் ஒரு வேளைக் கஞ்சிக்கு மார்க்கமில்லாமல், பட்டினிக் கிடந்து சாவதும் மற்றொருவன் தினம் அய்ந்து வேளை சாப்பிட்டு விட்டு சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு வயிற்றைத் தடவிக் கொண்டு இருக்கிறதும் ஆகிய தன்மை இருக்கிற வரையிலும், ஒருவன் இடுப்புக்கு வேட்டியில்லாமல் திண்டாடுவதும், மற்றொருவன் மூன்று வேட்டி போட்டுக் கொண்டு உல்லாசமாக திரிவதுமான தன்மை இருக்கின்ற வரையிலும், பணக்காரர்கள் எல்லாம் தங்களது செல்வம் முழுமையும் தங்களுடைய சுக வாழ்வுக்கே ஏற்பட்டது என்று கருதிக் கொண்டிருக்கிற தன்மை இருக்கின்ற வரையிலும் சுயமரியாதை இயக்கம் இருந்தே தீரும்" (நூல்: தமிழர் தலைவர்) என்று சொன்ன தலைவர் தந்தை பெரியாரின் கருத்துக்கள் உலகத்திற்கே தேவையானவைதானே!

பெரியார் உலக மயம் - உலகம் பெரியார் மயம் என்பதன் அடிப்படை இதுவே!  ஜெர்மனி, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் பெரியார் பன்னாட்டு மாநாடுகள் நடப்பதும் - மற்ற மற்ற நாடுகளில் இனி நடக்க இருப்பதும் - தந்தை பெரியாரின் இத்தகு தத்துவக் கோட்பாட்டின் அடிப்படையிலேயேதான்!


No comments:

Post a Comment