புதுடில்லி,செப்.24- இந்தியாவின் அரிசி உற்பத்தி நடப்பு ஆண்டு காரீப் பருவத்தில் 6 சதவீதம் குறைந்து 10.5 கோடி டன்னாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு காரீப் பருவத்தில் 11.76 கோடி டன் அரிசி உற்பத்தி செய்யப்பட்டது,
அரிசி உற்பத்தி செய்யும் மேற்குவங்கம், பிகார், உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் மழைப்பொழிவு குறைந்துள்ளதால் இந்தியாவில் அரிசி உற்பத்தி பாதிக்கப்பட் டுள்ளது. இதனால், அரிசி விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் அரிசி உற்பத்தியில் காரீப் பருவம் 85 சதவீதம் பங்கு வகிக்கிறது. 2021 ஜூலை முதல் 2022 ஜூன் வரையில் 13 கோடி டன் அளவில் அரிசி உற்பத்தி செய்யப் பட்டிருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இது அய்ந்து ஆண்டு களின் சராசரி உற்பத்தியைவிட 1.3 கோடி டன் அதிகமாகும்.
அரிசி உற்பத்தியில் உலக அளவில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. அரிசி உற்பத்தி குறையும் என்று கணக்கிடப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டு தேவை பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கில் ஒன்றிய அரசு அரிசி ஏற்றுமதிக்கு 20 சதவீத வரி விதித்துள்ளது.
இதுபோல கோதுமை உற்பத்தி பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த மே மாதம் கோதுமை ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசு தடை விதித்தது. அரிசி மற்றும் கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா விதித்த கட்டுப்பாடுகளால் மற்ற நாடுகள் பாதிப்பை எதிர்கொள்வதாக குற்றம்சாட்டப் பட்டது. இந்நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பு கூட்டத்தில், கோதுமை மற்றும் அரிசி ஏற்றுமதி மீதான தங்களது கட்டுப்பாடு சரியானதுதான் என்று இந்தியா வாதிட்டது. உள்நாட்டில் உணவுத் தேவையை உறுதி செய்யும் நோக்கத்தில் இந்த முடிவை எடுத்ததாக இந்தியா தெரிவித்தது.
No comments:
Post a Comment