அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் ஒன்றிய அரசு ரூ.2,660 கோடி நிலுவை
சென்னை,செப்.10- தமிழ்நாட்டில் செயல்படுத் தப்படும், அனைவருக்கும் வீடு திட்டத்திற்கு, ஒன்றிய அரசு 2,660 கோடி ரூபாயை நிலுவை வைத்து உள்ளது. நாடு முழுதும் அனைவருக்கும் வீடு திட்டம், 2015இல் ஒன்றிய அரசால் துவக்கப்பட்டது.
ஏழை மக்களுக்கு மானிய உதவியுடன் வீடு கட்டிக் கொடுப்பது, நிலம் வைத்திருப்பவர்கள் வீடு கட்ட நிதி வழங்குவது, வீட்டுக் கடனில் வட்டி மானியம் வழங்குவது என, மூன்று வகை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.இதில், வீட்டுக் கடனில் வட்டி மானியம் வழங்கும் திட்டம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், வீடு கட்டி கொடுக்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
இத்திட்டம், 2022 மார்ச் 31இல் முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஏழை மக்களுக்கு வீடு கட்டித்தரும் திட்டம் மட்டும், 2024 டிச., 31 வரை செயல்படுத்தப்படும் என, ஒன்றிய அரசு சமீபத்தில் அறிவித்தது. இது தொடர்பாக, அனைத்து மாநில தலைமை செயலர்களுக்கும், ஒன்றிய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.
தமிழ்நாட்டில் அனைவருக்கும் வீடு திட்டத்தில், 6.91 லட்சம் குடியிருப்பு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப் பட்டதில், 6.30 லட்சம் வீடுகள் கட்டும் பணிகள் துவக் கப்பட்டு உள்ளன. இதில், 4.67 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு, பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட் டுள்ளன. இத் திட்டங்களின் மொத்த மதிப்பான, 48 ஆயிரத்து 598 கோடி ரூபாயில், 11 ஆயிரத்து 257 கோடி ரூபாயை வழங்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது.
தற்போது வரை 8,597 கோடி ரூபாய் விடுவிக்கப் பட்டுள்ளது. மீதம், 2,660 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது. கட்டுமான பணிகளில் ஏற்படும் முன்னேற்றத் தின் அடிப்படையில், இத்தொகையை பெறுவதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளதாக, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment