அரசு நிதி முறைகேடு கோத்தபய ராஜபக்சே விசாரிக்கப்பட வேண்டும்! இலங்கை எதிர்க்கட்சி வலியுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 24, 2022

அரசு நிதி முறைகேடு கோத்தபய ராஜபக்சே விசாரிக்கப்பட வேண்டும்! இலங்கை எதிர்க்கட்சி வலியுறுத்தல்

கொழும்பு, ஆக. 24- கோத்தபய ராஜபக்சே இலங்கை அரசு நிதியை தவறாக பயன்படுத்தியதற்காக விசாரிக்கப்பட வேண்டும் என, இலங்கையின் பிரதான எதிர்க்கட்சி யான சாமாகி ஜன பலவேகயா கட்சி வலியுறுத்தி உள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக அரசுக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டம் தீவிரமடைந்ததை தொடர்ந்து அங்கு அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே வெளிநாட்டுக்கு தப்பி ஓடினார். பின்னர் அதிபர் பதவியிலிருந்து விலகினார். 

தற்போது தாய்லாந்தில் இருக்கும் அவர் விரைவில் இலங்கை திரும்ப இருப்பதாக அண்மையில் தகவல் வெளியானது. அதே சமயம் அவர் அமெரிக்க குடியுரி மையை பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் கோத்தபய ராஜபக்சே இலங்கை திரும்புவதற்கு அனைத்து உரிமைகள் இருப்பதாகவும், அதே சமயம் அவர் அரசு நிதியை தவறாக பயன்படுத்தியதற்காக விசாரிக்கப்பட வேண்டும் எனவும் இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான சாமாகி ஜன பலவேகயா கட்சி வலியுறுத்தி உள்ளது. அக்கட்சியின் தலைவர் அஜித் பி பெரேரா இதுபற்றி கூறுகையில், 

"கோத்தபய ராஜபக்சே இந்த நாட்டின் குடிமகன், அவருக்கு தனது தாய்நாட்டுக்கு திரும்ப உரிமை உண்டு. இந்த உரிமையை யாரும் மறுக்க முடியாது. எனினும், நிதி முறைகேடு குற்றச்சாட்டுக்காக அவர் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும். அவரது பெற்றோரின் நினைவுச் சின்னத்திற்காக அரசு நிதியை செலவிட்டதாக அவர் மீது வழக்கு இருந்தது. அரசமைப்புச் சட்டத்தின்படி தற்போது அவருக்கு சட்டப்பூர்வ விலக்கு கிடைக்காததால், அவ ருக்கு எதிராக விசாரணை நடத்தவும், குற்றம் நிரூபிக்கப் பட்டால் அவருக்கு தண்டனை வழங்கவும் முடியும்" என்றார்.

No comments:

Post a Comment