ஒற்றைப் பத்தி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 22, 2022

ஒற்றைப் பத்தி

தர்மதீர்த்தர்

‘‘இந்து மதக் கொடுங்கோன்மையின் வரலாறு'' எனும் நூல் தவத்திரு தர்மதீர்த்த அடிகளார் அவர்களால் படைக்கப்பட்டது. இவரது இயற்பெயர் பரமேஸ்வரமேனன்.

கேரளத்தில் நாராயண குருவை சந்தித்த பிறகு சுவாமி தர்ம தீர்த்தர் என்ற பெயரோடு துறவியானவர்.

முதலில் மலையாளத்தில் எழுதப்பட்டது. மலையாளத்தில் இந்நூலின் பெயர் ‘‘றைந்தவ துஷ் பிரபுத்துவ சரித்திரம்.''

இந்நூலைத் தமிழில் மொழி பெயர்த்தவர் வெ.கோபாலகிருஷ்ணன். ஆங்கிலப் பதிப்பு ‘‘History of Hindu Imperialism.''

இந்த நூல்பற்றி அண்ணல் அம்பேத்கர் இவ்வாறு கூறுகிறார்:

‘‘நான் நீண்ட காலமாக வலியுறுத்திவரும் கருத்துகளே இந்த நூலில் கூறப்பட்டுள்ளன. நான் எழுதிவரும் நூலில் குறிப்பிட்டிருக்கும் பல கருத்துகளை இந்த நூலிலும் காண்கிறேன். இந்த நூலை நான் மிகவும் விரும்பி வரவேற்கிறேன்'' என்று அண்ணல் அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார். முதற்பதிப்பு 2003 இல் வெளிவந்துள்ளது.

இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கியவர் ஜஸ்டிஸ் திரு.ஏ.வரதராசன் (1992) (மேனாள் உச்சநீதிமன்ற நீதிபதி).

அதில் ஒன்றை முக்கியமாகக் குறிப்பிட்டுள்ளார்.

‘‘இந்துக்களைப் பொறுத்தவரையில் பல நூற்றாண்டு காலமாக ஆதிக்க சக்திகள் முழுதும் ஒரு சிறு குழுவின் பிடியில் இருந்தது. பெரும்பான்மை இந்திய மக்களின் நலனுக்கு எதிராக அன்றிலிருந்து இன்றுவரை இயங்கிவரும் இச்சிறு குழுவினர் தங்கள் சுயநலனுக்காகப் பெரும்பான்மை இந்துக்களைப் பயன்படுத்திக் கொண்டு வருகின்றனர். இந்துக்களின் தேசிய சொத்தாகக் கருதப்படும் புனித இலக்கியங்கள், சமூக அமைப்பு, மதம் சார்ந்த நிறுவனங்கள், அரசமைப்புப் போன்றவை அனைத்தும் உருவாக்கப்பட்டு, வளர்க்கப்பட்டு, பயன்பாட்டுக்கு உட்படுத்தப்பட்ட காரணம் ஒரு சிறு குழுவினர் இந்திய மக்களை அறியாமையிலும், அடிமைத்தனத்திலும் உழலச் செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டன. இன்றுவரை அதே நிலைதான் தொடர்கிறது'' என்று ஜஸ்டிஸ் திரு.ஏ.வரதராசன் அவர்கள் ஆழமான அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளார்.

(அந்தச் சிறுகுழு பார்ப்பனர்கள்தான் என்பதை சொல்லாமல் சொல்லுகிறார் நீதிபதி)

இந்நூலில் ஓர் எடுத்துக்காட்டு: ‘‘போரின்போது கவர்ந்து செல்லப்பட்ட சீதை தலைநகரில் இராவணனின் விருப்பத்திற்குக் கீழ்ப்படியாமல், ஓர் அரக்கியால் பராமரிக்கப்பட்டவளாய், யாருடைய தொல்லைகளும் இன்றி, தனியாக ஒரு பர்ண சாலையில் வசிக்கும் காட்சியைக் காணும்போது, இராவணனின் பரந்த மனப்பான்மையும், போர்க் களப் பண்பாடும் வெளிப்படுகிறது. ஒரு ஆரிய மன்னன் திரவுபதி என்ற அரசியைப் பிடித்து இழுத்துக்கொண்ட முறையுடன் ஒப்பிட்டால், ஆரியர்களுடைய பண்பாடு எவ்வளவு கீழ்த்தரமானது என்றுதான் நினைக்க வேண்டியிருக்கிறது'' என்று இந்நூலில் குறிப்பிடப்பட்டு இருப்பது - ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்பதற்கு ஒப்பானது.

 -  மயிலாடன்


No comments:

Post a Comment