சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி பதவியேற்றார்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 13, 2022

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி பதவியேற்றார்!

சென்னை, செப். 13 தலைமை நீதிபதி முனீஸ் வர்நாத் பண்டாரி ஓய்வு பெற்றதை தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி எம்.துரைசாமி இன்று (13.9.2022) பதவி ஏற்றார். 

சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த முனீஸ்வர்நாத் பண்டாரி ஓய்வு பெற்றார். இதையடுத்து அவருக்கு வழியனுப்பு விழா நேற்று (12.9.2022) சென்னை உயநீதிமன்றம் சார்பில் நடத்தப்பட்டது. தலைமை நீதிபதி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்திற்குப் புதிய தலைமை நீதிபதியை இதுவரை இந்திய குடியரசுத் தலைவர் நியமிக்கவில்லை.

கேரளா மற்றும் ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றங்களின் மூத்த நீதிபதிகள் இருவரில் ஒருவரை சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக விரைவில்  நியமிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அதுவரை  தலைமை நீதிபதி பதவியை கவனிக்க மூத்த நீதிபதி எம்.துரைசாமியை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் பரிந்துரை செய்தனர்.

 இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்டு, சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமியை நியமித்து. குடியரசுத்தலைவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரவு பிறப்பித்தார். குடியரசுத் தலைவரின் உத்தரவின்படி, பொறுப்புத் தலைமை நீதிபதியாக எம்.துரை சாமி  இன்று (13.9.2022) காலை 10 மணியளவில் பதவி ஏற்றார். இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சி தலைமை நீதிபதி சேம்பரில் நடைபெற்றது. இதன் பின்னர், பொறுப்பு தலைமை நீதிபதி எம்.துரைசாமிக்கு, சக நீதிபதிகள், ஒன்றிய-மாநில அரசு வழக்குரைஞர்கள் வாழ்த்து களைத் தெரிவித்தனர். 

அதைத் தொடர்ந்து, இதுவரை தலைமை நீதிபதி விசாரித்து வந்த பொதுநல வழக்கு உள்ளிட்ட வழக்குகளை, நீதிமன்ற முதல் அமர்வில் அமர்ந்து சக நீதிபதியுடன் சேர்ந்து பொறுப்புத் தலைமை நீதிபதி எம்.துரைசாமி விசாரிப்பார்.

No comments:

Post a Comment