இளைய சமுதாயத்தினரை நாசப்படுத்தக்கூடிய போதைப் பழக்கத்தைக் கட்டுப்படுத்த - ஒழித்துக்கட்ட கைகோர்த்து செயல்படுங்கள்!
திருப்பத்தூர், ஆக.15 எதிர்க்கட்சித் தலைவருக்கும், அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் வைக்கின்ற ஒரு முக்கியமான வேண்டுகோள் என்னவென்றால் இளைய சமுதாயத்தை, மாணவர் சமுதாயத்தை நாசப்படுத்தக்கூடிய போதைப் பழக்கத்தைக் கட்டுப்படுத்தவேண்டும் என்கிற விஷயத்தில், வேறுபாடில்லாமல், எதிர்க்கட்சியாக இருந்தாலும், ஆளுங்கட்சியாக இருந்தாலும், அனைத்துக் கட்சித் தலைவர்களாக இருந்தாலும், அமைப்புகளாக இருந் தாலும் அவரவர் பங்கை அளித்து, பெற்றோருக்கு நிம்மதியைக் கொடுங்கள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். .
செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்
நேற்று (14.8.2022) திருப்பத்தூருக்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டி யளித்தார்.
அப்பேட்டியின் விவரம் வருமாறு:
பெரியாருடைய லட்சியங்களை விளக்கக்கூடிய ஏடு - 'விடுதலை!'
'விடுதலை' என்ற தந்தை பெரியார் அவர்களால் நீதிக்கட்சிக் காலத்திலிருந்து - ஏறத்தாழ 1935 ஆம் ஆண்டு தொடங்கப் பெற்ற நாளேடு 88 ஆம் ஆண்டில் அது இன்றைக்கும் வீர நடைபோடுகிறது.
மதச்சார்பின்மை, சமூகநீதி, சுயமரியாதை, பகுத்தறிவு, பாலியல் நீதி எல்லாவற்றிற்கும், மனித உரிமைகளுக்காகப் போராடக் கூடிய ஒரு கொள்கை ஏடாக - தந்தை பெரியாருடைய லட்சியங்களை விளக்கக் கூடிய அந்த ஏடு - பிறக்கும்பொழுதே - வெள்ளைக்காரர்களின் ஆட்சியில் ஜாமீன் கட்டப் பட்டது - ஆச்சாரியாரின் ஆட்சியில் இன்னும் கொடுமைப்படுத்தப்பட்டது. நெருக்கடி காலத்தில், முரசொலியைப் போல, தீக்கதிரைப் போல மிகப் பெரிய சோதனைகளை சந்தித்தது.
அப்படிப்பட்ட ஏடு இன்றைக்கு 88 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்ற நேரத்தில், அதனுடைய ஆசிரியராக தந்தை பெரியார் அவர்கள் எனக்கு அந்தப் பொறுப்பைக் கொடுத்து 60 ஆண்டுகள் ஆகின்றன. ஒரு நாளேட்டில் 60 ஆண்டுகள் தொடர்ந்து ஆசிரியராகப் பணியாற்றுகிறேன் என்பது ஒரு முக்கியமான நிகழ்வாக இருந்தாலும், என்னைப் பொறுத்தவரையில், அதை ஒரு சாதாரண நிகழ்வாகத்தான் ஆசிரியர் என்ற முறையில் கருதுகிறேன்.
'விடுதலை' போன்ற முற்போக்கு ஏடுகளுடைய சேவை - தொண்டு என்பது மிகவும் இன்றியமையாதது!
காரணம், நான் ஒரு பெரியார் தொண்டன். தந்தை பெரியார் அவர்கள் என்ன ஆணையிடு கிறார்களோ, அதை செய்து முடிப்பதுதான் எங்கள் அனைவருடைய பணியாகும். அப்படி இருக்கும் பொழுது, அந்தப் பணியிலே நான் என்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறேன்.
இதற்கிடையிலே எத்தனையோ எதிர்நீச்சல்கள் இருந்தாலும், இன்றைய காலகட்டத்தில் 'விடுதலை' போன்ற ஏடுகளுடைய, முற்போக்கு ஏடுகளு டைய சேவை - தொண்டு என்பது மிகவும் இன்றிய மையாததாகும்.
காரணம், மதவாதம் அச்சுறுத்திக் கொண்டி ருக்கின்றது.
அரசமைப்புச் சட்டத்தின்மீது பிரமாணம் எடுத்தவர்களே, அதை உடைக்கக்கூடிய நடை முறையை, நாடாளுமன்ற அவையிலேயே செய்து கொண்டிருக்கிறார்கள்.
எனவேதான், சமூகநீதியைக் காப்பாற்ற, சுயமரி யாதை உணர்வுகளைக் காப்பாற்ற, மாநில உரிமை களைக் காப்பாற்ற, மனித உரிமைகளைப் போற்றிட இந்த ஏடு தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்து நடத்தவேண்டும்.
வருகின்ற 27 ஆம் தேதி சென்னையிலே மிகப்பெரிய ஒரு நிகழ்வு!
அந்த ஏடு தன்னுடைய பயணத்தை நடத்தினால் மட்டும் போதாது; அது எல்லா இல்லங்களிலும் இருக்கவேண்டும். ஒவ்வொருவருக்கும் சிறந்த எண்ணத்தை உருவாக்கக்கூடிய இந்த ஏடு - கொள்கை ஏடாக இருக்கின்ற காரணத்தினால், தளர்ச்சிக்கோ அல்லது மூடநம்பிக்கைக்கோ இடமில்லாத அளவிற்கு, நட்டத்தில் நடக்கக்கூடிய ஏடாக இருந்தாலும், மக்க ளுடைய ஆதரவோடு நடக்கவேண்டும் என்பதற் காகத்தான், 60 ஆண்டுகால ஆசிரியர் என்ற நிகழ்வை ஒரு வாய்ப்பாகக் கழகத் தோழர்கள் பயன்படுத்தி, ''60 ஆயிரம் விடுதலை சந்தாக்கள்'' என்ற இலக்கை மேற்கொண்டிருக்கிறார்கள்.
இல்லந்தோறும் விடுதலை -
உள்ளந்தோறும் பெரியார்
என்ற அந்தத் தத்துவக் கருத்துகளைப் பரப்பு வதற்கு முயற்சி எடுத்து, வருகின்ற 27 ஆம் தேதி சென்னையிலே மிகப்பெரிய ஒரு நிகழ்வை நடத்த விருக்கிறார்கள்.
நம்முடைய மாண்புமிகு திராவிட மாடல் ஆட்சி யினுடைய முதலமைச்சராக இருக்கக்கூடிய சமூகநீதிக் கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்களும்,
திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாள ரும், நீர்வளத்துறை அமைச்சருமான மாண்புமிகு துரைமுருகன் அவர்களும்,
திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதன்மைச் செயலாளரும், நகர்ப்புற அமைச்சருமான மாண்புமிகு கே.என்.நேரு அவர்களும்,
திருப்பத்தூர் மாவட்டம் முன்னிலையில் போட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது
மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையின் முக்கிய பொறுப்பாளர்கள்கூட 'விடுதலை'க்கு ஆயுள் சந்தா அளித்து, எங்களை ஊக்கப்படுத்துவதற்காக செய்தார்கள். இன்றைக்கு நாடு தழுவிய அளவில் சந்தா திரட்டும் இயக்கம் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில், திருப்பத்தூர் மாவட்டம் முன்னிலையில் இருக்கக்கூடிய மாவட்டமாகத் திகழ்ந்துகொண்டு, போட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது.
அத்தகைய நிகழ்விற்காகத்தான் இங்கு வந்திருக் கின்றோம். தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய எல்லாப் பகுதி இயக்கத் தோழர்களையும் சேர்த்து, பிரச்சார முறையாக வருகிற 18, 19, 20 ஆகிய நாள்களில் கடைவீதிகளில் 'விடுதலை' சந்தா வசூல் என்று ஓர் அணியாகச் சென்று வலியுறுத்த இருக்கிறார்கள்.
'விடுதலை' ஏடு என்பது மக்கள் ஏடு!
எனவே, 'விடுதலை' ஏடு என்பது மக்கள் ஏடு; அடக்குமுறைகளை சந்தித்துக் கொண்டிருக்கின்ற, சந்தித்த ஏடு.
மக்களுக்கு அறிவுறுத்தக் கூடிய ஏடு; மக்கள் பின்னால் செல்லாமல், மக்களைத் தன் பின்னால் அழைத்துச் செல்லவேண்டும் என்று நினைக்கின்ற ஒரு ஏடு - இந்த வாய்ப்பைப் பெற்றிருக்கின்றது என்பதுதான் மிக முக்கியம்.
அதற்காகத்தான் இங்கே சந்தா வழங்கவிருக் கிறார்கள். அந்த விழா இன்னும் சிறிதுநேரத்தில் நடை பெறவிருக்கிறது.
பா.ஜ.க.வினுடைய மாவட்டச் செயலாளர் ஆள்மாறாட்டம் செய்ததால் கைது!
செய்தியாளர்: தமிழ்நாட்டில் பா.ஜ.க.வினுடைய செயல்பாடு எப்படி இருக்கிறது?
தமிழர் தலைவர்: நன்றாகத் தெரியுமே, சிறப்பாக இருக்கிறது. எப்படி என்றால், பா.ஜ.க.வினுடைய மாவட்டச் செயலாளர் பி.ஏ. பட்டம் வாங்கவேண்டும் என்பதற்காக, வேறொரு ஆளை வைத்துத் தேர்வு எழுதச் சொல்கிறார். நீட் தேர்வில் இதுவரை எப்படி ஆள்மாறாட்டம் நடைபெற்றது என்பது நாடறிந்த விஷயம். பா.ஜ.க. எவ்வளவு ஒழுக்கமுள்ளவர்களை வைத்திருக்கிறது என்பதற்கு அடையாளம் என்ன வென்றால், இதற்கு முன்பு, பா.ஜ.க. மாவட்டத் தலைவர் ஒருவர், பாலியல் குற்றத்திற்கு ஆளானார் என்பதும் தெளிவானது.
அவர்களைப் பொறுத்தவரையில், பழைய குற்றவாளிகள், தேடப்படுகின்ற குற்றவாளிகள், இன்னும் பதவிகளை அதிகமாக எதிர்பார்க்கிறவர் களையெல்லாம் கொண்டு, எந்தக் கட்சியிலாவது யாராவது பலகீனமாக இருந்தால், அந்தக் கட்சிகளை உடைப்பதற்கு, அவர்களைப் பயன்படுத்திக் கொள்ள லாம் என்ற வித்தைகளையெல்லாம் இன்றைக்குச் செய்துகொண்டிருக்கிறார்கள்.
எப்படியாவது தமிழ்நாட்டு மண்ணை காவி மண்ணாக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இது காவி மண்ணாகவோ, கார்ப்பரேட் மண்ணாகவோ ஒருபோதும் ஆகாது.
அவர்களுடைய முயற்சி என்பது இருக்கிறதே, அது வீணாகத்தான் போகுமே தவிர, ஒருபோதும் ஈடேறாது.
எண்ணெய்ச் செலவே தவிர, பிள்ளை பிழைக்காது.
அவர்கள் பாரதத்தையும் நம்பவில்லை, பாரத மாதாவையும் நம்பவில்லை!
செய்தியாளர்: கிருஷ்ணகிரி மாவட்டம் பாலக் கோட்டில், பாரத மாதா சிலை இருக்கும் இடத்தில், பூட்டை உடைத்து, உள்ளே சென்று மாலை அணி வித்ததற்காக, பா.ஜ.க.வினர் அய்ந்து பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்களே?
தமிழர் தலைவர்: பா.ஜ.க.வினர், பாரத மாதா சிலையை மட்டும் உடைத்தது என்பது - நான் ஏற் கெனவே சொன்னதற்கு ஆதாரத்தைச் சொல்கிறேன்.
இறந்த இராணுவ வீரரின் உடல், நேற்று மதுரைக்குக் கொண்டு வரப்படுகிறது. அவருக்கு இறுதி மரியாதை செலுத்துவது என்பது அரசினுடைய மரபு. அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சராகிய, நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அவர்கள், விமான நிலையத்திற்குச் சென்று, இறந்த இராணுவ வீரரின் உடல் இறக்கப்படுகின்ற நேரத்தில், மரியாதை செலுத்தச் சென்றவரின் கார்மீது தாக்குதல் நடத்தி, கார்மீது செருப்பு வீசப்பட்டு இருக்கிறது. அந்தச் செயலில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் அய்ந்து பேரைக் கைது செய்து வழக்குப் போட்டு இருக்கிறார்கள் என்ற செய்தி, நேற்றைய செய்தியாகும்.
இப்பொழுது பாரத மாதா சிலை இருக்கும் அறையின் பூட்டை உடைத்திருக்கிறார்கள் என்பது உங்கள்மூலம்தான் நான் தெரிந்துகொள்கிறேன்.
பாரத மாதாவிற்கே இப்பொழுது ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது. பாரத மாதாவைக் காப்பாற்றக் கூடியவர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் பாரதத்தையும் நம்பவில்லை, பாரத மாதாவையும் நம்பவில்லை என்பதற்கு இதுதான் அடையாளம்.
பொறுப்பில்லாமல் பேசுவதுதான் அண்ணாமலையினுடைய செயல்பாடு!
செய்தியாளர்: அண்ணாமலையினுடைய செயல் பாடுகள் எப்படி இருக்கிறது?
தமிழர் தலைவர்: அண்ணாமலையினுடைய செயல்பாடு என்பது அவர்களுடைய ஒட்டுமொத்த செயல்பாடுகள்தான். அவர்களையெல்லாம் ஊக்கப் படுத்துவதுதான் அண்ணாமலையினுடைய செயல் பாடு.
எதற்கெடுத்தாலும், ஆட்களைக் கூட்டிக் கொண்டு வந்து, பொறுப்பில்லாமல் பேசுவதுதான் அவருடைய செயல்பாடாக இருக்கிறது.
இதுபோன்று நிறைய பேரைச் சேர்த்துக்கொண்டு, எங்கே சென்றாலும், அங்கே பிரச்சினையை உண்டாக்க வேண்டும் என்று சொல்லி, இவ்வளவு அசிங்கங்கள் நடந்து, அதற்காக சம்பந்தப்பட்டவர்கள் மன்னிப்புக் கேட்கக்கூடிய அளவிற்கு, அவர்களுடைய கட்சியைச் சார்ந்தவர்களே முன்வந்த பிறகும்கூட, ஒரு கட்சியினுடைய பொறுப்புள்ள தலைவர், மன்னிப்புக் கேட்டு, வருத்தம் தெரிவிப்பதற்குப் பதிலாக, நிதியமைச்சர் பதவி விலகவேண்டும் என்று சொல்கிறார் என்றால், இவர் எப்படி மூன்று எழுத்துக்குரிய அதிகாரியாக இருந்தார் என்பது எனக்கு வியப்பாக இருக்கிறது.
குளத்தில் வேண்டுமானால், தாமரை மலரும்; பகுத்தறிவுக் கடலான தமிழ்நாட்டில் மலராது!
செய்தியாளர்: பா.ஜ.க. தமிழ்நாட்டில் காலூன்ற வேண்டும் என்பதற்காக, நிறைய பணிகளை மேற் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்கிறார்களே, அதுபோன்ற வாய்ப்பு தமிழ்நாட்டில் வருமா? தமிழ் நாட்டில் தாமரை மலருமா?
தமிழர் தலைவர்: தமிழ்நாடு என்பது பகுத்தறிவுக் கடல், சமூகநீதிக் கடல் - இதில் ஒருபோதும் தாமரை மலராது. சில நேரங்களில் குளத்தில் வேண்டுமானால், தாமரை மலரும். இங்கே குளம் இல்லை - கடல்தான் இருக்கிறது.
கடலில் தாமரை மலரும் என்று நினைக்கிறார்கள்; சபலமுள்ள சிலரைப் பிடிக்கலாம்; கூலிப் படை கிடைக்கலாம்; ஆனால், கொள்கைப் படை அவர் களுக்குக் கிடைக்காது.
செய்தியாளர்: 'திராவிட மாடல்' ஆட்சி - தமிழ் நாட்டில் எப்படி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது?
தமிழர் தலைவர்: 'திராவிட மாடல்' ஆட்சி தமிழ்நாட்டில் எப்படி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கு அடையாளம், பள்ளிக்கூடங்களுக்குக் காலையில் பட்டினியோடு சென்ற பிள்ளைகள் எல்லாம், இப்பொழுது காலைச் சிற்றுண்டியை பள்ளிக் கூடத்திலேயே பெற்று, சிறப்பாகப் படிக்கக் கூடிய அளவிற்கு இருக்கக்கூடிய நிலை என்பது திராவிட மாடல் ஆட்சியினுடைய தனிப்பெரும் சாதனையாகும்.
பெண்களுக்கு மிகப்பெரிய அளவிற்கு வாய்ப்புகள்
செய்தியாளர்: 'திராவிட மாடல்' ஆட்சியில் பெண்களுக்கான பாதுகாப்பு எப்படி இருக்கிறது?
தமிழர் தலைவர்: தமிழ்நாட்டில், 'திராவிட மாடல்' ஆட்சியில் பெண்களுக்கான பாதுகாப்பு சிறப்பாக இருக்கிறது. அதன் காரணமாகத்தான், அவர்கள் பேருந்தில் இலவசப் பயணம் மேற்கொள்வதற்கு ஆணையிடப்பட்டு, அவர்கள் சுலபமாக அடையாளம் காணுவதற்காக, அதற்குரிய வண்ணங்களைத் தீட்டியிருக்கிறார்கள்.
வண்ணங்களும் அவர்களுக்கு உதவி செய்கின்றன - அதே நேரத்தில், முற்போக்காக இருக்கக்கூடிய - இயல்பாக இருக்கக்கூடிய இந்தக் கொள்கைகள் அவர்களுக்கு எல்லா வகையிலும் உதவி செய்யக் கூடிய அளவில், மிகப்பெரிய அளவிற்கு வாய்ப்புகளை 'திராவிட மாடல்' ஆட்சி உருவாக்கி இருக்கிறது.
நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள்
செய்தியாளர்: 'திராவிட மாடல்' ஆட்சிக்கு திராவிடர் கழகம் எவ்வளவு மதிப்பெண்ணை கொடுக்கிறது?
தமிழர் தலைவர்: இப்பொழுதுதான் அவர்கள் தொடங்கியிருக்கிறார்கள். எடுத்த எடுப்பிலேயே அவர்கள் முதல் ரேங்க்கை தாண்டி விட்டார்கள்; அடுத்தது டிஸ்டிங்சன் போகவேண்டும்; நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை அவர்கள் இயல்பாக வாங்கிவிடுவார்கள்.
ஏனென்றால், நூறு மதிப்பெண்களுக்குமேல், மதிப் பெண் போட முடியாது.
அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் வைக்கின்ற ஒரு முக்கியமான வேண்டுகோள்
செய்தியாளர்: தமிழ்நாட்டில் போதைப் பொருள்கள் அதிகமாக புழக்கத்தில் உள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறாரே?
தமிழர் தலைவர்: எதிர்க்கட்சித் தலைவர் - சுட்டிக் காட்ட வேண்டியது அவருடைய கடமை. ஆனால், அதேநேரத்தில், அவருடைய ஆட்சியில் போதைப் பொருள்கள் தமிழ்நாட்டில் இல்லாமல் இருந்ததா? என்றால், இல்லை என்று சொல்ல முடியாது; அதை யெல்லாம் மறைத்து வைத்திருந்தார்கள். இப்பொழுது அவை வெளிச்சத்திற்கு வருகிறது; வழக்குப் பதிவாகிறது.
ஆனாலும், இதில் அரசியல் செய்யக்கூடாது.
எதிர்க்கட்சித் தலைவருக்கும், அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் வைக்கின்ற ஒரு முக்கியமான வேண்டுகோள் என்னவென்றால்,
மற்ற விஷயங்களில் நீங்கள் சண்டை போடுங்கள்; அரசியல் செய்யுங்கள்; போராடுங்கள், வாதாடுங்கள்.
ஆனால், இளைய சமுதாயத்தை, மாணவர் சமுதாயத்தை நாசப்படுத்தக்கூடிய போதைப் பழக்கத் தைக் கட்டுப்படுத்தவேண்டும்; ஒழித்துக்கட்ட வேண்டும் என்கிற விஷயத்தில், வேறுபாடில்லாமல், எதிர்க்கட்சியாக இருந்தாலும், ஆளுங்கட்சியாக இருந்தாலும், அவரவர் பங்கை அளித்து, பெற்றோருக்கு நிம்மதியைக் கொடுங்கள்.
இளைஞர்களுடைய எதிர்காலத்தை நாசமாக்காமல், அவர்களை வாழ விடுங்கள்; அந்த இளங்குருத்துகளின் வாழ்க்கை மிக முக்கியமாகக் காப்பாற்றப்படவேண்டும்.
எனவேதான், போதை மருந்து ஒழிப்புப் பிரச்சி னையை - ஒரு சர்வ கட்சிப் பிரச்சினையாகவும், பொதுப் பிரச்சினையாகவும் எடுத்துக்கொண்டு, அனைத்துக் கட்சிகளும், அமைப்புகளும் ஈடுபடவேண்டும்.
மற்ற பிரச்சினைகளில் வேண்டுமானால், விவா தங்கள் நடத்தலாம்; ஆனால், இதில் ஒருமித்த கருத் தோடு, போதைப் பழக்கத்தை ஒழிப்பது எப்படி? மாணவர்களை, இளைஞர்களை அப்பழக்கத்திலிருந்து காப்பாற்றுவது எப்படி? என்பது மட்டும்தான் முதன்மையாக இருக்கவேண்டும்.
தீப்பற்றி எரியும் நேரத்தில், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபடும்பொழுது, யார்? என்ன? எப்படி? என்று விவாதிக்கமாட்டோமே, அதைவிட மோசமான பிரச்சினை இது.
எனவேதான், உங்கள்மூலமாக அனைத்துக் கட்சிகளுக்கும் நாங்கள் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், இது ஒரு பொதுப் பிரச்சினையாகவும், ஆபத்தான பிரச்சினையாகவும், பொதுமையான உணர் வோடு, கட்டுப்பாடு காத்து, எல்லோரும் கைகோர்த்து அதனை ஒழிக்கவேண்டும் என்பதுதான்.
பெரியார் உலகமயமாகிக் கொண்டிருக்கிறார்
செய்தியாளர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் பா.ஜ.க. வினர், தந்தை பெரியார் சிலையை உடைத்தார்கள். இன்றைய காலகட்டத்தில் பெரியார் சிலைக்குப் பாதுகாப்பில்லாத சூழல் இருக்கிறதே, அதுகுறித்து உங்கள் கருத்து என்ன?
தமிழர் தலைவர்: பெரியார் என்பது வெறும் சிலை அல்ல; பெரியார் என்பது சீலம்.
எவ்வளவுக்கெவ்வளவு அவர்கள் உடைக் கிறார்களோ, அவ்வளவுக்கவ்வளவு பெரியார் உலக மயமாகிக் கொண்டிருக்கிறார்.
ஆகவேதான், பெரியார் பிம்பம் அல்ல; பெரியார் நிழல் அல்ல; பெரியார் கல்லிலும், மண்ணிலும் இல்லை; பெரியார் தத்துவமாக இருக்கிறார்.
ஆகவே, அவரை அழிக்கவோ, ஒழிக்கவோ எந்தக் கொம்பனாலும் முடியாது.
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
No comments:
Post a Comment