'இந்து தமிழ் திசை' ஆர்.எஸ்.எஸின் அதிகாரப் பூர்வ ஏடா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 22, 2022

'இந்து தமிழ் திசை' ஆர்.எஸ்.எஸின் அதிகாரப் பூர்வ ஏடா?

மின்சாரம்

தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் மானமிகு ஆ. இராசா பெரியார் திடலில் பேசியது ஆதாரமற்றது- உண்மைக்கு மாறானது என்று சொல்ல அவர்களிடம் ஆதாரம் இல்லை.

1) இந்து என்றால் - யார் கிறித்தவர் இல்லையோ, யார் முஸ்லிம் இல்லையோ, யார் பார்சி இல்லையோ - அவன்தான் இந்து என்ற சட்ட நிலையை எடுத்துக் கூறினார் ஆ. இராசா. இது தவறு என்று 'தமிழ் இந்து' கூறுமா? இரண்டாவது இனமலராகி வருகிறது.

2) இந்து மதத்தில் பிறப்பின் அடிப்படையில் வர்ணாசிரமம் இருக்கிறது என்று ஆ.இராசா கூறுவதை ஏன் மறுக்க முடியவில்லை?

3) இந்து மதத்தில் சூத்திரன் என்பவன் பிர்மாவின் பாதத்தில் பிறந்தவன். அவன் ஏழு வகைப்படுவான். அதில் ஒன்று தன்னுடைய தேவடியாள் மகன் என்று குறிப்பிடப்பட்டு இருப்பது உண்மையா, இல்லையா? இல்லை என்று 'தமிழ் இந்து' ஏன் மறுக்கவில்லை?

4) இதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டியவர்கள் யார்? மனு தர்மத்தை ஆதரிக்கும் தமிழ் இந்து வகையறாக்களா? சுயமரியாதையோடு சுட்டிக்காட்டிய ஆ. இராசாவா?

5) நூற்றாண்டு கண்ட தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் ஆதாரப் பூர்வமாக கூறி வந்ததைத்தானே - அந்த இயக்க வழி வந்த ஆ. இராசாவும் எடுத்துக்காட்டுகிறார்.

6) இழிவுபடுத்தப்படும் மக்களின் சார்பாக ஆவேசக் குரல் எழுப்புவதுதான் - சுத்த ரத்த வோட்டமுடையவனின் அடிப்படைக் கடமை.

7) உண்மையைச் சொன்னதற்காக, ஓர் இனத்தின் சுயமரியாதைக்காகக் குரல் கொடுப்பவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பார்ப்பனர்கள், சங்பரிவார் சக்திகள் 'தமிழ் இந்து' போன்ற பார்ப்பன ஏடுகள் கூறுகின்றன என்றால் இதன் பொருள் என்ன?

"ஆமாம், நீங்கள் சூத்திரர்கள் தான், வைப்பாட்டி மக்கள்தான் அதனை ஏற்றுக் கொண்டே தீர வேண்டும் - எதிர்த்துப் பேசக் கூடாது" என்று இந்த 2022லும் அடம் பிடிக்கிறார்களா? அதற்காகக் கடை அடைப்பு நடத்தச் சொல்லுவது எந்த மனப்பான்மையில்?

8) பக்திப் போதையில் வீழ்ந்து கிடப்பதால் நாம் எதைச் சொன்னாலும் பார்ப்பனர் அல்லாத மக்கள் கண் மூடித்தனமாக ஏற்றுக் கொள்வார்கள் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கைதான் இதற்குக் காரணமா?

9) இராமாயண காலத்திலிருந்து விபீஷணர்கள் இருந்து வருகிறார்கள் என்ற தைரியமா?

10) நாங்கள் சூத்திரர்கள் தான், வைப்பாட்டி மக்கள்தான் - அதைக் கேட்க நீ யார் என்று அண்ணாமலைகள் கேட்கிறார்களா?

11) அண்ணா திமுக என்று பெயர் வைத்துள்ள கட்சியும் அந்தக் கூட்டத்தோடு சேர்ந்து கோவிந்தா போடுவது எவ்வளவுக் கேவலம்!

12) அண்ணா எழுதிய 'ஆரிய மாயை' நூலை அண்ணா திமுகவில் உள்ள ஒருவர் கூடப் படித்ததில்லையா?

13) கம்ப இராமாயணத்தை சேக்கிழார் எழுதினார் என்று சொன்ன 'அதிமேதாவி' தான் அக்கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளரா?

14) 'ஆரிய மாயை'யில்  நாம் இந்து இல்லை என்பதற்கு அடுக்கடுக்கான ஆதாரங்களை எடுத்துக் காட்டியுள்ளாரே - இதோ ஓரிரண்டு எடுத்துக்காட்டு:

"ஆள் நடமாட ஓர் உலகம். ஆவி உலவ மற்றோர் உலகம். இந்திரன் இருக்க ஓர் உலகம். நான் தங்க ஓர் உலகம், மேலே ஏழு, கீழே ஏழு, எனப் பதினான்கு உலகங்களாம். அதல, விதல, சுதல, தராதல, இராசாதல, மகாதல, பாதாளம் என கீழ் உலகம் ஏழாம்! பூலோக, புவலோக, சுவலோக, சனலோக, தபோலோக, மகாலோக,  சத்தியலோகம் என மேல் உலகம் ஏழாம்! இத்தனை உலகங்கள் இந்துவுக்கு உண்டு ஏட்டிலே.  நமக்கு இவை வேண்டாம்; நாமிருக்கும் நாடு நமக்கு இருந்தால் போதும்; நன்செயும், புன்செயும் சாலையும், சோலையும், வாவியும், நதியும் மக்களும் சுபீட்சமும் இருக்கட்டும். காமதேனுவும், கற்பகவிருட்சமும், ரம்பையும், ஊர்வசியும் இருக்கிற உலகத்திலே, டாக்டர் வரதராஜுலுவே உலவட்டும்! முடிசூட்டிக் கொள்ளட்டும்!  நாமிருக்கும் நாட்டிலே நமது உழைப்பு நமக்குப் பயன்பட்டு, நாலு ஜாதியிலே நாம்  கீழ் ஜாதி என்ற கொடுமை இன்றி "நாமார்க்குங் குடியல்லோம்" என்று நாம் வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்தினால் தான், நாம் நம்மை இந்து அல்ல என்று கூறிக்கொள்கிறோம்.

நாம் யாருக்கும் மேல் அல்ல! யாரும் நமக்கு மேலோர் அல்ல! நாம் ஆள ஆட்கள் வேண்டாம்! நம்மை ஆளவும் அய்யர்மார் வேண்டாம்! நம்மிடையே தரகர் கூடாது. தர்ப்பை ஆகாது, சேரியும் கூடாது, அக்கிரகாரமும் ஆகாது, யோக - யாகப் புரட்டுகள், மனிதர் யாவரும் சரிநிகர் சமானமாக வாழ்வோம் என்று கூறுபவர்  எப்படித் தம்மை "இந்து" என்று கூறிக்கொள்ள முடியும்? மூட மதிக்காரர், கொடுமைக்காரர், அடிமை, சூத்திரன் என்று கூறிக்கொள்ள எப்படித்தான் மனம் இடந்தரும்? எப்படித்தான் துணியும்? "இந்து மதம்" என்பதிலே உள்ள கடவுள் முறை, சமுதாய முறை, மதக்கதைமுறை, மக்கள் வாழ்க்கை முறை ஆகியவைகளை அலசிப் பார்த்தபிறகு யாருக்குத்தான் தன்னை ஓர் "இந்து" என்று கூறிக்கொள்ள மனம் இடந்தரும்? பாம்பை எடுத்துப் படுக்கையில் விட்டுக்கொள்வாரா? விஷத்தை எடுத்து உணவில் சேர்ப்பாரா? வீதிக்குப்பையை வீட்டுக்குள் கொண்டுபோய்ச் சேர்ப்பாரா? மதிதுலங்கும் விஷயங்களைவிட்டு மதிகெடுக்கும் கற்பனைகளைக் கட்டி அழுவாரா? மீள மார்க்கம் தேடுவதைவிட்டு, மாளவழி தேடிக்கொள்வாரா? விடுதலைக்கு வழி பிறந்த பின்னர், அடிமை முறிச்சீட்டில் கையொப்ப மிடுவரா? கண் தெரியும்போது குழியில் வீழ்வாரா? தாம் திராவிடர் என்று தெரிந்த பிறகு, திராவிடர் தன்னிகரற்று வாழ்ந்த இனம் என்பது தெரிந்த பிறகு, தம்மை இழிவு செய்து கொடுமைக்கு ஆளாக்கும் 'இந்து மார்க்கத்தில்,' போய்ச் சேர இசைவாரா? வீரத்திராவிடர் என்ற ஓர் உணர்ச்சி வீறிட்டு எழப்பெற்றோர், இனி ஈனமாய் நடத்தும் இந்து மார்க்கத்தை ஏறெடுத்தும் பாரார்! அதன் இடுக்கில் போய்ச் சேரார்! இழிவைத் தேடார்!!"

(அண்ணா தீட்டிய 'ஆரிய மாயை' நூலின் பக்கம் 31, 32)


அண்ணா பெயரில் கட்சியை வைத்திருக்கும் ஆசாமிகள் கட்சியிலிருந்து அண்ணா பெயரை நீக்கப் போகிறார்களா? கொடியிலிருந்து அண்ணாவின் உருவத்தைக் கிழித்து எறியப் போகிறார்களா?

15) ஏதாவது பிரச்சினை கிடைக்காதா? அதை வைத்து அரசியல் நடத்தி விளம்பரம் பெறலாம் என்று அண்ணாமலைகள் நப்பாசை கொள்ளலாம்.

பார்ப்பனர்களின் கைதட்டலைப் பெறலாம்.

முருகனுக்கு லாட்டரி அடித்ததுபோல பிஜேபி ஆட்சியில் ஏதாவது பதவி பெறலாம் என்ற எண்ணத்தில்  அன்றாடம் ஏடுகளில் பெயர் வருவதற்கு ஆலாபரணம் செய்யலாம்.

இது தந்தை பெரியாரின் திராவிட மண் - உங்கள் 'பாச்சா' பலிக்காது 1971 தேர்தலை விடவா? திராவிடர் கழகம் நடத்திய சேலம் மாநாட்டை மய்யப்படுத்தி, ராமனைத் தூக்கிக் கொண்டு பட்டிதொட்டி எல்லாம் ராஜாஜி தலைமையில் பிரச்சாரம் செய்தார்களே - என்னாச்சு?

இதுவரை எந்தக் கட்சியும் பெறாத 184 இடங்களில் அல்லவா தி.மு.க. வெற்றி பெற்று முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் முதலமைச்சர் ஆனார். 

முருகன் வேல்யாத்திரை நடத்தினாரே, கடந்த தேர்தலில் கிருஷ்ணனைக் கையிருப்பாகக் கொண்டு அலைந்தது எல்லாம் என்னாச்சு? 

"ஆன்மீகத்தில் முழுகிய தமிழ் மக்கள் தொடர்ந்து திராவிட கழகங்களுக்கு வாக்களிப்பது அவர்களது தனித்துவம்" என்று 'துக்ளக்'கில் குருமூர்த்தி (19.2.2022 பக்கம் 29) எழுதியதை நினைவூட்டுகிறோம். பார்ப்பன ஏடுகளே, அனுமார் அண்ணாமலைகளே ரொம்பவும்தான் துள்ளாதீர்கள்!

No comments:

Post a Comment