அனைத்து இந்திய அளவில் சென்னை தொழில்நுட்பக் கழகம் தொடர்ந்து நான்காவது முறையாக முதல் இடத்தில் இருந்து வருகிறது. அதற்காக தமிழ்நாடு பெருமைப் பட்டுக் கொள்ளலாம். ஆகவே இந்தத் தொழில்நுட்பக் கழகம் தோன்றிய வரலாறு குறித்து சிறிது பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.
1950 பிற்பகுதியில் சென்னை பல்கலைக் கழக துணைவேந்தராக டாக்டர் இலட்சுமண சாமி முதலியார் அவர்கள் இருந்தார். தம் கல்விப் பணிக்காக அவர் புதுதில்லி சென் றிருந்தார். அப்போது இந்தியா முழுவதிலும் முக்கியமான நகரங்களில் தொழில்நுட்பக் கழகங்கள் அமைக்க அப்போதைய ஒன்றிய அரசு தீவிரமாக இருந்தது. அன்றைய ஒன்றிய அரசில் கல்வி அமைச்சராக இருந்தவர் இராஜகுமாரி அமிர்த கவுர் என்பவர் ஆவார்.
அவருடன் இலட்சுமணசாமி முதலியார் அவர்கள் பேசிக் கொண்டிருந்தபோது, அமிர்த குமாரி கவுர் கூறினார். நாங்கள் வடநாட்டு நகரங்களை தொழில்நுட்பக் கழகங்கள் அமைக்க இடங்களை தேர்ந்தெடுத்து விட்டோம். ஆனால் தென்னகத்தில் தான் சரியான இடம் அமைய வில்லை என்றார். உடனே டாக்டர் இலட்சுமண சாமி முதலியார் அவர்கள் தொழில்நுட்பக் கழகம் அமைய எவ்வளவு இடம் தேவைப்படும் என்று கேட்டார். அதற்கு அம்மையார் சுமார் 200 ஏக்கர் நிலம் தேவைப்படும் என்றார். டாக்டர் இலட்சுமணசாமி முதலியார் அவர்கள் அதற்கான நிலம் பெற நான் ஏற்பாடு செய்து தருகிறேன் என்று உறுதியளித்தார். அப்போது கிண்டி ஆளுநர் மாளிகையை அடுத்து கிழக் குப் பகுதியில் சவுக்கு மரக்காடுகள் விரிந்து பரந்து இருந்தன. அவையாவும் வனத்துறைக்குச் சொந்த மானவை.
டாக்டர் இலட்சுமணசாமி முதலியார் அவர்கள் அவ்விடத்தைச் சென்று பார்த்து தொழில்நுட்பக் கழகம் அமையப் போதுமான, அதாவது 200 ஏக்கர், நிலம் இருப்பதைக் கண்டு உறுதிப்படுத்திக் கொண்டார்.
அப்போது சென்னையில் காங்கிரசு அரசு ஆட்சியில் இருந்தது. அப்போதிருந்த முதல்வரைச் சந்தித்து டாக்டர் அவர்கள் தொழில்நுட்பக் கழகம் சென்னையில் அமைய வேண்டிய அவசியத்தையும், நன்மையையும் எடுத்துக் கூறினார். சென்னையில் அமைந்தால் நமக்கு சிறப்பாக இருக்கும் என்றார். இது 1959இல் நடந்தது. அப்போதைய முதல்வர் கல்வி வள்ளல் காமராசர். அவர் உடனே இதற்கு ஒப்புதல் தந்துவிட்டார். அதற்குப் பிறகு 1963இல் தான் தொழில்நுட்பக் கழகம் இப்போது இருக்கும் இடத்தில் தொடங்கப்பட்டது. மாணவர்கள் 1959லேயே இதில் சேர்ந்து விட்டனர். 1964இல் இப்போது இருக்கும் இடத்தில் அம்மாணவர்களுக்குப் பட்டமளிப்பு விழா நடந்தேறியது.
டாக்டர் இலட்சுமணசாமி முதலியார் அவர்கள் தொழில் நுட்பக் கழகம் அமைய இடைவிடாது பணியாற்றி அதன் முதல் ஆட்சிக் குழுவின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நுழைவுவாயில் கட்டடத்தில் இலட்சுமணசாமியின் மார்பளவு வெண்கலச் சிலை அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
(அகிலம் வியக்கும் ஆற்றல்மிகு இரட்டையர்
நூலிலிருந்து - நடேசன் கைலாசம்)
ஆற்காடு இரட்டையர் வாழ்க்கை வரலாறு ஆசிரியர், புதுச்சேரி
No comments:
Post a Comment