விழுப்புரம்,செப்.10- விழுப்புரம் அருகே கக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் (33). கூலித் தொழிலாளியான இவர் கடந்த 7-ஆம் தேதி விழுப்புரத்தில் இருந்து இரு சக்கர வாகனத்தில் கக்கனூர் வந்த போது எதிரே வந்த லாரி மோதியதில் சுயநினைவு இழந்தார். அவரது மூளை செயலிழந்து விட்டதாக முண் டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து சந்தோசின் உடல் உறுப்புகளை கொடை அளிக்க அவரது மனைவி புவனேஸ்வரி, தந்தை மனோகரன் உள்ளிட்ட குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர்.
இதன் பேரில் நேற்று (9.9.2022) அதிகாலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் குந்தவி தேவி தலைமையிலான மருத்துவக் குழுவினர் அறுவை சிகிச்சை மூலம் சந்தோசின் இதயம், கல்லீரல், 2 சிறுநீரகம், நுரையீரல், 2 கருவிழிகள் ஆகிய உறுப்புகளை அகற்றினர். அந்த உறுப்புக்கள் சென்னை, திருச்சி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, 8 பேருக்கு பொருத்தப்பட்டது.
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் முதன்முறையாக மருத்துவக் குழுவினரால் உடல் உறுப்பு கொடை அறுவை சிகிச்சை செய்யப் பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் மோகன், புவனேஸ்வரியிடம் உடல் உறுப்பு கொடை சான்றிதழை வழங்கினார்.
அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவக் கல்லூரி முதல்வர் குந்தவிதேவி, மருத்துவக் கண்காணிப்பாளர் செந்தில்குமார், ஆர்எம் ஓ வெங்கடேசன், மருத்துவர்கள் தீப்தி, அருண் சுந்தர், பாண்டியன்,லட்சுமி நாராயணன், சுப்பிரமணியன், தரணேந்திரன், தமிழ் குமரன் ஆகியோரை ஆட்சியர் பாராட்டினார்.
உயிரிழந்த சந்தோசுக்கு கிரிஷிகா என்ற இரண்டரை வயது பெண் குழந்தை உள்ளது. தனது குழந்தைக்கும், குடும்பத்திற்கும் தமிழ்நாடு அரசு உதவிட வேண்டும் என சந்தோசின் மனைவி புவனேஸ்வரி கோரிக்கை விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment