அரியலூர் அள்ளித் தந்த அனுபவங்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 5, 2022

அரியலூர் அள்ளித் தந்த அனுபவங்கள்!

- வி.சி.வில்வம்

கடந்த ஜூலை 30 அரியலூரில் திராவிடர் கழக இளைஞ ரணி மாநாடு நடைபெற்றது. மாநாடு குறித்து வியக்காதவர் எவருமிலர் என்கிற அளவிற்குத்  தாக்கத்தை ஏற்படுத்தி சென்ற மாநாடு. சமூக வலைத்தளங்களில் மாற்றுக் கட்சியினரும், தோழமை அமைப்புகளும் மனதார பாராட்டி மகிழ்ந்த மாநாடு! ஒரு இளைஞரணி மாநாட்டை மற்றொரு இளைஞரணி மாநாடு தான் மிஞ்ச முடியும் எனத் தொடர்ந்து நிரூபித்து வருகிற அற்புதங்கள்!

வெளிப் பார்வைக்கு நமக்கே இவ்வளவு உணர்வுகளைக் கிள்ளித் தந்த அந்த மாநாடு, அரியலூர் தோழர்களுக்கு எவ்வளவு அள்ளித் தந்திருக்கும்! வாருங்கள் கேட்டு மகிழ்வோம்!

மாநாடு முடித்த மகிழ்ச்சியில் இருந்தாலும், தொடர் நிகழ்ச்சி யாக விடுதலை சந்தா பணியில் வீறுநடை போட்டுவரும் விடுதலை நீலமேகம் அவர்களைத் தொடர்பு கொண்டோம்!

மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகம்!                                                                         

எங்களின் மகிழ்ச்சியை, நன்றியை எப்படி வெளிப்படுத் துவது என்றே தெரியாமல் இருக்கிறோம்! அப்படியான நெகிழ்ச்சியில் திளைத்துள்ளோம்! அரியலூர் மாவட்டக் கழகத் தோழர்கள் எப்போதுமே சிறப்பானவர்கள்! அதேபோல அரிய லூர் மக்கள் மீதும் நாங்கள் பெரு நம்பிக்கை வைத்திருந்தோம்! அதில் ஒரு விழுக்காடு கூட பொய்க்கவில்லை என்பது தான் இந்த இயக்கத்திற்குக் கிடைத்த பெரும் அங்கீகாரம்!

நாங்கள் தொடக்கம் முதலே அழகுற திட்டமிட்டு குழு, குழுவாகப் பணிகளை மேற்கொண்டோம்! பண்பு மிகுந்த இந்தப் பகுத்தறிவுப்  படைக்கு, அன்பு கலந்து நிதி வழங்கினர் மக்கள்! எனது வகுப்பு நண்பரும், செந்துறை மருத்துவருமான செல்வம் அவர்களிடம் சென்ற போது, எடுத்த எடுப்பிலே பத்தாயிரம் தரவா? போதுமா? என்று கேட்டார். இப்படி எங்களை நெகிழ வைத்த சம்பவங்கள் ஒன்றல்ல: இரண்டல்ல!

எங்கள் நிறுவனத்தில் வேலை செய்யும் லாரி ஓட்டுனர்கள், "திராவிடர் கழகத்தில் இவ்வளவு பேர் வருவார்கள் என நாங்கள் நினைத்துக் கூட பார்க்கவில்லை எனப் பூரித்துப் போனார்கள்!

தங்களின் விடுதலை சந்தா பணி தொடரட்டும் என் வாழ்த்தி, சிந்தனை செல்வன் அவர்களைத் தொடர்பு கொண் டோம்!

மாவட்டச் செயலாளர் சிந்தனைச் செல்வன்!

வட்டார, மாவட்ட மாநாடுகள் நடத்திய அனுபவம் இருந்தாலும் மாநில மாநாடு என்றதும் மலைப்பும், திகைப்பும் ஏற்பட்டது உண்மை! அதேநேரம் வரலாற்றுச் சிறப்பு மிக்க மாநாட்டை நடத்தப் போகிறோம் என்கிற பெருமித உணர்வும் கூடவே  கலந்துவிட்டது!   

தொடக்கத்தில் மாவட்டத் துணைச் செயலாளரும், எளிய தொண்டருமான மா.சங்கர் ரூபாய் ஒரு லட்சம் கொடுத்து, மாநாட்டுக் கதவுகளைத் திறந்து வைத்தார்! தொடர்ந்து அரசியல் கட்சிகள்,  பல்வேறு இயக்கத் தோழர்கள் பல வகையிலும் உறுதியாக இருந்தனர்!

செங்குந்தபுரம் பாலகிருட்டிணன் என்பவர் தாமாக முன்வந்து, எங்களை அழைத்து ஆயிரம் ரூபாய் கொடுத்ததும், உடையார் பாளையத்தில் இனவுணர்வு மிக்க தோழர் மணிகண்டன் இயக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டதும்,  விளாகம் கிராமத்தைச் சார்ந்த காசிராஜன், தான் சிங்கப்பூரில் பணிபுரிவதாகவும், ஆசிரியர் அங்கு வரும்போதும் நிகழ்ச்சி யில் பங்கேற்பேன் என்றும், இன்றைய மாநாட்டிற்கும் வரு வேன் என்றும்  கூறியவை எல்லாம் மாநாட்டிற்கு வெளியே நடந்த விவரிக்க முடியாத உணர்வுகள்!

மாநாட்டிற்கு முதல் நாள் எனது தாயார் திடீரென மறைந்த காரணத்தால், நிகழ்வில் பங்கேற்க முடியவில்லை என்கிற பெரும் துயரம் ஒன்றுதான்: மற்றபடி மாநாடு பெரும் வெற்றி!

தொடர்ந்து அறிவன் அவர்களைத் தொடர்பு கொண்டோம்!

சு.அறிவன், மாவட்ட இளைஞரணி தலைவர்!

தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை தங்கம் கொடுத்த அந்த நாள், அந்த மகிழ்ச்சியை இன்று அனுபவித்தேன். இதேபோன்று அரியலூருக்கும் ஒரு மாநாடு கிடைக்குமா என நான் நினைத்ததுண்டு. அது இப்போது நிறைவேறி இருக்கிறது.

அரியலூரை கருஞ்சட்டை கடலாக மாற்றிய  தமிழ்நாட்டுத் தோழர்களையும் நன்றியோடு நினைவு கூறுகிறோம்! மாநாடு சிறப்பு! சிறப்பு!! சிறப்பு!!!  

பொன்.செந்தில்குமார், மண்டல இளைஞரணி செயலாளர்!

உற்சாகமும், மட்டற்ற மகிழ்ச்சியும் அடைகிறேன்! பெரியார் காலத்திற்குப் பிறகு, என்னைப் போன்றோர் இளைஞரணி பொறுப்பில் இருக்கும் காலத்தில் கிடைத்த பெரும் வாய்ப்பு! செந்துறை, அரியலூர் தோழர்களின் ஒத்துழைப்பு மற்றும் அரவணைப்புக்  கூடுதலாக இருந்தது! அலுவலகத்தை ஆசிரி யர் அவர்கள் திறந்து போதும் மிகுந்த உற்சாகம் ஏற்பட்டது!

மாநாடு சிறக்க நன்கொடைகள் அவசியம் என்றாலும், அதைக் கடந்த தன்னம்பிக்கை உணர்வை நாங்கள் பெற்றோம்!

அனிதாவின் ஊரான குழுமூரில் பொறியாளர் இராமச்சந் திரன் அவர்கள் தாமாக முன்வந்து  ரூ 50 ஆயிரத்தை வங்கிக் கணக்கில் செலுத்தியதும், நாம் கேட்காத நிலையிலும் நம்மைத் தேடி வந்து ஆயிரம், இரண்டாயிரம் கொடுத்த அந்த எளிய மக்களும் என்றும் நெஞ்சில் நிற்பர்! அரியலூரை கருஞ்சட்டை கடலாகப் பார்த்தது மட்டற்ற மகிழ்ச்சி! உழைப்பிற்கு கிடைத்த பெரும் பரிசாக இதனைக் கருதுகிறோம்!

"உங்களுக்கு இவ்வளவு கூட்டம் இருக்கிறதா?", எனக் கேட்காத உறவினர்கள், நண்பர்களே இல்லை. ஆம்!  இது கொள்கைக்காகக் கூடிய கூட்டம் என்று பதில் சொன்னோம்!

அதுபோன்று 2015 ஆம் ஆண்டு தமிழர் தலைவர் ஆசிரியரை வைத்து தாலி கட்டித் திருமணம் செய்து கொண்ட நான், அரியலூர் மாநாட்டில் அதே ஆசிரியர் முன்னிலையில் எனது இணையர் தாலியை அகற்றிக் கொண்டது பலராலும் பாராட்டைப் பெற்றது!

தந்தை பெரியார் காலத்தில் அரியலூரில் அய்யா எஸ்.எஸ். சிவசுப்பிரமணியன் அவர்கள் களப்பணியில் ஒரு பெரும் மாநாட்டை நடத்தி, மீதமான பணத்தில்  ஓர் இடமும் வாங்கி வைத்தார்கள்! அதுபோன்று ஆசிரியர் காலத்தில் அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்களின் துணையோடு இம்மாநாடு வெற்றி பெற்றுள்ளது!

அதேபோன்று தமிழ் நகர் குழுமம் சார்பில் மதிய உணவை 1500 பேருக்கு மேல் ஏற்பாடு செய்து பெரும் சாதனை செய்தார்கள்!

மாவட்ட அமைப்பாளர் இரத்தின.இராமச்சந்திரன்!

அரியலூரில் மாநாடு என்றதும் எனது மனநிலை மிக்க மகிழ்ச்சியாக இருந்தது! நாட்கள் செல்ல, செல்ல நன்கொடை பெறுவதில் கொஞ்சம் தயக்கம் இருந்தது. அப்போது ஆசிரி யரின் வரிதான் நினைவுக்குள் வந்து, என்னுள் எழுச்சியை ஏற்படுத்தியது!

ஆம்! நம்மால் முடியாதது வேறு யாராலும் முடியாது! வேறு யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்!

ஒருங்கிணைந்த பணிகள் எவ்வளவு முக்கியம் என்பதை இம்மாநாடு மூலம் அறிய முடிந்தது! குழுவாகச் செல்லும் போது நன்கொடைகள் ஒருபுறம், மாநாட்டு விளம்பரங்கள் பலவிதம் என்கிற அடிப்படையில் நல்ல பயனை அனுபவித்தோம்! என் வாழ்நாளில் கிடைத்த பெரும் மகிழ்ச்சிகளில் இந்த வரலாற்றுச் சாதனைப் படைத்த மாநாடும்  மிக முக்கியமானது!

மண்டலத் தலைவர் இரா.கோவிந்தராஜன்!

பேரூராட்சியாக இருந்து அரியலூர், அண்மையில் நகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது! பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டமும் கூட! இந்நிலையில் மாநில மாநாடு நடத்தும் அளவிற்கு நன்கொடைகள் பெற முடியுமா என்கிற தயக்கம் இருந்தது. எனினும் மாநில மாநாட்டை நடத்துகின்ற வாய்ப்பைத் தமிழர் தலைவர் அரியலூருக்கு வழங்கியதில் மட்டற்ற மகிழ்ச்சியும் இருந்தது!

நாங்கள் அனைவருமே உணர்ந்தது ஒன்றுதான்! குழு மனப்பான்மை மிக முக்கியம்! எதிர்பார்ப்பை விட வணிகப் பெருமக்கள் பெரும் ஆதரவு தந்தார்கள்! திராவிடர் கழகத்தின் வலிமை மற்றும் செயல்பாடுகளை அரியலூர் மக்கள் நன்றாகவே உணர்ந்திருந்தனர்!

மாநாட்டிற்குத் தமிழ்நாடு முழுவதிலும்  இருந்து தோழர்கள் வருவார்கள் என நினைத்திருந்தோம்; ஆனால் இவ்வளவு தோழர்கள் மனதை நிறைப்பார்கள் என நினைக்கவே இல்லை!  ஆக அரியலூர் மக்கள் வியக்கின்ற அளவிற்கு ஒரு மாநில மாநாட்டை   நடத்திவிட்ட மனநிறைவில்  இருக்கிறோம்!

இளைஞரணி துணைத் தலைவர் திராவிடவித்து!

மாநில இளைஞரணி மாநாட்டிற்காக இரண்டு மாத காலம் இரவு, பகல் பாராமல் உழைக்கும் வாய்ப்புக் கிடைத்தது! மாநாட்டு வசூல் பணி, விளம்பரப் பணி அனைத்திற்குமே சென்ற இடமெல்லாம் சிறப்பு!

சமூக காப்பணி உள்ளிட்ட அனைத்துப் பணிகளிலும் தோழர்களுடன் இணைந்து பணியாற்றியது என் வாழ்நாளில் மறவாத கால கட்டம்!

என் வாழ்நாள் முழுவதும் பெரியார் கொள்கைக்காக, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுடைய தலைமையில் என்றென்றும் சிறப்பாக செயல்படுவேன்!  மாநாட்டில் 18 ஆவது தீர்மானத்தை நான் வாசிக்கும் போது, அந்த வாணி மகாலில் எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சி!  அது மட்டுமின்றி மாநாட்டு மேடையில் எனது சுயமரியாதைத் திருமணமாக சிறப்பாக நடைபெற்றது!

அரியலூர் மண்ணில் காவி அரசியல் செய்பவர்களுக்குத்  தக்க பாடமாக கருப்புச் சட்டை கருங்கடலாக சூழ்ந்தது என்ற வரலாறு என்றும் என்  வாழ்நாளில் மறக்க முடியாது!

மும்பை பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரவிச்சந்திரன்!

அரியலூர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவே மும்பையில் இருந்து வந்திருந்தேன்! நாங்கள் மும்பையிலே வசிப்பதால் தமிழ்நாட்டுத் தோழர்களை ஒரே இடத்தில் பார்க்கும் வாய்ப்பை பெரிதும் விரும்புவோம்! ஆசிரியர் அவர்களைச் சந்தித்து மேடையிலே விடுதலை சந்தாவையும் வழங்கும் வாய்ப்புக் கிடைத்தது!

அரியலூர் வரலாற்றுச் சிறப்பு மிக்க மாநாட்டைத் தந்துள்ளது! அரியலூர் தோழர்களின் சிறந்த நிர்வாகத் திறனுக்கு எங்கள் பாராட்டுகள்! வழக்கமான நமது தோழர்களின் அந்தக் கம்பீரத் தோற்றம், விண்ணதிர மாநாட்டு முழக்கம், அதேநேரம் அந்தக் கட்டுப்பாடு என எத்தனை எத்தனை மாநாடுகளில் பார்த்தாலும் நமது உணர்ச்சி, மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

மும்பையில் கல்வி நிறுவனம் நடத்தி வரும் ஜேம்ஸ் தேவதாசன் என்கிற திமுக நண்பரும் கருஞ்சட்டை அணிந்து எங்களுடன் மாநாட்டிற்கு வருகை தந்தார். நன்கொடையாக ரூபாய் 10 ஆயிரமும் வழங்கினார்!

தமிழ்நாட்டு மக்கள் மீது எப்போதுமே எனக்கு ஒரு பிரமிப்பு இருக்கும்! தவிர சுவரெழுத்துகள், சுவரொட்டிகள், அழைப்பிதழ்கள் அனைத்துமே அங்கு நேர்த்தியாக இருக்கும்!

மும்பையில் இருந்து பெரியார் டி.வி - இல் மாநாட்டு நேரலையைப்  பார்த்துக் கொண்டிருந்த எனது மகள் மகன் இருவரும் நான் மேடையில் ஏறி ஆசிரியரைச் சந்தித்ததைப் பார்த்ததாகக் கூறினார்கள்!  

ஒரு மாநாட்டில் பங்கேற்க மூன்றாயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்ய வேண்டியுள்ளது! ஆனால் அந்தத் தூரத்தையும் கடந்து, எங்களுக்குள் ஒரு இணக்கத்தை ஏற்படுத்துகிறது! வேறெதுவும் தராத புத்துணர்ச்சியை மனதிற்குள் இட்டுச் செல்கிறது!

பெ.கணேசன், மாநிலத் தலைவர், மும்பை திராவிடர் கழகம்

கடந்த 1986 முதல் இயக்கச் செயல்பாட்டில் இருந்தாலும், 1992, பிப்ரவரி 14,15 இல் சேலத்தில் நடந்த திராவிடர் கழக மாநில மாநாடு, நீதிக்கட்சி பவள விழா மாநாடு தான் முதன் முதலாக நான் கலந்து கொண்ட மாநாடு!

அன்று முதல் கடந்த 30 ஆண்டுகளாகப் பல்வேறு மாநாடு களில் கலந்து கொண்டு வருகின்றேன்! அந்த வரிசையில் அரியலூரில் கடந்த 30.07.2020 - இல் நடந்த இளைஞரணி மாநாட்டில் கலந்து கொண்டது என் வாழ்நாளில் மறக்கவே முடியாது!

இளைஞரணி தோழர்கள் அணிவகுத்து நின்று, தமிழர் தலைவர் முன் மொழிந்த உறுதிமொழியை,  இளைஞரணி தோழர்கள் வழிமொழிந்த காட்சி உணர்ச்சிப் பேரலைகளை உருவாக்கியது!

பிறகு எழுச்சி மிகுந்த பேரணி தொடங்கியது! , உணர்ச்சிமிகு காட்சிகள் ஒரு கட்டத்தில், மகிழ்ச்சியில்  உணர்ச்சி வயப்பட்டு கண்ணீர் வடிக்கின்ற ஒரு நிலை ஏற்பட்டது! நம் இளைஞர்கள் சரியான இடத்திற்கு வந்து, சரியான தலைமையை ஏற்று பயணிக்கின்றனர் என்பது பெருமைக்குரியது!  

தமிழர் தலைவர் உள்ளிட்ட இயக்கப் பொறுப்பாளர்களின் கருத்துரைகள், இளைஞரணி தோழர்களின் சொற்பொழிவுகள், கருத்தரங்கம்,  திறந்த வெளி மாநாட்டில் அமைச்சர் பெரு மக்கள் ஆற்றிய உரையின் சிறப்புகள் என  அனைத்தும், எதிர் கால வரலாற்றில் காலம் கடந்தும்  பேசப்படும் என்பது உண்மை!

பரமசிவம், பொதுக்குழு உறுப்பினர், பொள்ளாச்சி

எனது இறுதிக் காலம் வரைக்கும் நினைவில் நிற்கும் அரியதொரு அரியலூர் மாநாடு இது! எனக்கும் அரியலூருக்கும் மிக நெருக்கமுண்டு! ஆசிரியர் அவர்கள் "அரியலூரில் மாநாடு" என்றதும் 'என்ன இந்த சிறிய ஊரிலா?' என்று நினைத்தேன்.                                                               

கடை வீதி வசூல் என்பது மாநாட்டை பெருமளவு  விளம்பரம் செய்துவிடும்! யாராவது பணம் கொடுக்காவிட்டால் கூட சிரித்தவாறே நம் தோழர்கள் திரும்பி வருவார்கள்! மானம் பாராத தொண்டு நம்முடையது!

மாநாட்டுப் பணி என்பது ஓரிரு நாள் பணியல்ல: பலப்பல நாள் சோர்வின்றி, மனமகிழ்வோடு செய்யக் கூடிய பணி! இதன் விளைச்சல் தான் இவ்வளவு இளைஞர் கூட்டத்தை இங்கே திரட்டியுள்ளது!

1971 இல் பகுத்தறிவாளர் கழகத்தில் இணைந்தது முதல் 1999 இல் பணி ஓய்வு பெற்ற நிலையில், எவ்வித சலனமும் இன்றி மகிழ்வோடு வாழ்ந்து வருகிறேன்!

"89 வயதான நான் 29 வயதாகத் திரும்புகிறேன்", என ஆசிரியர் கூறினார் என்றால், அதைவிட இந்த மாநாட்டுச் சிறப்பை என்ன வார்த்தைகளால்  வர்ணிப்பது?

இராசா, புதுச்சேரி மண்டல இளைஞரணி தலைவர்

அரியலூரில் மாநாடு அறிவித்தவுடன், அதனைச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் தமிழ்நாடு முழுவதுமுள்ள  இளைஞரணி தோழர்களிடம் இருந்தது. அரியலூர் தோழர்கள் ஒவ்வொருவரும் தம் வீட்டு நிகழ்ச்சி போல அவ்வளவு உற்சாகமாகப் பணியாற்றினார்கள். அதன் பலனையும் அறுவடை செய்துள்ளனர்.

அரியலூர் கழகக் கொடி காடாகக் காட்சியளித்தது! புதுச் சேரியில் இருந்து காலை 10 மணிக்கு வரும் போதே  அரங்கம் நிறைந்துவிட்டது! கன்னியாகுமரி முதல் திருத்தணி வரை தோழர்களைப்  பார்க்க முடிந்தது!

அதேபோல பேரணியில் 17 ஆவது மாவட்டமாக நாங்கள் சென்றோம். பொதுக் கூட்ட மேடைக்குச்  சென்றால் உட்கார இடமில்லை!  எங்களுடன் வந்த பொதுவான சில நண்பர்கள் கூட்டத்தையும், நிகழ்ச்சியையும் பார்த்துவிட்டு பேரதிர்ச்சி அடைந்தார்கள் என்றே சொல்ல வேண்டும்!

தனிப்பட்ட வகையிலும் எனக்குப் பெரு மகிழ்ச்சி. நான் வசிப்பது   புதுச்சேரியாக  இருந்தாலும், சொந்த ஊர் பெண்ணா டம். ஆக எங்கள் அருகாமை ஊரில் முத்தாய்ப்பான மாநாட்டை  கண்டுகளித்தது  மறக்கவே முடியாத வரலாற்று நிகழ்வு!

செல்ல பாண்டியன், மேனாள் ஒன்றியச் செயலாளர்

மாநாட்டிற்கு முதல் நாள் காலையிலே தோழர்கள் வரத் தொடங்கி விட்டார்கள். அரியலூர் மக்கள் வியப்படையும் வகையில் நமது கழகத் தோழர்களின் வாகனங்கள் அரியலூரையே நிரப்பிவிட்டது!

பேரணியை இருபுறமும் மக்கள் சாரை, சாரையாகப்  பார்த்தபடியே இருந்தனர். மாற்று இயக்கத்தைச்  சார்ந்த எனது நண்பர் தம் முகநூல் பக்கத்தில், 5 ஆயிரம் பங்கேற்ற மாநாடு எனப் பதிவு செய்திருந்தார்!  இதில் வேடிக்கை என்னவென்றால், இவ்வளவு கூட்டம் இருந்தும் "டாஸ்மாக்" கடையில் யாருமே இல்லையே என ஒரு நண்பர் என்னிடம் கேட்டுச் சென்றார்.

இயக்கத்தில் இருந்து சற்றே விலகி இருந்த என் போன்றோரை, மீண்டும் இணைத்துக் கொள்ள வைத்த மாநாடு என்றால் அது மிகையல்ல!

கழகப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன்

அரியலூர் மாநாடு மிகப்பெரிய வெற்றியை ஈட்டி தந்துள்ளது! மாநாடு முடிந்த நாள் முதல் இன்று வரை மக்கள் மத்தியிலே பேசப்படும், போற்றப்படும் நிகழ்வாக திகழ்கிறது!

அரியலூர் மாவட்டத்தை பொறுத்த அளவில் கனிம வளம் நிரம்பிய மாவட்டம்! வட புலத்தார் செழுமையாக சிமெண்ட் ஆளை நிறுவி பிழைப்பதற்கும், கோடான கோடி லாபம் ஈட்டுவதற்கு உதவிடும் மண். மண்ணின் மைந்தர்களின் உழைப்புச் சுரண்டல் மிகப்பெரிய அளவில் நடைபெற்று வருகிறது.

அரியலூர் மண்ணைத் தமிழ் மணம் கமழச் செய்த புலவர் பொன்னம்பலனார் பிறந்த மண். பல பொதுவுடைமையாளர்கள், சமதர்மிகள் பிறந்து சிறந்த மண். அதேபோல பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் கால் பதிக்காத இடமே இல்லை என்று சொல்லக்கூடிய வண்ணம் பெரியாரின் கொள்கை வீச்சு செழித்த மண். அதன் தாக்கத்தை மாநாட்டுக்கான பணிகளை மேற்கொண்ட போது நேரில் அறிய முடிந்தது.

ஆயினும் மதவெறி அமைப்பு திட்டமிட்டு அந்த மண்ணை காவி மண்ணாக மாற்றுவதற்கு முழு முயற்சியை மேற்கொண்டு வருகிறது. மதவெறிக்கும், ஜாதிய ஒடுக்கு முறைக்கும் இந்த மண்ணில் இடமில்லை என்பதை எதிரிகள் உணரும் வண்ணம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் அறிவிக்கப்பட்ட மாநாடு இது.

திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாடு ஒரு சிறிய ஊரிலா? அரியலூர் தாங்குமா? என்றெல்லாம் நாங்கள் நினைத்தது உண்டு. ஆனால் வரலாறு படைக்கும் வெற்றியை மாநாடு கண்டது; அதைக் கண்டு பூரித்தோம்!

ஆம் அரியலூர் மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்களின் கூட்டு முயற்சியே, கடின உழைப்பே மாநாட்டின் வெற்றிக்கு காரணம்! எல்லா வகையிலும் இந்த மாநாடு வெற்றிகரமான மாநாடு!

இளைஞர்களின் எழுச்சிப் பாசறை திராவிடர் கழகம்! திராவிடர் கழகத்தில் இவ்வளவு இளைஞர்களா என்று வியக்கும் வண்ணம் இளைஞர்களின் அணி வரிசை மற்ற மாநாடுகளுக்கும் இந்த மாநாட்டுக்கும் ஒரு வேறுபாடு உண்டு. சிறப்பு அழைப்பாளர்கள் பேச்சாளர்கள் என்று மற்ற அமைப்புகளிலே இருக்கக் கூடியவர்கள் மற்ற மாநாடுகளுக்கு அழைக்கப்படுவது உண்டு. அவர்களின் வருகையை ஒட்டி கூட்டம் கூடியதாக சொல்லப்பட்டதும் உண்டு! ஆனால் இந்த மாநாட்டில் அதற்கு வாய்ப்பில்லை. அனைவரும் கழக முன்னணியினரே பங்கேற்ற மாநாடு!

மாவட்ட அமைச்சர் மட்டும் அழைக்கப்பட்டார். அவரும் கொள்கை குடும்பத்தை சேர்ந்தவர் என்ற அடிப்படையில். அவரும் சிறப்பான கருத்துகளைப் பதிவு செய்தார். நன்கொடை திரட்டிய போதும், மாநாட்டு பணிகளைச் செய்த போதும் மக்களின் ஆதரவு பெரியாரின் இயக்கத்திற்கு எந்த அளவு இருக்கிறது என்பதை நேரில் காண முடிந்தது.

மிகப்பெரிய ஊக்கத்தை, உற்சாகத்தை நாங்கள் பெற்றோம்! தமிழர் தலைவர் எதை நினைத்தாலும், செய்தாலும் அது சரியாகத்தான் இருக்கும் என்பதை உணர்ந்து மகிழ்ந்தோம்!

நூற்றுக்கணக்கான புதிய வரவுகளின் சங்கமமாக அரியலூர் மாறும் என்பதே மாநாடு தந்த சிறப்புச் செய்தி ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி!

இப்படியாக அரியலூர் மாநாடு குறித்து, பல தரப்பட்ட தோழர்களிடம் நேர்காணல் செய்த அதேவேளையில் இம்மாநாட்டை ஒருங்கிணைத்த, பல நாள்கள் அரியலூரில் தங்கிப் பணியாற்றிய இரா.ஜெயக்குமார் என்ன சொல்கிறார்!

கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார்!

1998 ஆம் ஆண்டு ஈரோட்டில் நடைபெற்ற இளைஞரணி மாநாட்டில் முதல் சீருடை அணிவகுப்பு நடைபெற்றது. அதுதான் இளைஞரணி செயலாளராக நான் பணியாற்றிய முதல் மாநாடு! தொடந்து 2002 ஆம் ஆண்டு சேலம் போஸ் மைதானத்தில் 3000 இளைஞர்கள் சீருடை அணிவகுப்பு நடத்தி பிரமாண்டம் காட்டினார்கள்! அதன்பிறகு 2013 இராஜபாளையம் மாநாடும் பெரியளவு பேசப்பட்டது. தவிர இளைஞரணி சார்பில் மண்டல மாநாடுகள் தமிழ்நாடு தோறும் நடத்தப்பட்டன.

இப்படியான சூழலில் தான் 2019 ஆம் அரியலூர் மாநாட்டை தமிழர் தலைவர் அறிவித்தார்கள். கரோனா பிரச்சினைக் காரணமாக அது தள்ளிப் போனது! பின்னர் 2022 ஏப்ரல் 30 ஆம் தேதி மீண்டும் அறிவிப்பு வெளியான நிலையில், தோழர்கள் களம் இறங்கினர். பொதுவாக ஒரு மாவட்டத்தில் மாநில மாநாடு என்றால் பிற மாவட்டத்  தோழர்கள் சிலரும் அங்கு தங்கி பணி செய்வார்கள். ஆனால் இந்த மாநாட்டை முழுவதுமாக அரியலூர் தோழர்களே முன்னெடுத்து சாதனைப் படைத்துவிட்டனர்!

அதிலும் இளைஞர்கள் முழுமையாகத் தங்களின் ஆற்றலை வெளிப்படுத்திய காட்சியைக் காண முடிந்தது. மாவட்டக் கழகத்  தோழர்களும் தங்களின் ஒன்றரை மாத உழைப்பை இதற்குக் கொடுத்துள்ளனர். அதேபோன்று மாநாட்டிற்கான  நிதியையும், வேறு எங்கும் எதிர்பார்க்காமல் அவர்களே ஏற்பாடு செய்து கொண்டனர்! ஜாதி, மத அமைப்புகள் வலுவாக நினைக்கும் காலகட்டத்தில், அதுவும் சிறிய ஊர் என்கிற எண்ணம் இருந்த வேளையிலும் மிகப் பெரிய எழுச்சியை அவர்கள் உருவாக்கி விட்டார்கள்.

திராவிடர் கழகத்தில் ஒரு சிலரே இருப்பார்கள், வயதான வர்களே இருப்பார்கள் என்கிற மாயத் தோற்றம் தவிடு பொடி யானது! திரண்ட இளைஞர்களின் அணிவகுப்பு அரியலூர் மக்களை ஆச்சரியத்தில் திளைக்க வைத்துவிட்டது. பெரியா ருக்குப் பின், ஆசிரியர் காலத்தில் பல்லாயிரம் இளைஞர்கள் அதிகமானதை மாநாடு உணர்த்தி மகிழ்ந்திருக்கிறது!

அரியலூர் மாவட்டத்தின் 6 ஒன்றியங்களிலும் நமது அமைப்புகள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன!

மேலும் இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்று, மாநாடு போன்ற நிகழ்வில்  பெரிய மேடை அமைக்கப்படும் போது நிறைய தலைவர்களை வெளியில் இருந்து அழைப்பது வழக்கம்! பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் வரும்போது கூட்டமும் அதிகரிக்கும் என்பதும் ஒரு காரணமாக இருக்கும்! ஆனால் அரியலூர் மாநாட்டில் நம் தலைவர் மட்டுமே பங்கேற்று பெரும் சாதனை படைத்த மாநாடாக இது அமைந்துவிட்டது.   ஒரு இளைஞரணி மாநாட்டை மற்றொரு இளைஞரணி மாநாடு தான் மிஞ்ச முடியும் என்கிற அடிப்படையில், தமிழர் தலைவரின் அடுத்த அறிவிப்பிற்காகக் காத்திருக்கிறோம்!

நன்றி!

No comments:

Post a Comment