கட்டாய மரக்கறி உணவும் மரண தண்டனையும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 3, 2022

கட்டாய மரக்கறி உணவும் மரண தண்டனையும்

வீகன் எனப்படும் முழுமையான மரக்கறி உணவு முறையை கடுமையாக பின்பற்றியதால் ஊட்டச்சத்து குறைபாட்டால் குழந்தை மரணமடைந்தது. இதனை அடுத்து வலுக்கட்டாயமாக குழந்தைக்கு மரக்கறி உணவை மட்டுமே கொடுத்து அதனால் உயிரிழப்பிற்கு காரணமான தாய்க்கு வாழ்நாள் சிறைத் தண்டனையை அமெரிக்க நீதிமன்றம் அளித்தது. 

ஷீலா - ரேய் இந்த இணையருக்கு நான்கு குழந்தைகள். அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கோரலில் வசிக்கும் இவர்கள் அங்குள்ள சில மதவாத அமைப்புகளில் ஈடுபாடு கொண்டிருந்தனர். 

 அந்த மதவாத அமைப்பு மாமிச உணவை மறுத்து, மரக்கறி உணவுப் பழக்கத்தை கடைப்பிடிக்க பரப்புரை செய்து வருகிறது. அதில் உள்ள உறுப்பினர்கள் அதி தீவிர மரக்கறி  உணவுப் பழக்கத்தை தங்களது குடும்பத்திலும் கடுமையாக நடைமுறைப்படுத்தி வந்துள்ளனர். தங்களுடைய கடைசிக் குழந்தைக்கு தாய்ப்பாலை ஊட்டினாலும், பச்சைப் பழங்கள், பச்சை காய்கறிகளையே உணவாக அளித்துள்ளனர். இதில், 18 மாத வயதுள்ள எஸ்ரா என்ற அந்த ஆண் குழந்தை ஊட்டச்சத்து குறைபாட்டால் மூச்சுத் திணறி 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இறந்தது.

அந்தக் குழந்தை இறந்தபோது ஏழு மாத குழந்தையின் அளவில் இருந்ததாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைக்குத் தாய்ப்பால், மாம்பழம், ஆப்பிள் காய்கறி சாலட்டுகள், மிதமாக வேக வைக்கப்பட்ட மரக்கறிகள் போன்றவற்றையே பெற்றோர் அளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து நடந்த விசாரணையின் போது பெற்றோர் தங்கள் குழந்தைகளை கடுமையான வெறும் மரக்கறி உணவு முறைக்கு பழக்கப்படுத்தியுள்ளனர் எனத் தெரிய வந்தது. இதன் காரணமாக அவர்களின் இறந்த குழந்தை உள்பட பிற குழந்தைகளும் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. மேலும், குழந்தைகள் ஆரோக்கியமற்ற நிலையிலும் இருந்ததாக மருத்துவர்கள் தெரி வித்தனர். இதனைத் தொடர்ந்து பெற்றோர்மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் தாய்க்கு வாழ்நாள் சிறைத்  தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தீர்ப்பை வாசித்தபோது ஷீலா முகத்தில் எந்தவித மான உணர்வும் வெளிப்படவில்லை என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியாவிலும் தற்போது இறைச்சி வேண்டாம் - மரக்கறி உணவை உண்ணுங்கள் - என்ற பரப்புரை மேற் கொள்ளப்பட்டு வருகிறது. வட இந்தியாவில் முட்டையை பொது இடங்களில் வைத்து விற்கக் கூடாது என பாஜக ஆளும் மாநில அரசுகள் மற்றும் பாஜக மாநகராட்சி மேயர்கள் உத்தர விட்டுள்ளன. தற்போது தமிழ்நாட்டிலும் பள்ளி களுக்கு இறைச்சி உணவு, முட்டை, மீன் போன்ற வற்றைக்கொண்டு வரக்கூடாது என்று சில தனியார் பள்ளி நிர்வாகங்கள் உத்தரவிட்டு வருகின்றன.  இதனால் குழந்தைகளுக்கு ஊட்டச் சத்து குறைபாடு ஏற்பட்டு பெரும் பாதிப்பை எதிர்கால தலைமுறைகள் சந்திக்க நேரிடும். 3 விழுக்காடு மட்டுமே உள்ளவர்கள் - அவர்களின் பழக்க வழக் கங்களை ஒட்டுமொத்த மக்கள் மீதும் திணிக்க முயல்வது பெரும் ஆபத்தில் போய் முடியும் என்பதற்கு அமெரிக் காவில் குழந்தை இறந்த எடுத்துக்காட்டே போதுமானது ஆகும்.

பிஜேபி ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகு, அநாவசிய மான முறையில் உணவுப் பிரச்சினையில் மூக்கை நுழைக்கிறது.

மாட்டுக்கறி உணவு - இருப்பதிலேயே சற்று மலிவாகக் கிடைக்கக் கூடியது. உழைப்பாளிகளுக்கு அவசியமான உணவும்கூட.

கிரிக்கெட் விளையாடும் பார்ப்பனர்களில் பெரும் பாலோர் மாட்டுக்கறி உணவு சாப்பிடு பவர்களே!

கோமாதா என்று சொல்லி மாட்டு மாமிசத்தைத் தடை செய்வது மக்களை வலுவற்றவர்களாகச் செய்யும் முட்டாள்தனமான ஏற்பாடு.

மதம் வீட்டு அறைக்குள் இருக்கும் வரை பிரச்சினை இல்லை. வீதிக்கு வந்தால் ஆபத்தாகும். அதுவும் உணவு விடயத்தில் விபரீதமாகும் - எச்சரிக்கை!

 


No comments:

Post a Comment