சென்னை, செப்.9 தமிழ்நாட்டில் 2 கோடியே 60 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. ஆதார் எண் விவரம் மற்றும் கைரேகைப் பதிவு மூலம் இவை கணினி மயமாக்கப்பட்டு செல்பேசி எண்களும் இணைக்கப்பட் டுள்ளன. குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள நபர் சென்றால்தான் நியாயவிலைக்கடைகளில் பொருட்கள் வாங்க முடியும். மற்றவர்களிடம் குடும்ப அட்டையை கொடுத்து அனுப்பி இப்போது பொருட்கள் வாங்க இயலாது.
அரசின் இந்த நடவடிக்கையால் தற்போது போலி குடும்ப அட்டைகளை ஓரளவு கண்டுபிடிக்க முடிகிறது. குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமின்றி பொங்கல் இலவசப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு நிவாரண உதவிகளும் வழங்கப் படுகிறது. இதனால் குடும்ப அட்டை எல்லா வீடுகளிலும் உள்ளது.
இந்த அட்டைகளுக்கு ஒரு சில குடும்பத்தில் பொருட்கள் வாங்குவது கிடையாது. அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் 13 லட்சத்து 12 ஆயிரம் பேர் கடந்த 3 மாதமாக நியாயவிலைக்கடைகளில் பொருட்கள் வாங்காமல் இருப்பது தெரியவந்துள்ளது.
எனவே இந்த அட்டைதாரர்கள் பொருட்கள் வாங்காதது ஏன்? அவை போலி அட்டைகளா? என்பது பற்றி விசாரிக்க உணவுப் பொருள் பாதுகாப்புத் துறை ஆணையர் விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் நியாயவிலைக்கடை ஊழியர்கள் கடைசி 3 மாதங்களாக பொருட்கள் வாங்காத குடும்ப அட்டைதாரர்களுக்கு போன் செய்து என்ன காரணத்தினால் பொருட்கள் வாங்கவில்லை என்று விசாரித்து பதிவு செய்து அதை மாவட்ட வழங்கல் அலுவலர்களுக்கு அறிக்கை அனுப்பி வருகின்றனர்.
இதுபற்றி நியாயவிலைக் கடைக்காரர்கள் கூறுகையில், குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் எதற்காகப் பொருட்கள் வாங்க வரவில்லை என்று விசாரிப்பதன் நோக்கம், அந்த அட்டை போலி குடும்ப அட்டையா? என்பதை கண்டறிவதற்குதான். குடும்ப அட்டையில் உள்ளவர்கள் அந்த முகவரியில் தான் உள்ளார்களா? அல்லது வீடு மாறி சென்று விட்டார்களா? அல்லது குடும்பத்தலைவர் யாரேனும் இறந்து விட்டார்களா? என்று விசாரிக்கிறோம். இதில் ஓரளவு போலி குடும்ப அட்டை கண்டறிய முடியும். அதன் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.
No comments:
Post a Comment