ஆசிரியர்களுக்கெல்லாம் ஆசிரியர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 9, 2022

ஆசிரியர்களுக்கெல்லாம் ஆசிரியர்

"யாரும் சும்மா இருப்பதில்லை. ஒவ்வொரு ஜீவனும் அதனதன் உயிர் உள்ளவரை ஏதாவது தொழில் செய்து கொண்டு இருப்பது தான் ஜீவ சுபாவம் ஆகும்.

செத்தால் தான் சும்மா இருக்க முடியும். ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு தொழிலில் ஈடுபட்டிருப்பது போல, ஒருவன் வியாபாரம், ஒருவன் உத்தியோகம், ஒருவன் சாமியார், ஒருவன் பத்திரிகை ஆசிரியர், ஒருவன் தேசத்தலைவன், ஒருவன் பூசாரி, ஒருவன் தாசி வியாபாரம், ஒருவன் கள்ளு வியாபாரி என்பதாகப் பல தொழில் செய்வதை போல் நானும் ஏதேதோ தொழில் செய்து இங்கே இந்த தொழில் செய்கிறேன்."

என்று தந்தை பெரியார் 1927 ஆம் ஆண்டு காரைக் குடிக்கு அடுத்த சிராவயல் என்னும் ஊரில் பேசுகிறார்.

இவ்வித ஜீவ சுபாவமான தோற்றங்களால், தொழிலால், ஆச்சரியப்படத்தக்கதும், புகழத் தக்கதும் ஒன்றுமில்லை என்று தந்தை பெரியார் கூறுகிறார். அதைப்போல சிலர் வயிற்றுப் பிழைப்புக்காகவும் புகழுக்காகவும் ஜாதி, மதம், சனாதனம், கடவுள் என்ற கேவலமான படிக்கட்டுகளில் ஏறி நின்று தொழில் செய்து வருகிறார்கள்.

ஆனால் இவைகளையெல்லாம் எதிர்த்து, விஞ்ஞான மனப்பான்மையோடு எதையும் ஏன்..? எதற்கு..? எப்படி.. ? என்று சிந்திக்கச் சொன்ன  பெரியார் என்ற அந்த மாமனிதர் செய்த தொண்டுதான் இன்றைய மனிதர்கள் காட்டுமிராண்டி வாழ்க்கையில் இருந்து பக்குவப்பட்ட பண்பட்ட நிலையில் வாழ்வதற்கு, நற்பண்புகளை பெறுவதற்கு, காரணமாக அமைந்தது.

"கடந்த காலத்தையும், இனிவரும் காலத்தையும், நிகழ் காலத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து, சீர்தூக்கி, நல்லவற்றை, நாட்டுக்கு உகந்தவற்றை செய்யும் பண்பு கொண்டவர்" எவரோ, அவரே பெரியார் என்றும், ஆசிரியர் என்றும் அழைக்கப்பட்டார்கள் என்பது மரபு.

"விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையிலான அனைத்தையும் பகுத்தறிந்த கல்வி அறிவு நிரம்பி, செருக்கின்றி, அடக்கமே உருவாய் விளங்கியவர் எவரோ, அவரே பெரியார் என்றும் ஆசிரியர் என்றும் அழைக்கப்பட்டார்கள்" என்று "மதுரை காஞ்சி" நூலில்  கூறப்பட்டிருக்கிறது.

இந்த சமுதாயத்திலிருந்து எதையுமே எதிர் பார்க்காமல், 

"தான் வாழும் சமுதாயம் சீரோடும், சிறப்போடும், உயர்ந்த குறிக்கோளுடனும் வாழ வேண்டும், ஆணும் பெண்ணும் சமமாக மதிக்கப்பட வேண்டும், சம உரிமை பெற்று அனைவரும் வாழும் வாழ்க்கை பெற வேண்டும், அப்போதுதான் பண்பட்ட சமுதாயமாக வாழ இயலும்" என்ற அப்படிப்பட்ட உயர்ந்த வாழ்க் கையை, பண்பாட்டை, குறிக்கோளை, நோக்கத்தைக் கொண்டு, சமுதாயத்திற்கு உழைத்து வருபவர் தான் நமது ஆசிரியர் அய்யா கி.வீரமணி அவர்கள். மேற்கண்ட குறிக்கோளுடன் தொடர்ந்து சமுதாயத்தை நல்வழிப்படுத்துபவர்கள்தான் நல் ஆசிரியர்களாக கருதப்பட்டார்கள்.

இந்திய மக்களுக்காக, தினந்தோறும் வெளிவரும் தின நாளிதழ்கள், வாரத்திற்கு ஒரு முறை- மாதத்திற்கு இரு முறை- வருடத்திற்கு இருமுறை வெளிவரும் பருவ இதழ்கள்- விவசாயம், பொருளாதாரம், அறிவியல், கலை, தொழில்நுட்பம், ஆராய்ச்சி, கணினி, சினிமா, போன்ற தலைப்புகளில் வெளிவரும் மாத இதழ்களும் உண்டு. இவை அனைத்தையும் சேர்த்து 2017 ஆம் ஆண்டு இந்திய அரசு எடுத்த புள்ளி விவரத்தின் படி ஒரு லட்சத்து 16 ஆயிரம் பத்திரிகைகள் வந்து கொண்டிருப் பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் உலக செய்திகள், தேசிய செய்திகள், மாநில செய்திகள், சிறப்பு கட்டுரைகள், அரசியல் செய்திகள், விளையாட்டுச் செய்திகள், திருட்டு- செய்திகள், கொலை - கொள்ளை, பாலியல் பலாத்கார செய்திகள், பொருளாதார செய்திகள், ஜோசியம், ஜாதகம், பில்லி, சூனியம், ராசி, பொருத்தம், ஆகிய வற்றை விவரித்து தெரிவிக்கும் செய்திகள், வரன் தேடல், ஜாதி வாரியாக வரன் தேடல் செய்திகள், நல்ல நேரம், சினிமாப் படங்கள், சின்னத்திரை, கலைஞர் களுக்கு விருது, பெண் அழகு போட்டி போன்ற ஏராளமான செய்திகளை தாங்கி வரும் பத்திரிகைகள் உண்டு. தந்தை பெரியாரின் தலைமகன் அறிஞர் அண்ணா அவர்கள் சென்னையில் மே தின விழாவில் பேசிய உரை "நாடும் ஏடும்" என்னும் தலைப்பில் சிறு நூலாக வெளிவந்துள்ளது.

அதில் " மக்கள் சிந்தனையை தூண்டும் நூல்கள் இயற்றுவதற்கு, 

மக்கள் வீரம் அடைவதற்கு, 

நீதியை நடு நின்று நோக்குவதற்கு, ஜாதி, பேத சமய சண்டைகளை ஒழிப்பதற்கு, 

பொருளாதார மாறுபாட்டை மடிப்பதற்கு, 

புத்துலகம் சமைப்பதற்கு, கயமைத்தனமான கண்மூடி பழக்க வழக்கங்களை மதத்தின் பெயரால்,  சாஸ்திரத்தின் பெயரால் பழைமையின் பெயரால் பின்பற்றி, வறுமையில், மடமையில், கண்மூடித்தனத்தில், மக்கள் மருண்டு உழலும் மாயா மார்க்கத்தை  வேர றுப்பதற்கு, அவசியமானவற்றை அணைத்து, அல்லாத வற்றை அகற்றி, எதையும் பகுத்துணர்ந்து பார்க்க வழி கூறும் ஏடுகளை யாரேனும் இயற்றினார்களா..?" என்று கேட்டுள்ளார்.

எதையும் பகுத்துணர்ந்து பார்க்கும் அந்தப் பணியை,

ஜாதியை மதத்தை சனாதனத்தை ஒழிக்கும் பணியை, பெண்ணுரிமையை காக்கும் பணியை, அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதற்கான நோக்கத்தை முழுமையாக கொண்டு செயல்படும் பணியை,

செய்யத் தடுக்கும்  சக்திகள் எதுவாக இருந்தாலும் அதனை அழித்து ஒழிக்கும் மாபெரும் ஆற்றலாக விளங்கி வருவது 'விடுதலை' நாளிதழ் மட்டும்தான். அதனுடைய ஆசிரியர் ஆற்றல் மிக்க தலைவர் தமிழர் தலைவர் வீரமணி மட்டும் தான்.

அளவு செய்யப்படாத  கல்வியின் அளவு கரை கண்டவர்-

அளவு செய்யப்படாத பலவகை நூற்பொருளையும் உணர்ந்தவர்-

எப்படிப்பட்ட புலமையை உடையவராலும் அசைக் கப்படமுடியாத கல்வி அறிவும்,  நிலையும், கொண்டவர்.

நெடுந்தொலைவில் உள்ளோராலும் அறியப்படும் திண்மை கொண்டவர். பொருள் வரும் வழி வறண்ட காலத்திலும் தன்னைச் சேர்ந்த திராவிட இனத் தொண்டர்களுக்கு விடுதலையால் கல்வி அறிவை கொடுத்த கொடையுள்ளம் கொண்டவர்.

எங்கள் மதிப்பிற்குரிய விடுதலை ஆசிரியர் அய்யா அவர்களே ஆசிரியர்களுக்கெல்லாம் ஆசிரியராகி  உவமையாகிறார். 

- குடந்தை க. குருசாமி

தஞ்சை மண்டல செயலாளர், திராவிடர் கழகம்


No comments:

Post a Comment