திருவள்ளூர்,செப்.10- கடவுள், மதம், பக்தி என்றாலே பகுத்தறிவுக்கு இடமிருக்காது என்பதற்கு உதாரணமாக பிரச்சினைகளை தீர்ப்பதாகக் கூறி பூஜையின் பெயரால் மோசடி செய்தவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஆஞ்சநேய நகரில் வசித்து வருபவர் ரவீந்திர பாபு (வயது 62). இவர் கடந்த சில நாட்களாக மன அமைதி இல்லாமல் அவதிப்பட்டு வந்தார். இவருக்கு சில பிரச்சினைகள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பள்ளிப்பட்டு சோளிங்கர் ரோட்டில் வெங்கடேசன் என்பவரது கடை பக்கத்தில் ஜோதிடம் பார்ப்பதாக போர்டு வைத்திருப்பதை ரவீந்திர பாபு பார்த்தார். உடனே அவர் 2 நாட்களுக்கு முன் அந்த இடத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு 2 பேர் இருந்தனர். அந்த நபர்கள் ஜோதிடம் பார்ப்பதாக கூறி அவரை அமர சொல்லி அவரிடம் பேச்சு கொடுத்தனர். அப்போது ரவீந்திர பாபு மனக்கஷ்டத்திற்கு ஆளாகி இருப்பதை அவர்கள் கண்டு கொண்டனர். அவரது கஷ்டங்கள் தீர அம்மன் சிலைக்கு தங்க நகைகளை அணிவித்து லட்சுமி பூஜை செய்ய வேண்டும் என்று அவர்கள் கூறினார்கள் வீட்டில் இருந்து தங்க நகைகளை கொண்டு வந்தால் லட்சுமி பூஜை செய்வதாக அவர்கள் தெரிவித்தனர். பூஜை முடிந்த பிறகு அவரது நகையை திருப்பித் தருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதை உண்மை என்று நம்பிய ரவீந்திர பாபு வீட்டிற்கு சென்று தனது மனைவியின் 3 பவுன் தங்கநகையை எடுத்து வந்து அந்த நபரிடம் கொடுத்தார். அவர்கள் தங்களிடமிருந்த அம்மன் சிலைக்கு அந்த தங்கச்சங்கிலியை அணிவித்து பூஜை செய்தனர். பூஜை நடத்திய அன்றே நகையை கழற்றக்கூடாது என்றும் மறுநாள் வந்தால் நகையை பெற்றுகொள்ளலாம் என்று அவர்கள் இருவரும் ரவீந்திர பாபுவிடம் தெரிவித்தனர். இதை உண்மை என்று நம்பிய அவரும் தனது வீட்டுக்கு சென்று விட்டார். மறுநாள் காலை அவர்கள் இருந்த இடத்திற்கு சென்று ரவீந்திர பாபு பார்த்தார். அப்போது அவர்கள் இருந்த அறை பூட்டப்பட்டு இருந்தது. நீண்ட நேரம் அங்கு அவர் காத்திருந்து பார்த்தும் அவர்கள் வராததால் அவர்கள் தன்னை ஏமாற்றி நகையை எடுத்து சென்று விட்டனர் என்பதை உணர்ந்தார். இது குறித்து அவர் பள்ளிப்பட்டு காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்த நூதன மோசடி குறித்து பள்ளிப்பட்டு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். காவல் ஆய்வாளர் ராஜு இது குறித்து தீவிர விசாரணை நடத்தினார். இதில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கங்காவரம் மண்டலம் நல்ல குட்டலப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ஹேமந்த் குமார் (27), ராமு (25) என்பது தெரியவந்தது. காவல்துறையினர் அவர்கள் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 6 பவுன் தங்க நகையை பறிமுதல் செய்தனர். இதில் ஹேமந்த் குமார் பூசாரியாகவும், ராமு அவரது உதவியாளராகவும் இருந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் ஏற்கெனவே பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே. பேட்டையில் இதே போல் மோசடி செய்து 3 பவுன் தங்க நகையை பறித்து சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்து 6 பவுன் தங்க நகையை காவல்துறையினர் பறிமுதல் செய்து அவர்கள் இருவரையும் திருத்தணி சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment