இணையதளம் மூலம் பட்டா மாறுதல் - புதிய வசதி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 24, 2022

இணையதளம் மூலம் பட்டா மாறுதல் - புதிய வசதி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை,செப்.24- பட்டா மாறுதலுக்கு இணையவழி மூலமாக விண்ணப்பிக்கும் வசதியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

நில உரிமையாளர்கள் பட்டா மாறுதலுக் கான விண்ணப்பங்களை பொது சேவை மய்யங்கள் மற்றும் சார்பதிவாளர் அலுவலகம் வாயிலாக விண்ணப்பித்து, அவை இணைய வழியில் பரிசீலிக்கப்பட்டு, பட்டாமாறுதல் ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (23ஆம் தேதி), வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் ‘எங்கிருந்தும் எந்நேரத்திலும்’ என்ற இணையவழி சேவையின் மூலமாக பொதுமக்கள் எங்கிருந்தும் பட்டா மாறுத லுக்கு விண்ணப்பிக்கும் வசதியை தொடங்கி வைத்தார்.மேலும் பொதுமக்களின் வசதிக் காக எந்நேரத்திலும் எவ்விடத்திலிருந்தும் பட்டா மாறுதல் கோரி  https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணைய வழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதியை தொடங்கி வைத்தார்.

இணைய வழியில் விண்ணப்பிப்பது எப்படி?

https://tamilnilam.tn.gov.in/citizen/register.html என்ற இணையதளத்தில் பெயர், இமெயில், கைப்பேசி எண் ஆகிய வற்றை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இதில் விண்ணப்பிக்க கிரையப் பத்திரம், செட்டில்மென்ட் பத்திரம், பாகப்பிரிவினை பத்திரம், தானப் பத்திரம், பரிவர்தனை பத்திரம், அக்குவிடுதலைப் பத்திரம் ஆகிய ஆவணங்கள் தேவை. தேவையான ஆவ ணங்களுடன் இணையதளத்தில் விண் ணப்பங்களை சமர்பிக்கலாம்.

நில உட்பிரிவுக்கான கட்டணம் மற்றும் செயலாக்க கட்டணங்களை இணையவழியிலேயே செலுத்தலாம்.

பட்டா மாறுதல் அங்கீகரிக்கப்பட்ட பின்னர், பட்டா உத்தரவின் நகல், பட்டா, புலப்படச்சுவடி ஆகியவற்றை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment