கொந்தகை: 35 முதுமக்கள் தாழி திறக்கப்பட்டு ஆய்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 12, 2022

கொந்தகை: 35 முதுமக்கள் தாழி திறக்கப்பட்டு ஆய்வு

திருப்புவனம்,செப்.12- சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கொந் தகை அகழாய்வில் கண்டறியப்பட்ட 57 முதுமக்கள் தாழிகளில் இதுவரை 35 தாழி களை திறந்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் 8-ஆம் கட்ட அகழாய்வுப் பணி நடக்கும் என தமிழ்நாடு தொல்லியல்துறை அறிவித்தது. தொடர்ந்து பிப். 13-ஆம் தேதி முதல் கீழடி, கொந்தகை, அகரம் ஆகிய 3 இடங்களில் மட்டும் அகழாய்வுப் பணிகள் தொடங்கின. இது வரை மணலூரில் அகழாய்வுப் பணி தொடங்கப்படவில்லை.

கீழடி, அகரத்தில் நீள் செவ்வக வடிவ தாயக் கட்டை, செப்புகாசு, சிவப்பு, பச்சை நிற பாசிகள், சுடுமண் பொம்மைகள் உள்ளிட்ட தொல்பொருட்கள் கிடைத்தன. கொந்தகை பகுதி ஈமக்காடு என்பதால் அங்கு தொடர்ந்து முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டு வருகின்றன.

கொந்தகையில் 6-ஆம் கட்டத்தில் இருந்து இதுவரை நடந்த 3 அகழாய்வுகளில் 135 முதுமக்கள் தாழிகள் கண்டறியப் பட்டன. தற்போது நடந்து வரும் 8-ஆம் கட்ட அகழாய்வில் மட்டும் 4 குழிகள் தோண்டப்பட்டு 57 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன. தற்போது முதுமக்கள் தாழிகள் ஒவ்வொன்றாக திறக்கப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே ஒரே முதுமக்கள் தாழியில் 74 சூதுபவளங்கள், ஒரு செப்பு துண்டு கண்டறியப்பட்டன.

இந்நிலையில் நேற்று (11.9.2022) ஒரு முதுமக்கள் தாழி திறந்து ஆய்வு செய்யப் பட்டது. இதில் சிறிய மனித எலும்புத் துண்டுகள் இருந்தன. இதுவரை 35 முது மக்கள் தாழிகள் திறக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளன.


No comments:

Post a Comment