நாட்டை தவறாக வழிநடத்தும் மோடி சரத்பவார் குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 12, 2022

நாட்டை தவறாக வழிநடத்தும் மோடி சரத்பவார் குற்றச்சாட்டு

புதுடில்லி, செப். 12-  தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 8-ஆவது தேசிய மாநாடு டில்லி டல்கத்தோரா மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் கட்சித்தலைவர் சரத்பவார் சிறப்புரை யாற்றினார். அப்போது அவர் நாட்டின் பாது காப்பு, பொருளாதாரம், வேலையில்லா திண் டாட்டம் உள்ளிட்ட பிரச்சினைகளை குறிப்பிட்டு ஆளும் பா.ஜனதாவை கடுமையாக சாடினார். மாநாட்டில் உரையாற்றும்போது அவர் கூறியதாவது:- 

பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் இந்திய எல்லைகளில் சீனா தொடர்ந்து ஆக்கிரமித்து வருகிறது. சீனாவின் ஊடுருவலுக்கு முன்பு நம்மால் ஏன் வலுவாக செயலாற்ற முடியவில்லை அல்லது நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இது நமது தோல்வி இல்லை என்றால் வேறென்ன? இந்திய பகுதிக்குள் சீன ராணுவம் நுழையவில்லை என பிரதமர் கூறினார். ஆனால் தற்போது எல்லாம் தெளிவாகி விட்டது. அதாவது இந்த விவகாரத்தில் அவர் நாட்டை தவறாக வழிநடத்துகிறார். விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லா திண்டாட்டம் உச்சத்தில் இருக்கும்போது, நாட்டின் பொருளாதாரம் வலுவடைந்து இருப்பதாக அரசு கூறி வருகிறது. 

ஒன்றிய அரசின் தவறான மற்றும் பகுத்தறிவற்ற கொள்கைகளால் விலைவாசி அதிகரித்து இருக்கிறது. அத்துடன் வேலைவாய்ப்பு பிரச்சினையுடன் நாட்டின் பாதுகாப்பு குறித்த கவலைகளும் அதிகரித்து உள்ளன. முந்தைய அய்க்கிய முற்போக்கு வட்டணி ஆட்சியின்போது கியாஸ் சிலிண்டர்கள் ரூ.410-க்கு கிடைத்தன. ஆனால் இன்று ரூ.1000அய் கடந்து விட்டது. நாட்டின் ஜனநாயக மதிப்பீடுகள் தொடர்ந்து குறைந்து வருகின்றன. இத்தகைய சூழலில் நாட்டின் இளைஞர்கள் முன்னோக்கி வர வேண்டும். ஒன்றிய அரசின் தவறான செயல்களுக்கு எதிரான போராட்டங்களுக்கு தலைமை தாங்க வேண்டும். இவ்வாறு சரத்பவார் கூறினார். இந்த மாநாட்டில் கட்சியின் மூத்த தலைவர்களான சுப்ரியா சுலே, அஜித் பவார், யோகானந்த் சாஸ்திரி, பிரபுல் படேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment