அனைவரும் வெல்ல வேண்டிய மூன்று எதிரிகள் (1) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 21, 2022

அனைவரும் வெல்ல வேண்டிய மூன்று எதிரிகள் (1)

 அனைவரும் வெல்ல வேண்டிய மூன்று எதிரிகள் (1)

மனிதர்களாகிய நமக்குள்ள பெரிய வாய்ப்பு ஆறாம் அறிவாகிய  "பகுத்தறிவு" என்ற சிறந்த தனித்தன்மை அறிவாயுதம்!

அதன் காரணமாக அறிவியல்- தொழில் நுட்பப் படைப்பாற்றலில் மனிதர்கள் வரலாற்றுப் பெருமைக்குரிய சாதனையாளர்களாக மாறி, நிலைத்து என்றும் வாழுகின்றனர்!

அவ்வளவு பெருமை வாய்ந்த மனிதர்கள்  - அவர்கள் வெல்ல வேண்டிய முக்கிய எதிரியை சரியாக அடையாளம் காணவே தவறக் கூடாது.

இத்தகைய மனிதர்களின் எதிரிகளை வெளியில் அவர்கள் தேட வேண்டாம்; சற்று அமைதியாக தனித்து அமர்ந்து, சிந்தித்துப் பார்த்தால் அவை புலப்படும்.

உண்மை எதிரிகள் - அல்லது பதுங்கியுள்ள எதிரிகளான அவர்கள் ஏவுகணையாகி அதே மனிதர்களை அழிக்கப் பயன்படும். எதிரிகளை சரியாக அடையாளம் கண்டுவிட்டால் போரின் வெற்றி அய்ம்பது விழுக்காடு உறுதியாகி விடுவது உறுதி!

அந்த மூன்று எதிரிகளை வெளியில் தேடாதீர்கள், உங்களுக்குள்ளேயே 'திரிசூலம்' போன்று அந்த மூன்று எதிரிகள் உள்ளனர்.

(1) தன் முனைப்பு 

(2) பொறாமை

(3) புகழ் வேட்டை

தனி வாழ்க்கையிலும் சரி, பொது வாழ்க்கையிலும் சரி இந்த மூன்று எதிரிகளை வென்று விட்டால் அவர்கள் வெற்றி பெற்ற மனிதர்களாக உயர்ந்து நிற்பது உறுதியிலும் உறுதி!

முதல் எதிரி - நமக்குள்ளே கிருமிபோல ஊடுருவி நம்மையறியாமலேயே நம்மை வீழ்த்தும் எதிரிதான் இந்த தன்முனைப்பு (Ego) என்ற நம் எதிரி!

தன்னை எதிலும் முன்னிலைப்படுத்தி, தகுதிக்கு மேல் பெருமை அல்லது பதவிகள், பொறுப்பிற்கு வர வேண்டும் என்று நினைப்பவர்கள் அது 'கணவன் - மனைவி'யாக இருந்தாலும், நண்பர்கள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும்  வளர்ந்து வருகிறவர்கள் ஆனாலும் சரி, தன்னுடைய உழைப்பும், நாணயமும் தன்னை எப்போதும் உயர்த்தும் என்று எண்ணி நிம்மதியாக இல்லாது -  குறுக்கு வழியில் 'பரமபத விளையாட்டு' விளையாட முனைந்தால்...  (இதை ஆங்கிலத்தில் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்துள்ள - Snake and Ladder - 'பாம்பும் ஏணியும்' விளையாட்டு என்றும் கூறுவர்). ஏணியில் திடீரென்று ஏறி உயர நினைத்து 'நானே அறிவாளி', 'நானே ராஜா', 'எனக்கே எல்லாம்' என்ற அகம்பாவத்தினால் உந்தப்படும் பலர் "பாம்பு கடித்து" கீழே வர வேண்டியதாகி விடும். மனிதர்கள்  இப்படி வீணே தேவையற்ற இழப்புகளைத்தான் சந்தித்து சரிந்து போகிறார்கள்!

உழைப்பும், உண்மையும் எப்போதும் நம்மை உயர்த்தவே செய்யும். சிற்சில நேரங்கள் இதற்குக் காலதாமதம் ஆனாலும், நிச்சயம் என்றோ ஒரு நாள் அது வந்தே தீரும். வராவிட்டால் தான் என்ன? நம் மனத் திருப்திக்கு நாம் உழைத்துக் கொண்டே இருந்தால் அதன் பலன் கனிந்து நமக்குக் கிடைக்காவிட்டாலும்   நாமடையும் இன் பத்திற்கு ஈடு இணை உண்டா? மனித மகிழ்ச்சிக்கு அடிப்படை திருப்தியும் நிம்மதியும்தானே!

2) பொறாமை என்ற எதிரியைவிட மிக மோசமான எதிரி மனிதனுக்கு வேறு கிடையாது!

இது எப்படி வருகிறது? ஏன் வருகிறது? என்பதை பல மனோ தத்துவ நிபுணர்கள்கூட கண்டறியவில்லை! முடியவில்லை!

ஓடுகிற சில வாகனங்களில் திடீர் நெருப்புப்பற்றி எரிந்து வாகனத்தை மட்டுமல்ல; உள்ளே இருந்து பயணம் செய்தவர்களையும் பலி கொள்ளு கிறதல்லவா? அதுபோல மின்னல் தாக்கி சிலர் மரணிப்பதில்லையா அவைபோலவே இது! அதை வள்ளுவர் எவ்வளவு நாசூக்காக எடுத்துத் துரைக்கிறார் பார்த்தீர்களா!

'அழுக்காறு உடையவர்களுக்கு அது சாலும்' இந்த ஒரு வரியை நின்று நிதானித்து அசைபோட்டு சிந்தித்துப்பாருங்கள்.

யார்மீது பொறாமை ஏற்படுகிறதோ - அவர்கள் இதில் குற்றம் இழைக்காமலேயே தண்டனைக் காளானவர்களாவது ஒரு வினோதம் போன்ற கொடுமையல்லவா?

என் நண்பர் கார் வாங்கினால், நடந்து அல்லது பேருந்தில் செல்லும் எனக்கு ஏன் 'பொறாமை' வர வேண்டும்?

மகிழ்ச்சி அடைய வேண்டிய முதல் நபர் நானாகத்தானே இருக்க வேண்டும்? காரணம் "அவர் ஏழையாக இருந்தால் என்னிடம் கடன் கேட்பார்; நான் மறுத்தால், எங்கள் நட்பு முறியும் வாய்ப்பு உள்ளதே, இதன் மூலம் அத்தகைய ஒரு இக்கட்டு, இடர்ப்பாடு தவிர்க்கப்படுகிறது" என்று மகிழத்தானே வேண்டும்.

பின் ஏன் வீணான பொறாமை? அது அர்த்தமற்று ஏற்படும் காரணம் கண்டறிய வேண்டுமா?

கண நேர 'ஊடுருவல்' பொறாமை உணர்ச்சி தான்.

(மேலும் வரும்) 


No comments:

Post a Comment