திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் பணம் பெற்றுக்கொண்டு, தரிசனத்துக்காக பக்தர்களை கோயிலுக்குள் அழைத்துச் செல்ல முயன்ற அர்ச்சகரை காவலர்கள் தடுத்தனர். இதனால், அர்ச்சகர்கள் கும்பலாகச் சேர்ந்து காவலர்களை அடித்துள்ளனர்.
திருச்செந்தூர், சுப்பிரமணிய சாமி கோயில். தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் இங்கு வருகின்றனர். சாமிகும்பிட செல்பவர்கள் வரிசையில் பல மணி நேரம் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. தினமும் அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி கும்பிடுகின்றனர்.
இந்தக் கோயிலில் பக்தர்கள் தரிசனத்துக்குக் கட்டுப்பாடுகள் இருக்கின்றன. ரூ.100 கட்டண தரிசனம் மற்றும் பொதுத் தரிசனம் ஆகிய இரண்டு வழிகளில் மட்டுமே பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப் படுகின்றனர். இது தவிர, 60 வயதைக் கடந்த முதியவர்கள் சுவாமி தரிசனம் பெற்றுச் செல்ல தனிப்பாதை அமைக்கப்பட்டிருக்கிறது. கட்டணம் மற்றும் பொது தரிசன வரிசைகளில் மக்கள் நீண்ட நேரம் காத்திருந்து சாமியை தரிசனம் செய்துவிட்டுச் செல்கிறார்கள்.
இந்த நிலையில், அர்ச்சகர் ஒருவர் - கோவிலுக்கு வந்தவர்கள் சிலரிடம் பணம் பெற்றுக்கொண்டு மூத்த குடிமக்கள் செல்லும் வரிசையில் அழைத்துச் சென்றி ருக்கிறார். அந்த வரிசையின் முன்பு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தமிழ்நாடு காவல்துறையினர் அந்த அர்ச் சகரையும், அவருடன் வந்தவர்களையும் தடுத்திருக் கின்றனர். இதனால் கோபமடைந்த அர்ச்சகர்கள் சிலர் கும்பலாகச் சேர்ந்து காவலர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம் முற்றிய நிலையில், பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர்களின் கன்னத்தில் அறைந்தும், சட்டையைப் பிடித்து இழுத்து முதுகில் அடித்துமுள்ளனர்; இதை அங்கிருந்த சிலர் கைப்பேசியில் காட்சிப் பதிவு செய்தனர். உடனடியாக திருக்கோயில் காவல் நிலைய காவலர்கள் விசாரணை நடத்தினர்.
'100 ரூபாய் கட்டண தரிசனம், பொது தரிசனம், மூத்த குடிமக்களுக்கான இலவச விரைவு தரிசனப் பாதை ஆகிய மூன்று வழிகளில்தான் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.
நாளுக்கு நாள் கூட்ட நெரிசல் அதிகமாவதால் பிரச்சினை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால்தான் பாதுகாப்பில் ஈடுபட்டுவருகிறோம். ஆனால், அர்ச்சகர்கள் 'விரைவாக அழைத்துச் செல்கிறோம்' - என பணத்தைப் பெற்றுக்கொண்டு மூத்த குடிமக்கள் வரிசையில் கோயிலுக்குள் அழைத்துக்கொண்டு போகிறார்கள். இதைப் பார்த்த மற்ற பக்தர்கள் எங்களிடம் புகார் சொல்கிறார்கள். இப்படி அழைத்துச் செல்வது ஒரு முறை இரண்டு முறை அல்ல, அடிக்கடி இப்படித்தான் அழைத்துக்கொண்டு போகிறார்கள்,' என்று காவல்துறை சார்பில் கூறப்படுகிறது.
கோயில் - பக்தி - தரிசனம் எந்த யோக்கியதையில் இருக்கின்றன என்பதற்கு இவற்றைவிட வேறு என்ன சாட்சியம் தேவை?
ஏதோ திருச்செந்தூரில் மட்டும் இது நடக்கிறது என்று எண்ண வேண்டாம்! 'தீராத வினை எல்லாம் தீர்த்து வைப்பான் கோவிந்தன்?' என்று முழக்கம் போடும் திருப்பதி வெங்கடேசன் கோயிலிலும் இந்தப் பித்தலாட்டம் அரங்கேறுவது அன்றாடக் காட்சியாகும்.
கோவில் நிருவாகத்திற்கு நன்கு தெரிந்திருந்தும், கண்டு கொள்வதில்லை. காரணம் கோயில்களில் இருக்கும் அர்ச்சகர்கள் குண்டர்களாகவும், கோதாவுக்குள் குதிப்பவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதுதான்.
சிதம்பரம் நடராசன் கோயிலில் சிற்றம்பல மேடையில் திருவாசகம் பாடிய ஆறுமுகசாமி ஓதுவாரை கோயில் தீட்சதர்கள் அடித்து கை கால்களை முறிக்கவில்லையா? கலைஞர் சொன்னது போல - ஆமாம் "கோயில் கொடியவர்களின் கூடாரமாகத்தான்" இருக்கிறது.
No comments:
Post a Comment