அனைவரும் வெல்ல வேண்டிய மூன்று எதிரிகள் (2) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 22, 2022

அனைவரும் வெல்ல வேண்டிய மூன்று எதிரிகள் (2)

 அனைவரும் வெல்ல வேண்டிய மூன்று எதிரிகள் (2)

'பொறாமை' என்பதற்கு உருவம் கிடையாது; அது ஒரு வகையான நோய். இந்த நோயின் கிருமிகள் மனநல மருத்துவர்களின் ஆய்வில்தான் - அதுகூட 'பளிச்' சென்று தெரியாத வகையில் புலப்படக் கூடும்!

மனிதர்களின் வாழ்க்கையில் சீர்கேடுகள் மலிவதற்கும், செயற்கையான துன்பங்களும், கவலைகளும் மின்னலைப் போல், இடியைப் போல் தாக்குவதுபோலும் இந்த பொறாமை உணர்வு!

இந்த பொறாமை நோய் - மற்ற நோய்களைப் போலவே அனைவருக்கும் அனைத்து இடங் களிலும், நேரங்களிலும் உருவாகக் கூடும்!

'ஒரு மனதாயின' கணவன் - மனைவிக்கும் இடையில்கூட இந்த நோய் புகுந்து இணைப்பு களைத் துண்டிக்கும் அளவுக்குத் தொல்லை தரக் கூடும்.

எடுத்துக்காட்டாக, எத்தனையோ குடும்பங் களில் படித்த மனைவிமார்கள் - அவர்களை - பல ஆண்கள், துணைவியராக, வாழ்விணையராகவே கருதிடாமல் நடத்தும் ஆதிக்க மனப்பான்மை யாளர்களாக இருப்பதால், எஜமான் - அடிமை என்பதைப் பிரதிபலிக்கும் 'கணவன் - மனைவி' என்ற சொற்களையே இங்கு பயன்படுத்துகிறேன்.

அவர்கள் வேலை பார்க்கும் இடத்தில் கிடைக்கும் கூடுதல் ஊதியம், கூடுதல் பெருமை  - புகழ் கண்டு பூரிக்க வேண்டிய கணவர்களேகூட, அவர்களை அறியாமல் தன்னைவிட தன் மனைவிக்கு இவ்வளவு புகழா என்று எண்ணிப் புழுங்கிடுவதும், நாளடைவில் அந்தப் புழுக்கம் பல மனப்புண்களையும், அந்தப் புண்களிலிருந்து சில பொறாமைப் புழுக்கள் முழு வடிவம் எடுத்து 'ஆட்கொல்லி' ஆவதும் - வாழ்வு வெறும் கானல் நீர் வேட்டையாவதும்  - நம் கண்முன் கண்ணாலே காணும் காட்சிகள்தானே!

மகிழ்ந்து கொண்டாட வேண்டியவர்களே அதற்கு நேர் எதிரான மன நிலையைப் பெறுவதுடன், தேவையற்ற துன்பத்தைத் தாங்களே வரவழைத்து அல்லல் உறுவதும் கண் முன்னே காணும் அன்றாடக் காட்சிகள் - பல குடும்பங்களிலிருந்து...

"என்னைவிட நீ பெரிய ஆளா?"

"என்னைவிட அதிகம் சம்பாதிக்கிறாயா"

"என்னை அலட்சியப்படுத்திப் பார்க்க வைக்கிறதா?" என்று தாங்களே கற்பித்துக் கொண்ட ஓர் இல்லாத நோயினால், பொல்லாத துன்பத்தை இலை போட்டு அழைக்கிறார்கள்!

என்னே வேதனை வெட்கம்!

தன் முனைப்பு பொறாமையாகவும் மாறிவெடிக்கிறது  - பொறாமையோடு, தனக்கு வராத பெருமை வேறு யாருக்கோ வருவதா என்று ஒரு தவறான எதிர்பார்ப்பு - தப்புக் கணக்கு!

இவை இரண்டையும் சிறிய கோடுகளாக்கி விடும் மிகப் பெரிய மற்றொரு அவலம் - தனி மனிதர்களின் புகழ் வேட்டை!

எப்போதும் எதிலும் தாங்களே 'முன்னால் என்ற பெயர் நாளும் தவறாமல் செய்தி ஏடுகளில் வர வேண்டும் என்பதற்காக கூலி எழுத்தாளர்களை வைத்து அறிக்கை சாம்ராஜ்யம் நடத்தும் அரசியல்வாதிகள்  - கட்சித் தலைவர்கள் பலர் உண்டு!

தற்கொலை செய்ய முயற்சித்து தோற்ற ஒருவர் மீது கிரிமினல் சட்டப்படி வழக்கு விசாரணை வந்தது!

"'என் பெயர் பேப்பரில் வர வேண்டும்' என்ற ஆசையினால் இப்படிச் செய்தேன்" என்று அந்தநபர் நீதிபதிமுன் சொன்னார்!

 இந்தியன் பீன்ல்கோட் (I.P.C.) - இ.பி.கோ. என்ற குற்றவியல் சட்டத்திலேயே இந்த தற்கொலைக்கான தண்டனைபற்றிய ஒரு பிரிவு - ஒரு விசித்திர சட்டப் பிரிவு ஆகும்! எப்படி?

ஒரு குற்றத்தினை செய்ய முயற்சித்தால் சட் டப்படி தண்டனை,  முயற்சியில் வெற்றி - அதாவது தற்கொலை முயற்சி நிறைவேறி விட்டால், எந்தத் தண்டனையும் கிடையாது. காரணம் வெளிப்படை - இறந்தவருக்கு எப்படி தண்டனையைக்  கொடுக்க முடியும்!

வேடிக்கையான சட்டப்பிரிவு! 

ஊடக வெளிச்சம் என்பது தாங்கள் பெறும் புகழ் விளம்பரத்திற்கு முக்கியம் என்பதால் சிலர் வலிய சென்று ஊடகவியலாளர்களின் நட்புற வுக்காக எதையும் செய்வார்கள்!

சட்டமன்ற - நாடாளுமன்றங்களில் தலைவர் களைப் புகழ வார்த்தைக் கோர்வைகளை எழுதிக் கொடுத்து அதை ஒரு  வருவாய்க் களமாகவே ஆக்கிய வேடிக்கையான 'வருவாய்த்துறை'க்கும் கூட நம் நாட்டில் பஞ்சமில்லை. புகழ் வரலாம்; வரட்டும். அது தானே சுயமாக வந்து மூடிய உங்கள் வீட்டுக் கதவைத் தட்ட வேண்டும்.

(மேலும் வரும்) 


No comments:

Post a Comment