புதுடில்லி,செப்.20- மரண தண்டனை வழங்கக்கூடிய வழக்குகளில், குற்றவாளிகளுக்கு எந்தெந்த சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு தண்டனையை குறைக்க முடியும் என்பது தொடர்பான நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என்று 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் அமர்வுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் பரிந்துரை செய்துள்ளார்.
மரண தண்டனைக்குரிய வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனையைக் குறைப்பது தொடர்பான நெறிமுறைகளை உருவாக்குவதற்காக உச்ச நீதிமன்றம் நேற்று (19.9.2022) தாமாகவே முன்வந்து வழக்கைப் பதிவு செய்தது. இதுதொடர்பாக தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவு:
ஒரு வழக்கில் அதிகபட்ச தண்டனையாக மரண தண்ட னையை எதிர்கொள்ளும் குற்றவாளியின் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, அது எப்படி, எப்போது விசாரிக்கப்பட வேண்டும் என்பதில் தெளிவு மற்றும் சீரான அணுகுமுறையைப் பெற, இந்த விவகாரத்தை ஒரு பெரிய அமர்வு மூலம் விசாரிப்பது அவசியம் என்று கருதுகிறோம். எனவே, இதற்கான நெறி முறைகளை உருவாக்க 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு இந்த விவகாரத்தை பரிந்துரை செய்கிறோம்.
மரண தண்டனைக்குரிய வழக்குகளில் ஒரு குற்றவாளிக்கு எந்தெந்த சூழ்நிலைகளில் அந்த தண்டனையைக் குறைக்கலாம். அதற்கு எந்த மாதிரியான காரணிகளை கருத்தில் எடுத்துக் கொள்ளலாம் என்பது தொடர்பான நெறிமுறைகளை 5 நீதிபதிகள் அமர்வு வகுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
இதுதொடர்பான வழக்கு கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி நீதிபதி எஸ்.ரவீந்திரபட் முன் விசாரணைக்கு வந்தபோது, ‘‘மரண தண்டனை என்பது திரும்பபெற முடியாதது. மேலும் இந்த வழக்கின் குற்றவாளிகளுக்கு அனைத்து வாய்ப்புகளும் வழங்கப்பட வேண்டும். எனவே, இந்த வழக்கில் தலைமை நீதிபதியின் உத்தரவுக்கு இந்த விவகாரத்தை அனுப்பி வைக்கிறோம்’’ என்று அவர் தெரிவித்திருந்தார். இதையடுத்து, தலைமை நீதிபதி லலித் அமர்வுக்கு வழக்கு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், நெறிமுறைகள் வகுக்க 5 நீதிபதிகள் அமர்வுக்கு அவர் நேற்று உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment