பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் கால்நடை மருத்துவம் 12ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 10, 2022

பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் கால்நடை மருத்துவம் 12ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை, செப். 10- கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு வரும் 12ஆம் தேதி முதல் இணையத்தில் விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடை பெறுகிறது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.

இந்த கல்லூரிகளில் அய்ந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு (பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச்) 580 இடங்கள் இருக்கின்றன. சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய 4 கல்லூரிகளில் உள்ள 420 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 63 இடங்கள் (15 சதவீதம்) ஒதுக்கப்படுகின்றன. தமிழ்நாட்டுக்கு 517 இடங்கள் உள்ளன. திருவள்ளூர் மாவட்டம் கோடுவளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 40இடங்கள், பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 20 இடங்கள் உள்ளன. இதில், உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கான (பி.டெக்) 40 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 6 இடங்கள் (15 சதவீதம்) போக, மீதமுள்ள 34 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன.

இதேபோல், ஓசூர் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள்உள்ளன. இந்த 3 பட்டப்படிப்புகளும் 4 ஆண்டுகள் கொண்டது.

இந்நிலையில், பி.வி.எஸ்சி. - ஏ.எச். மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு 2022 - 2023ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு https://adm.tanuvas.ac.in  என்ற இணையதளத்தில் வரும் 12ஆம் தேதி காலை10 மணி முதல் 26ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

அயல்நாடு வாழ் இந்தியர், அயல்நாடு வாழ் இந்தியரின் வாரிசுகள், அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர் மற்றும் அயல்நாட்டினர் ஆகியோர்களுக்கான இடஒதுக்கீடு, இணையதள விண்ணப்ப வழிமுறைகள் மற்றும் இதர விபரங்களையும் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

இந்த படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment