கோயபல்சு குருமூர்த்தியே, பதில் சொல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 27, 2022

கோயபல்சு குருமூர்த்தியே, பதில் சொல்!

மின்சாரம்


புராணம் என்றாலே புளுகு மூட்டைதான். புராணங்களுக்கு வக்காலத்து வாங்கும் குருமூர்த்திகள் அதைவிடப் புளுகுணியாகத்தானே இருப்பார்கள்!

பார்வதி தேவியின் அழுக்கில் பிறந்தவன் தான் விநாயகன் என்று அவர்கள் எழுதிய புராணத்தை ஆதாரம் காட்டியே எழுதுகிறோம்.

அதற்குப் பதில் சொல்ல முடியவில்லை - அல்லது உண்மையை ஒப்புக் கொள்ளும் அறிவு நாணயம் இல்லை என்கிறபோது, இவர்களாகவே இன்னொரு பொய் மூட்டையை அவிழ்த்துக் கொட்டுவார்கள்.

இதோ ஒரு புளுகுணித்தனம்:

"மனு நீதியில் (சனா தனத்தில்) பல ஆபாசங்களும் பார்வதி தன் அழுக்கைத் திரட்டியதே விநாயகர் என்றும் - கம்யூனிஸ்டுகளும் ஹிந்து எதிர்ப்பாளர்களும் கூறுவதற்கு என்னால் பதில் கூற முடியவில்லை. நீங்கள் உதவ முடியுமா?" என்று கேட்டிருக்கிறார் திண்டுக்கல்லைச் சேர்ந்த வாசகர் ஈ. இளங்கோவன். முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.  சனாதனம் என்பது (சோ எழுதியது போல) ஒரு மஹா சமுத்திரம். அதில் சிறு துளிகளே இந்த நூல்கள், கதைகள். ஹிந்து மதம் பற்றிய கேவலமான ஏச்சுக்கு எப்படிப் பதிலளிப்பது என்று பார்ப்போம்.

"ஹிந்து மதத்தைக் கேவலப்படுத்த வேண்டும் என்று துவேஷ பாவத்தில் கேட்கப்படும் இந்தக் கேள்விக்கு பதிலளிப்பது சுலபம்." 

"பார்வதி தன்மீது பூசிய மஞ்சளை - அழுக்கை அல்ல - திரட்டி விநாயகரை உண்டு பண்ணினார் என்பது நம் அய்தீகம் - இதற்குப் பதில் நாம் எல்லோருமே கேவலமான அழுக்கில் பிறந்தவர்கள்தான், விநாயகர் அந்தக் கேவலமான அழுக்கில் பிறக்கவில்லை என்பதே, அவதாரங்கள் எல்லாம் மனிதர்களாக, நம்மை போலப் பிறந்தவர்கள் தான்! ஆனால், விநாயகர் அப்படிப் பிறக்கவில்லை என்று திருவாளர் கோணிப் புளுகர் குருமூர்த்தி எழுதித் தள்ளியுள்ளார் ('துக்ளக்' 28.9.2022 பக்கம் 8).

இது உண்மையா? விநாயகர் அழுக்கில்தான் பிறந்தார் என்று  Motilal Banarsidass Publishers, Delhi  வெளியிட்டுள்ள The Skanda Purana எனும் நூலின் பக்கம் 277 என்ன கூறுகிறது?

"In the meantime, the goddess cleansed her person and applied perfumes and unguents over her body. With the dirt of the cleansing therefrom she created a human body with the elephantine face"

இந்த நிலையில் , பார்வதி வாசனைத் திரவியங்களை பூசிக்கொண்டு இருந்தார். பின்னர்  குளிக்கச்செல்லும் போது தன் மேல் இருந்த அழுக்குகளைத் திரட்டி மனித உடலை உருவாக்கினார்.

இவ்வளவு வெளிப்படையாக பார்வதி தேவி தன் உடல் அழுக்கிலிருந்து (ஞிவீக்ஷீt) விநாயகனை உருவாக்கினாள் என்று இருக்கும் பொழுது - அதை மாற்றி தன் உடல்மீது பூசிய மஞ்சளை - அழுக்கை அல்ல - திரட்டி விநாயகரை உண்டு பண்ணினார் என்று எழுதுகிறார் - ஆடிட்டராக இருந்து எடிட்டரான குருமூர்த்தி என்றால், இவர்களின் மூளையில் படிந்த அழுக்கை என்னவென்று சொல்லுவது!

இன்னொரு கேள்வியும் உண்டு - அழுக்காகட்டும், மஞ்சளாகவே இருக்கட்டும் - இவற்றிலிருந்து பிள்ளை பிறக்குமா? 'கேட்பவன் கேனையனாக இருந்தால் எருமை மாடு ஏரோப் பிளான் ஓட்டும்' என்பான்.

விநாயகர் அழுக்கில் பிறந்தார் என்பது கேள்வி கேட்டவருக்கே தெரிந்து இருக்கிறது. பதில் சொல்லும் குருமூர்த்தியோ - கேவலமான அழுக்கில் பிறந்தவர் அல்ல விநாயகர் என்று எழுதுகிறார்.

விநாயகர் அழுக்கில்தான் பிறந்தார் என்று அவர்களின் ஸ்கந்தபுராணத்திலிருந்தே நாம் எடுத்துக்காட்டிய நிலையில், விநாயகன் பிறப்பு கேவலமானது என்று அவர்களே ஒப்புக் கொண்டு விட்டார்களே!

இதைப் போன்ற புளுகு மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டும் போது கடைசியில் எப்படி முடிப்பார்கள் தெரியுமா?

'என்பது அய்தீகம்' என்றுதான் முடிப்பார்கள்.

அய்தீகத்தின் யோக்கியதையும் இதன் மூலம் அம்பலமாகவில்லையா?

குருமூர்த்திகளே, குருமூர்த்திகளே! ஒன்றைக் கொடுத்து ஒன்பதை வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டாம்!

No comments:

Post a Comment