'விடுதலை' நாளேடு அதிகம் லட்சக்கணக்கில் பரவாத ஏடாக இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் லட்சியக்கணக்கில் இதில் வரும் ஒரு பெட்டிச் செய்தி. மாநில, ஒன்றிய அரசு களின் கவனத்தை ஈர்த்து, அந்த செய்திகளுக்கான பரிகாரத்தைத் தேடித் தந்த மகத்தான சக்தி படைத்த ஏடாகவே திகழ்ந்தது - அன்றும் இன்றும்!
'இது உண்மையா?' என்ற தலைப்பில் உண்மைகளை உலவ விட்டு, நம் சமுதாயத்திற்கு வரவிருந்த ஆபத்துக்களை தடுத்து நிறுத்திய ஏடு 'விடுதலை' நாளேடு!
அதேபோல் மனித உரிமைப் பறிப்புகள், ஜன நாயக நாட்டில் தலைவிரித்தாடிய யதேச்சதிகார அரசியல் நடவடிக்கைகளை கண்டிக்க சற்றும் தயங்காத ஏடு 'விடுதலை'!
ஆந்திர பிரகாசம் காரு (ஆந்திரா பிரியாத நிலையில் சென்னை மாகாணமாக இருந்து, அதன் முதல் அமைச்சராக இருந்தார்). இவர் ஓர் ஆந்திர பார்ப்பனர்!
அவரது ஆட்சியில் (1948இல்) கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டபோது, சேலம் சிறைக்குள் துப்பாக்கிச் சூடு நடத்தி கோரத் தாண்டவம் நடைபெற்றபோது, 'விடுதலை'யின் கண்டனத் தலையங்கங்கள், தந்தை பெரியாரின் அறிக்கை, மேனாள் ஆசிரியர் குருசாமியின் கனல் பறக்கும் தலையங்கம் - இவைகளைக் கண்டு அன்றைய மாநில அரசு குலை நடுங்கியது!
அந்தக் கால கட்டத்தில் 'விடுதலை'யின் சிறப்பான பங்கு, பணி, துணிச்சல் மிக்க கண்டனம், கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களிடம் கொள்கைப் பாசம் பொங்கிய அரவணைப்புகள் - இவைபற்றிப் பாராட்டி தோழர் ஏ.கே. கோபாலன், மராட்டிய கம்யூனிஸ்ட் தலைவர் எஸ்.ஏ. டாங்கே போன்ற வர்கள் தெரிவித்தப் பாராட்டும் நன்றியும் 'விடுதலை'க்கு மழையாய்ப் பொழிந்தன!
கருத்துரிமை காத்தல் மட்டுமல்ல - எழுத்துரி மைக்காக எவர் அவர்தம் எழுதுகோலைப் பறித்து, எழுத்துச் சுதந்திரத்திற்கு எதிராக எந்த அரசு அடக்குமுறை அம்புகளை ஏடுகள்மீது ஏவினா லும் அதனை எதிர்த்து, பாதிக்கப்பட்ட பத்திரி கையாளர்கள் பக்கம் நின்று வாதாடத் தவறாத ஏடு 'விடுதலை' என்பதை எவரே மறுக்க முடியும்?
'ஆனந்த விகடனுக்கும்' 'விடுதலைக்கும் கருத்துப் போர் பல முறை நிகழ்ந்ததுண்டு. அது 'அக்கிரகார ஏடு' என்று வர்ணிக்கப்பட்டதுண்டு 'விடுதலை'யில் - அந்த ஏட்டின் ஆசிரியர் திரு. எஸ்.எஸ். வாசன் அவர்களுக்குப் பிறகு எஸ். பாலசுப்ரமணியன் - வாசனது மகன் பொறுப்பேற்று நடத்தி வந்த நிலையில், எம்.ஜி.ஆர். ஆட்சியின் போது தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவராக இருந்த, திரு. பி.எச். பாண்டியன் சட்டமன்றத்தின் அதிகாரம் வானளாவிய அதிகாரம் என்பது போன்று கூறி, விகடனில் வந்த ஒரு கார்ட்டூனிற்காக, அதன் ஆசிரியர் பாலசுப்ரமணியன் அவர்களைக் கைது செய்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார் அன்றைய எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுக ஆட்சியால்!
அதனைக் கண்டித்து 'விடுதலை'யில் எனது அறிக்கை பல பத்திரிகையாளர்க்கு வியப்பை ஏற்படுத்தியது!
சில நண்பர்கள்கூட நம்மை தொலைபேசியில் அழைத்து ஒரு பார்ப்பனருக்காக இப்படி நீங்கள் வக்காலத்து வாங்கி எழுதலாமா என்றுகூட எம்மைக் கேட்டதுண்டு.
"எழுத்துரிமை, கருத்துரிமை பறிப்பு என்னும் போது அது முக்கியமானது என்று கருதுவது சகபத்திரிகையாளர்களின் கடமை. இதில் பார்ப் பனர் - பார்ப்பனரல்லாதார் என்ற பிரச்சினைக்கே இடமில்லை" என்று பதில் கூறினோம்.
அவர் சில நாட்களில் விடுதலையாகி வெளியே வந்தவுடன், முதல் ஆளாக அவரது 'ஆனந்த விகடன்' அலுவலகம் அண்ணாசாலையில் இருந்ததை விசாரித்துக் கொண்டு அங்கேயே நேரில் சென்று சால்வை போர்த்தி பாராட்டுக் கூறினோம். என்னுடன் சுபா சுந்தரம், ஒளிப்பட நிபுணரும் - நம் தோழருமான அவர்!
'விகடன்' ஆசிரியர் நண்பர் எஸ். பாலசுப்ர மணியன் நெகிழ்ந்துபோய் எனது கைகளைப் பற்றிக் கொண்டு உணர்ச்சிப் பூர்வமாக 'நன்றி' 'நன்றி' என்று கூறினார்.
அடுத்த வாரம் 'படப்பை'யில் இருந்த அவரது தனி அவுட் ஹவுசிற்கு ஒரு நாள் வந்து தனது விருந்தினராகத் தங்கி சில மணித்துளிகளைச் செலவழிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்!
முதல் அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு இது எதிர்பாராத அதிர்ச்சியைத் தந்ததாக அவரது அமைச்சரவை சகாக்கள் பின்னர் என்னிடம் தனியே கூறினர்!
அதுபோலவே அருமை நண்பர் 'முரசொலி செல்வம்' - 'முரசொலி' ஆசிரியருக்கு 'முரசொலி' கட்டுரைக்காக சட்டப் பேரவையில் கூண்டில் இருத்தி விசாரிக்க அழைக்கப்பட்டபோது 'விடுதலை' கடுமையான கண்டனம் வெளியிட விரைந்தது!
இந்து ஏட்டுக்கு எதிராக உரிமைக் குழு பரிந் துரைத்த போதும் முதல் அமைச்சர் ஜெய லலிதாவின் நடவடிக்கையைக் கண்டித்து எழுதியது 'விடுதலை' (8.11.2003) தினமணி ஆசிரியர் ஆ.எம்.டி. சம்பந்தம் உள்ளிட்ட பத்திரிகையாளர்கள் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டதைக் கண்டித்து எழுதியது விடுதலையே!
நம் கருத்துக்கு எதிராக ஆங்கில ஏடுகளிலும், பிறகு 'துக்ளக்' போன்ற ஏடுகளிலும் எழுதிய பத்திரிகையாளர் பகவான் சிங் அவர்கள் (எம்.ஜி.ஆர். ஆட்சியில்) ஈழம் சென்று நேரில் கண்ட நிகழ்வுகளுக்கு அவரை வரவேற்றுப் பாராட்டி விடுதலை நாளேடு தேனீர் விருந்து அளித்தது!
கருத்துரிமை, எழுத்துரிமை, உரிமை பறித்தல் என்ற கொடுமை எங்கு நடந்து - யாருக்கு நடந்தாலும் "ஜாதி, மதம், இனம், மொழி" பாராமல் அதனைக் கண்டித்து, பாதிக்கப்பட்டோருடன் நிற்பதே இன்றும் 'விடுதலை'யின் வேகப் பயணமாக இருக்கிறது!
வெறும் பேச்சோ, எழுத்தோ அல்ல, செயல் மூலமும் விடுதலை அதனை நிரூபித்து வருகிறது - இனியும் வரும்.
No comments:
Post a Comment