பிரிட்டனில் குடியேறிய பார்ப்பனீயம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 9, 2022

பிரிட்டனில் குடியேறிய பார்ப்பனீயம்!

கடந்த 2019இல் பிரிட்டன் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டவர் போரிஸ் ஜான்சன். அய்ரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியது (பிரெக்ஸிட்) உள்ளிட்ட நடவடிக்கைகளால் தொடக்கத்தில் அவருக்கு மக்களிடையே ஆதரவு அதிகமாகவே இருந்தது  - இருப்பினும், அதன் பின்னர் அவரது ஆதரவாளர்களுக்கு முக்கிய பதவி வழங்கியது, கோவிட் காலத்தில் ஆடம்பரமாக வாழ்ந்தது எனத் தொடர்ச்சியாகச் சர்ச்சையில் சிக்கினார் போரிஸ் ஜான்சன். 

இதனால் வேறு வழியின்றி அவர் கடந்த செப்டம்பர் மாதம் பதவி விலகினார்;   இங்கிலாந்து சட்டப்படி எந்தவொரு நபர் ஆளும் கட்சியின் தலைவராக உள்ளாரோ, அவர் தான் நாட்டின் பிரதமராக இருக்க முடியும். இதனால் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரைத் தேர்வு செய்யத் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் வென்று பிரிட்டன் நாட்டின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 47 வயதான லிஸ் டிரஸ் இந்தத் தேர்தலில் மொத்தம் 81,326 வாக்குகளைப் பெற்றார்

இந்தத் தேர்தலில் எப்படியாவது வென்றுவிட வேண்டும் என மிகக் கடுமையாக முயன்ற போதிலும், இந்திய வம்சாவளி ரிஷி சுனக்கால் வெற்றி பெற முடியவில்லை. அவருக்கு 60,399 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. பிரச்சாரத்தை ஆரம்பித்த சமயத்தில் ரிஷி சுனக்கிற்கு ஆதரவு அதிகமாக இருப்பதாகக் கூறப்பட்டது. 

இருப்பினும், நாட்கள் செல்லச் செல்ல அவருக்கான மக்கள் செல்வாக்கு சரிந்து கொண்டே சென்றது. இந்தச் சூழலைக் கச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்ட வெளியுறவுத் துறை செயலர் லிஸ் டிரஸ் 'ரேசி'ல் முந்திவிட்டார்

42 வயதான சுனக், தெற்கு இங்கிலாந்தின் சவுத்தாம்ப் டனில் பிறந்தவர்.  ரிஷி சுனக் 2015இல் முதன்முறையாக நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப் பட்ட பிறகு, பகவத் கீதையின் மீது கைகளை வைத்து உறுதியேற்று பதவிப் பிரமாணம் செய்துகொண்டவர்.

பிரிட்டனில் உள்ள இந்திய வம்சாவளியினர் அவரது வெற்றிக்காக யாகங்களையும், பிரார்த்தனைக் கூட்டங் களையும் நடத்தி வந்தனர். அவருக்காக திருப்பதி கோவிலில் பட்டு வஸ்திரம் சாற்றி சில பரிகாரங்கள் செய்யப்பட்டன. கோவில் களுக்கு பசுவும் கன்றும் ரிஷி சுனக் பெயரில் தானமாக கொடுத்தனர். உஜ்ஜைனில் உள்ள காலபைரவர் கோவிலில் சிறப்பு யாகமும் செய்யப்பட்டது. இதற்காக ரிஷி சுனக்கின் உறவினர்கள் (பார்ப்பனர்கள்)  லண்டனில் இருந்து நேரடியாக வந்து கலந்து கொண்டனர். 

ரிஷி சுனக்கும் பூஜைகள் யாகங்கள்  செய்து வெற்றிக்கனியைச் சுவைப்பதில் அதீத ஆர்வம் காட்டினார். பெங்களூருவில் வசிக்கும் புரோகிதர் குடும்பத்தினரின் ஆலோசனைப்படி லண்டனில் தனது மனவியுடன், கோபூஜை நடத்தினார். அப்போது புரோகிதர்களுக்கு பட்டுவேட்டி, புரோகிதர் மனைவிகளுக்கு பட்டுச் சேலைகளும், வெள்ளித் தாம்பாளத்தட்டில் சில விலை உயர்ந்த  பொருட்களையும் வைத்துத் தானமாக கொடுத்தார். 

 அவர் ஜெர்ஸி பசு ஒன்றுக்கு பூஜை செய்வது மற்றும்  நின்று கொண்டிருக்கும் ஒரு பசுவிற்கு கீழே ஊர்ந்து அவரும் அவரது மனைவியும் ஒருபக்கத்தில் இருந்து மறுபக்கம் வந்து பூஜை செய்த காட்சிப் பதிவுகளும் வெளி வந்தன. 

 ரிஷி சுனக் பிறந்த ஊரான சவுத்தாம்ப்டனில் வசிக்கும் 75 வயதான நரேஷ் சோன்சட்லா. அவர் சிறு வயதிலிருந்தே ரிஷியை அறிந்தவர். நரேஷ் சோன்சட்லா கூறுகையில், "ரிஷி பிரதமராக வருவார் என்று நினைத்தேன் - நிறைய பிரார்த்தனைகள் செய்தோம். ஆனால் அவரால் முடியவில்லை. தோல்விக்கு முக்கிய காரணம்  இங்கிலாந்து மக்களின் நிறவெறியாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்" என்றார். 

பிரார்த்தனை செய்தும் தோல்வி அடைந்து விட்டார். ஆனால், அதற்கான நியாயமான காரணங்களை கூறாமல் வாக்களிக்காத மக்களை நிறவெறியர்கள் என்று மடைமாற்றம் செய்யும் செயலைப் பார்ப்பனர்களைத் தவிர வேறு யார் செய்வார்கள்? அறிவு நாணயத்தை அவர்களிடம் எதிர்பார்க்க முடியுமா?

இந்தியாவைப் பீடித்த பார்ப்பனீய நோய் இங்கிலாந்து வரை படையெடுத்தது - யாகங்களும், பூஜைகளும் பிரார்த்தனைகளும், கோதானங்களும் என்ன செய்யும்  - மக்கள் சக்தியே மகத்தானது என்பதை இப்பொழுதாவது மக்கள் பட்டறிவாய் புரிந்து கொள்ளட்டும்.

No comments:

Post a Comment