பகுத்தறிவு - அறிவியல் களங்கள் இதற்குப் பிறகுமா கடவுள் போதை தேவை? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 1, 2022

பகுத்தறிவு - அறிவியல் களங்கள் இதற்குப் பிறகுமா கடவுள் போதை தேவை?

கி.வீரமணி

கடந்த சில நாள்களில் ஏடுகள் - தொலைக்காட்சி களில் வந்த செய்திகளைப் படிக்கும், பார்க்கும் பக்தர் கள் சிறிதாவது தங்கள் பகுத்தறிவைப் பயன்படுத்தி சிந்தனைக்கு வேலை கொடுக்க வேண்டாமா?

கடந்த சில மாதங்களில், தஞ்சைக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் (களிமேடு) தேர் இழுக்கும் போது தேர் மின் கம்பியில் பட்டதினால் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிர் இழந்த மனித சகோதரர்கள் பற்றிய செய்தி பகுத்தறிவாளர்களாகிய நாம் உள்பட பலரது நெஞ்சையும் கசக்கிப் பிழிகிறது!

"சர்வசக்தி" - ‘கருணையே வடிவான கடவுள்' ‘தயாபரன்' என்பது திட்டமிட்ட பொய் - கற்பனைக் கூற்று என்பது இந்த கோர சம்பவத்திற்குப் பிறகாவது தெரிய வேண்டாமா?

நேற்று முன்தினம் (30.7.2022) ஆந்திர மாநிலத்தில் கோதாவரி நதியின் வெள்ளப் பெருக்கில் ஒரு கோயிலே அடித்துச் செல்லப்பட்டது என்று கூறப்பட்ட செய்தியில், பக்தர்கள் யாரும் கோயிலுக்குப் போக வேண்டாம் என்ற தொடர் அறிவிப்புக் காரணமாக உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை. வெறுங்கோயில் “வெள்ளத்தில்‘ (சிலையுடன்) அடித்துச் செல்லப்பட்டது. கடவுளர்களைக் காப்பாற்றிக்கொள்ள கடவுளால் முடியவில்லை.

‘கடவுளை நம்பினோர் கைவிடப்ப(ட்)டார்' என்று கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ‘கிந்தனார்‘ காலட்சேபத்தின் துவக்கத்தில் கூறியது நினைவுக்கு வருகிறது.

அதுபோல நேற்று (31.7.2022) புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் தேரிழுத்தபோது - வேகமாக இழுத்ததால் தேர் தலைக்குப்புற கவிழ்ந்து பலருக்கும் படுகாயம்; மருத்துவமனையில் பலர் சிகிச்சை பெறுகின்றனர்!

வடக்கே உருகுகின்ற பனி லிங்கத்தைப் பார்க்க உத்ரகாண்ட் பகுதிக்கு செல்லும் பக்தர்கள் ஆண்கள் - பெண்கள் பலர் அமர்நாத் யாத்திரையின்போது பலரும் உயிரிழந்த கொடுமைகள்.

விருதுநகர் மாவட்டம் சிறீவில்லிபுத்தூர் தாண்டிய சதுரகிரி மலையில் கடும் வெள்ளத்தில் சிக்கி அவதிப் பட்ட பக்தர்கள் நிலை எவ்வளவு பரிதாபம் என்ற செய்தியும் மிகவும் வருத்தத்திற்குரிய வேதனையான தமிழ்நாட்டு பக்தர்கள் பற்றிய செய்தி அல்லவா?

கோயில் கருவறைக்குள் காஞ்சிபுரம் தேவநாதன் என்ற அர்ச்சகப் பார்ப்பனர் பெண்களிடம் நடந்து கொண்ட பாலியல் முறைகேடுகள் எளிதில் மனிதர் களின் நினைவை விட்டு நீங்கிவிடக் கூடியவைகளா?

சிறீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் பத்ரிநாத் நடத்திய காம வேட்டையைத்தான் மறக்க முடியுமா?

கோயில் சொத்துக்களைப் பற்றி வழக்கு போடு வோர், அதற்காக வாதாடுவோர், அதற்காக இந்து அறநிலையத் துறை மீது சீறிப் பாய்ந்து சினத்தீயை வீசும் கனம் நீதிபதிகள் - கோயிலில் நடக்கும் ஒழுங் கீனம், ஒழுக்கக்கேடுகள் மிகவும் அருவருக்கத்தக்கவை என்பது பற்றி ஏனோ கண்டு கொண்டதில்லை - தீர்ப்புகளில் குறிப்பிடுவதில்லை! எத்தனையோ "தேவநாத லீலைகள்", தெரிந்தும் தெரியாமல் நடந்து வருகின்றனவே!

கடவுளர்களின் சிலைகள் கடத்தலைத் தடுக்க ஒரு தனிக் காவல் படை, மீட்க தனிப்பிரிவு - எல்லாம் ‘சர்வசக்தியுள்ள கடவுள்' என்பது வெறும் ‘புருடா'தான் என்பது புரியவில்லையா? இவை ஏனோ புரிவதில்லை?

வடலூரார் பாடியபடி ‘எல்லாம் பிள்ளை விளையாட்டாகவே' நாள்தோறும், நாடு முழுமையும் நடைபெறுகின்றன.

பக்திப் போதை ஏறியதால் இந்த சுய சிந்தனைக்கு வேலை தருவதேயில்லை! எண்ணிப் பாருங்கள் பக்தர்களே!

வெளிநாட்டிலிருந்து திருடிய சிலை மீட்புக்குப்பின், தீட்சை, தீட்டுக் கழித்து உள்ளே மீண்டும் கருவறைப் பிரவேசம் என்பதெல்லாம் பிள்ளை விளையாட்டு ஒன்றல்லாமல் வேறு என்ன? 

பக்தி வந்தால் புத்தி போகும்!

புத்தி வந்தால் பக்தி போகும்!

என்ற தந்தை பெரியாரின் வார்த்தைகள் எவ்வளவு அப்பட்டமான உண்மை என்பது புரியவேண்டாமா?

புதுப்புது கடவுள்கள், புதுப்புது புராணக்கதைகள், அதை அறிவியல் ஊடகமான தொலைக்காட்சியில் அதன் மகிமைகள் என்றெல்லாம் சொல்லி எல்லாம் பரப்புவது - பக்திப் போதையை ஊட்டுவது அதையே மதவாத சக்திகள் தங்களது பிரச்சாரக் களங்களாக, தளங்களாகக் கொண்டு, காலூன்றத் திட்டமிடுவது இந்த போதையினால் என்பதற்காகவே, தந்தை பெரியார்,

‘கடவுளை மற, மனிதனை நினை'

என்று கூறினார். சற்றே சிந்தியுங்கள் பக்தர்களே!

No comments:

Post a Comment