பிரதமர் நரேந்திர மோடி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில் 'மனதின் குரல்' என்ற நிகழ்ச்சியின் வாயிலாக உரை யாற்றுவது வழக்கம். அதன்படி 28.08.2022 அன்று அவர் குழந்தைகளின் ஊட்டச்சத்து தொடர்பாகப் பேசுகை யில், ஊட்டச்சத்துக் குறைபாட்டினைப் போக்கப் பாடல்கள்-இசை, பஜனைப்பாடல்கள் கூட பயனாகும் என்பதை நீங்கள் எப்போதாவது கற்பனை செய்து பார்த்ததுண்டா? மத்தியப் பிரதேசத்தின் ததியா மாவட்டத்திலே “என்னுடைய குழந்தை இயக்கத்தில் (மேரே பச்சோக்கி பர்வரிஷ)” இது பரிசோதனையாக செய்யப்பட்டது, அதன் விடை வெற்றி கரமாக இருந்தது.
பஜனைப் பாடல்களின் மூலம் ஊட்டச்சத்துக் குறை பாட்டினை போக்க முடியும் என்று ஆணித்தரமாக அதுவும் பரிசோதனைமுறையில் செய்து வெற்றி பெற்றதாக ஒரு பிரதமர் தம்பட்டம் அடித்துக்கொள்கிறார்.
தமிழ்நாடு அரசு இந்தியாவிலேயே முதல் முறையாக மதிய உணவுத்திட்டம் கொண்டுவந்தது, அதன் பிறகு சத்துணவுத்திட்டம் அதன் பிறகு கலைஞர் சத்துணவில் முட்டையைக் கொண்டுவந்தார். இப்போது காலை உணவுத் திட்டமும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது, இந்த நிலையை அடைய சமூக சீர்திருத்த சிந்தனைகொண்டவர்களும் மக்களிடையே அக்கறை உடையவர்களும் வேண்டும்.
தென் இந்திய மாநிலங்கள் கல்வியில் சிறந்துவிளங்கு வதற்கு அவர்களின் உணவுமுறையும் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது, இதற்கு முக்கிய காரணம் உணவில் புரதங்கள் அதிகம் இருப்பது, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கருநாடகாவில் பெரும்பான்மை மக்கள் மாட்டி றைச்சி, ஆட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சியை தொடர்ந்து உணவில் சேர்ப்பதுதான்.
ஆனால் வட இந்தியாவில் இந்த நிலை தலைகீழ் - குஜராத்தில் அசைவம் வேண்டாம் என்று அரசே மறைமுக மாக நீண்ட ஆண்டுகளாக பரப்புரை செய்தது, இந்தியாவி லேயே தொடர்ந்து ஊட்டச்சத்து குறைவாக உள்ள குழந் தைகள் அதிகம் இருக்கும் மாநிலமும் குஜராத் தான்.
மத்தியப் பிரதேசத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டை தவிர்க்க கொண்டைக்கடலை மற்றும் வாழைப்பழம் கொடுக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது, ஆனால் அழு கிய வாழைப்பழமும், புழுக்கள் துளைத்த நாற்றம் வீசும் கொண்டைக்கடலைதான் அவித்துக்கொடுக்கப்பட்டது, குழந்தைகள் சாப்பிடாமல் அப்படியே குப்பையில் வீசிய படங்கள் தொடர்ந்து வந்துகொண்டுதான் இருந்தது, தற் போது கருநாடகாவிலும் முட்டையை குழந்தைகளுக்கு தரக் கூடாது, இறைச்சியைத் தவிருங்கள் என்ற பரப்புரை யைச் செய்கின்றனர். இப்படி இருக்க பிரதமர் மோடி பஜனை பாடுங்கள் ஊட்டச்சத்து கூடும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஊட்டச்சத்துக்கு பஜனை போதும், பூசாரி போதும், பஜனையை எடுத்துச்சொல்ல ஒரு பார்ப்பன அர்ச்சகர் போதும் என்றால், பிரதமர் தேவை இல்லை. மோடி தலை மையிலான ஒன்றிய அரசு ஊட்டச்சத்துக் குறைபாட்டை செய்யவேண்டியதைச் செய்ததா ?
உலக அளவிலான பசி குறியீட்டுத் தரவரிசையில் 135 நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இத்தரவரிசை பட்டியலில் இந்தியாவின் நிலை 101ஆவது இடமாகும். பாகிஸ்தான் 92ஆவது இடத்திலும், சீனா முதல் 18 இடங்களுக்கு உள்ளாகவும் இருக்கிறது. பாகிஸ்தானை விட பின்தங்கிய நிலையில் இந்தியா உள்ளது
2019இல் உச்சநீதிமன்றத்தில் ‘சமத்துவ சமுதாய உணவுக் கூடம்’ அமைக்க உத்தரவிடும்படி, பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு 2022 ஜனவரியில் விசாரணைக்கு வந்தபோது அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் பட்டினிச் சாவு குறித்து எந்த விவரங்களும் இல்லை. அப்படி என்றால், நாட்டில் பட்டினிச் சாவே இல்லையா? என அம்மனுவினை விசாரித்த நீதிபதி ரமணா கேள்வி எழுப்பியிருந்தார். ஆனால், எந்த உறுதியான பதிலும் தரப்படவில்லை. பசிக் குறியீட்டில் பின்தங்கிய நிலையில் பட்டினிச் சாவு பற்றிய ஒரு முழுமையாக தகவல் கூட சேகரிக்கப்படவில்லையே ஏன் ?
ஒன்றிய அரசு ஒதுக்கிய உணவு மானிய நிதியினை கடந்த 2016-2017ஆம் நிதியாண்டிலிருந்து முழுமையாகச் செலவு செய்யவில்லை. தொடர்ந்து உணவிற்கான மானியம் குறைக்கப்பட்டுள்ளது .
2016-2017ஆம் நிதியாண்டில் உணவு மானியத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ.1,34,835 கோடியில் 82 சதவீதம் மட்டுமே செலவு செய்யப்பட்டிருக்கிறது. அடுத்தடுத்த நிதியாண்டு களாக 2017-2018இல் ஒதுக்கப்பட்ட நிதியில் 69 சதவீதமும், 2018-2019 மற்றும் 2019-2020 ஆண்டுகளில் முறையே 60 மற்றும் 59 சதவீதம் மட்டுமே செலவு செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் ஆண்டுதோறும் உணவு மானியத்திற்கான செலவினை ஒன்றிய அரசு குறைத்ததை அறிய முடிகிறது. கரோனா காலமான 2020-2021 நிதியாண்டில் மட்டுமே ஒதுக் கப்பட்ட நிதியைக் காட்டிலும் அதிகமாகச் செலவு செய்யப் பட்டுள்ளது. இந்த நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட நிதியோ ரூ.1,15,570 கோடி, ஆனால், செலவு செய்ததோ ரூ.4,22,618 கோடி. அதன் பின் மீண்டும் நிதி குறைத்தே ஒதுக்கப்பட்டு உள்ளது
உணவு என்பதைத் தாண்டி சத்துள்ள உணவு என்பது சரிவிகித வளர்ச்சிக்கு இன்றியமையாதது. பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகம் 2021ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி புள்ளிவிவரம் ஒன்றினை வெளியிட்டு உள்ளது. அத்தகவலின்படி இந்தியாவிலுள்ள குழந்தைகளில் வயதுக்கேற்ற உயரம் இல்லாதவர்கள் 35.5 சதவீதம், உயரத்திற்கேற்ப உடல் எடை இல்லாதவர்கள் 19.3 சதவீதம் மற்றும் குறைவான எடை உள்ளவர்கள் 32.1 சதவீதம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பெண்களின் ஊட்டச்சத்து பற்றிய தகவலில் 15 முதல் 49 வயதுக்கு உள்பட்டவர்களில் 18.7 சதவீதத்தினர் ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்கள் எனக் குறிப்பிடப் பட்டுள்ளது.
1000 குழந்தைகள் பிறக்கிறார்கள் எனில், அதில் எத்தனை குழந்தைகள் இறக்கிறார்கள் என்பதே இறப்பு விகிதமாகும். 2021இன் தரவுகளின்படி, இந்தியாவில் பிறக்கும் 1000 குழந் தைகளில் 27 குழந்தைகள் இறக்கின்றனர்.
2022, பிப்ரவரி 8ஆம் தேதி ஒன்றிய அரசு வெளியிட்ட தகவலின்படி 2019இல் இந்தியாவில் குழந்தை இறப்பு விகிதம் 30 ஆகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பேறுகால இறப்பு விகிதம் என்பது ஒரு லட்சம் குழந்தைகள் பிறக்கும் போது இறக்கக்கூடிய பெண்களின் எண்ணிக்கையைக் குறிப்ப தாகும். இதன்படி, இந்தியாவில் பேறுகாலத்தின் போது இறக்கும் பெண்களின் எண்ணிக்கை 2017-2019இன் படி 103. 2030இல் இவ்விகிதத்தை 70-ஆகக் குறைக்க ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்தியாவின் ஊட்டச்சத்து நிலை இவ்வாறாக இருக்க உணவிற்காக ஒதுக்கப்படும் மானியமோ முழுமையாகச் செலவு செய்யப்படாமல் இருக்கிறது. பஜனை பாடல்களோ, இசையோ மக்களின் பசியைப் போக்கவும் செய்யாது, குழந் தைகளின் ஊட்டச்சத்து அளவினை உயர்த்தவும் செய்யாது
இப்போது தமிழ்நாட்டிலும் தனியார் பள்ளிகள் மறை முகமாக குழந்தைகளை மிரட்டும் செயலில் ஈடுபட்டு வரு கின்றன. அதாவது வெஜிடேரியன் சாப்பாடு சாப்பிடுங்கள் நான் வெஜ் சாப்பிட்டால் படிப்பு மண்டையில் ஏறாது, சண்டைக்காரர்களாகவும், பொய் சொல்பவர்களாகவும் மாறிவிடுவீர்கள். ஆகவே வீட்டிலும் இறைச்சி சமைக்க வேண்டாம் என்று கூறுங்கள், காய்கறிகளைச்சாப்பிடுங்கள், அது தொடர்பான படங்களை வரைந்து கொண்டுவாருங்கள். என்று கூறுகின்றனர். மேலும் பிள்ளைகளுக்கு கறி, மீன், முட்டை போன்றவற்றை வீட்டில் மட்டுமே கொடுங்கள். பகல் நேரத்தில் நான்வெஜ் சாப்பிடக்கொடுத்து பள்ளிக்கு அனுப்பாதீர்கள் என்று மறைமுகமாக ரொம்ப அக்கறை யோடு சொல்வது போல் பெற்றோர்களிடம் ஆலோசனை கூறுகிறார்கள். ஒரு சிறு வகுப்பார்கள் தங்களது உணவுப் பழக்கத்தை ஊருக்கே திணிக்க முயல்கின்றனர். பிரதமர் மோடி இவர்களின் பாடலுக்கு சுதி சேர்க்கும் வகையில் பஜனை பாடுங்கள் ஊட்டச்சத்து குறைப்பாடு நீங்கிவிடும் என்றுகூறியதோடு மட்டுமல்லாமல் பரீட்சார்த்தமாக செய்து வெற்றியும் பெற்றுவிட்டோம் என்கிறார்.
ஆகவே இனிமேல் பள்ளிகள் உணவு இடைவேளையின் போது பிள்ளைகளை அமரவைத்து பஜனை பாடி அனுப்பும் காலம் வந்தாலும் வரலாம்.
No comments:
Post a Comment