புதுடில்லி, ஆக. 24- அலோபதி மருத்துவர்களை இழிவு படுத்தும் வகையில் கருத்து தெரிவிக்கக் கூடாது என பாபா ராம்தேவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாப ராம்தேவ் பதஞ்சலி ஆயுர்வேத் என்ற நுகர் பொருள் நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவர், நவீன மருத்துவ முறை மற்றும் அலோபதி மருத்துவர்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்து வருகிறார். அத்துடன் அவருடைய நிறுவன விளம்பரங்களிலும் இது போன்ற கருத்துகள் இடம்பெறுகின்றன. குறிப்பாக கரோனா தடுப்பூசி குறித்தும் ராம்தேவ் விமர்சனம் செய்துள்ளார். இதை எதிர்த்து இந்திய மருத்துவ சங்கம் (அய்எம்ஏ) சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமை யிலான அமர்வு முன்பு நேற்று (23.8.2022) விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி ரமணா கூறும்போது,
“யோக கலையை பிரபலமாக்கி வரும் சாமியார் ராம்தேவை மதிக்கிறோம். ஆனால் அவர் மற்ற மருத்துவ முறைகளை குறை கூறுவது ஏன்? நவீன மருத்துவ முறை மற்றும் அலோபதி மருத்துவர்களை இழிவுபடுத்தும் வகையில் பாபா ராம்தேவ் கருத்து தெரிவிக்கக் கூடாது.
இந்த அய்எம்ஏ மனு குறித்து ஒன்றிய அரசு, இந்திய விளம்பர தர கவுன்சில், ஒன்றிய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம், பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனம் ஆகியவை பதில் அளிக்கவேண்டும்” என உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment