சென்னை,செப்.12- தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் நடைபெற்ற 36-ஆவது சிறப்பு மெகா முகாமில் 12.62 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தமிழ்நாட்டில் அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி செலுத்து வதற்காக மெகா கரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 35 மெகா முகாம்கள் நடைபெற்றுள்ளன.
இந்நிலையில், 36-ஆவது மெகா கரோனா தடுப்பூசி முகாம் தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் நேற்று நடைபெற்றது. அரசுமருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணைசுகாதார நிலையங்கள், பள்ளிகள்,ஊராட்சி மற்றும் நகராட்சி அலுவலகம், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் அனைத்து இடங்களிலும் முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. சென்னையில் மட்டும் 2,000 இடங்களில் முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தப் பட்டது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை முகாம் நடந்தது.
இறுதியாக தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற மெகா முகாமில் 12.62 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. தடுப்பூசி முகாம் பணியில் ஈடுபட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு இன்று (திங்கள்கிழமை) விடுமுறை அளிக்கப்படுகிறது. அதனால், இன்று வழக்க மான தடுப்பூசி மய்யங்கள் செயல்படாது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டும் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறும் என்று நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment