ஆசிரியர் பயணம் முடிவில்லாதது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 27, 2022

ஆசிரியர் பயணம் முடிவில்லாதது!

 ‘விடுதலை’ என்பது தினத்தாள் அல்ல, தினந்தோறும் உறையைவிட்டு உருவப்படும் வாள். ஏனென்றால், அதனை உருவாக்கிய தந்தை பெரியார் ஓர் ஆள் அல்ல. அவர் ஓர் உலைக்களம்!

உலைக்களத்தால் உருவாக்கப்படுவது எப்போதும் மொன்னையாக இருக்காது. எப்போதும் வன்மையாக இருக்கும். அத்தகைய வன்மை பொருந்திய வாள் தான் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். அவரை 'விடுதலை' ஆசிரியர் நாற்காலியில் அழைத்து வந்து உட்கார வைத்தவர் பெரியார். அதனால் தான் பெரியார் இருந்து நடத்தினால் எப்படி நடத்துவாரோ அப்படியே 'விடுதலை'யை அறுபது ஆண்டுகள் கடந்தும் நடத்தி வருகிறார் ஆசிரியர்.

ஆசிரியராக இருந்து - சில பல ஆண்டுகள் கழித்து தந்தை பெரியார் பாராட்டி இருந்தார் என்றால் யாருக்கும் அது வியப்பைத் தராது. ஆனால் 'ஆசிரியராக அமர்ந்த அன்றே' ஆசிரியரைப் புகழ்ந்து எழுதியதில் தான் தந்தை பெரியாரின் தொலை நோக்கு புரிகிறது. *நண்பர் வீரமணி அவர்கள் தனது வாழ்நாளைச் சுயநலமற்ற பொதுத் தொண்டில் செலவு செய்ய விரும்புவதாக முன் வந்தார்.

* கெட்டிக்காரத் தன்மையும் புத்திக் கூர்மையும் மிக்கவர்.

* சுயநலமில்லாதவர்

* எந்தவித பொருள் ஊதியத்தையும் கருதாமல் பொதுத்தொண்டு செய்ய ஒருவர் வருகிறார்.

* இது உவமை சொல்லக் கூடாத ஒரு மாபெரும் காரியம் ஆகும்.

* அவருடைய ஏகபோக ஆதிக்கத்தில் ‘விடுதலை’யை ஒப்படைத்து விட்டேன்.

* அவர் இப்பொறுப்பை ஏற்றுக் கொண்டது கிடைக்க முடியாத ஒரு நல்வாய்ப்பு!

- இவை அனைத்தும் பெரியார் அவர்கள் 1962-1964 காலக்கட்டத்தில் சொன்னவை ஆகும். ஆசிரியராக ஆனதும் ஆசிரியரைப் பற்றிச் சொன்னது. ஒவ்வொரு சொல்லும் ஆயிரம் சொற்களுக்குச் சமமானது.

அதற்கு 6-7 ஆண்டுக்கு முன்னதாக கடலூரில் ஒரு கூட்டம். அய்யா பேசுகிறார். “வீரமணியவர்கள் நல்ல படிப்பாளி. இன்னும் பத்து நாள்கள் போனால் எம்.ஏ.என்று போட்டுக் கொள்வார். அவர் திராவிடர் கழகத்துக்கு ஒரு நிதி போன்றவர். அதைப்பற்றி எனக்கு மிகவும் மகிழ்ச்சி” என்று பேசி இருக்கிறார் பெரியார். ‘நிதி போன்றவர்’ என்கிறார் அய்யா. பணத்தின் வலிமை அனைவர்க்கும் தெரியும். பெரியாருக்கும் தெரியும். அதனால் தான் ‘நிதி போன்றவர்’ என்று அளந்து சொல்லி இருக்கிறார் அய்யா. இத்தகைய பாராட்டுகள் அனைத்தையும் அறு பது ஆண்டுகளுக்கு முன்னால் அய்யாவிடமே பெற்றவர் ஆசிரியர் அவர்கள். அறுபது ஆண்டுகள் கழித்து நாம் சொல்ல என்ன இருக்கிறது!

அய்யாவின் கணிப்பைப் பாராட்டுவதா? ஆசிரியரின் பணியைப்  போற்றுவதா?

நாளிதழ் நடத்துவது என்பதை விற்பனையைப் பொறுத்த விவகாரமாக மட்டும் சிலர் பார்த்து மிகவும் சிரமமான காரியம் என்பார்கள். கொள்கைக்காக நடத்துவது தான் சிரமமான காரியம் . தாளை, தலைதாளாமல் நடத்தியதில் தான் ‘ஆசிரியரின்’ பலம் என்பது இருக்கிறது. ‘விடுதலை’யின் கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொள்வதற்காக பெரியார் அவர்கள் ஓர் ஆளைத் தேடவில்லை. ‘விடுதலை’யின் கொள்கைகளைக் கொண்டு செலுத்துவதற்காக ஓர் ஆளைத் தேடினார். அகப்பட்டார் 'ஆசிரியர்'. அது தான் மிகமுக்கியம். அதில் இருந்து நிதி லாபம் தேட நினைக்கவில்லை பெரியார். நீதி லாபம் கிடைக்க வேண்டும் என்று நினைத்தார் பெரியார். செயல்படுத்திக் காட்டினார் ஆசிரியர்.

அய்யா இருந்த காலத்தைக் கடந்து - மறைந்தது முதல் தமிழ்நாட்டில் ‘சமூகநீதி’யை நிலைநாட்ட ‘விடுதலை’ உழைத்த உழைப்பில் தான் ஆசிரியரின் பேராளுமை அடங்கி இருக்கிறது. தமிழ்நாட்டைக் கடந்து இந்தியா முழுமைக்குமான சமூகநீதியாக அது ஆக்கப்பட்டது. அப்படி ஆக்கப்படும் என்பதை உண்மையில் அய்யா கூட நினைத்திருக்க மாட்டார்கள். தமிழ்நாடு எல்லைக்குள் இருந்து இந்திய எல்லையாக சமூகநீதித் தத்துவத்தை பரப்பியது தான் ஆசிரியரின் விரிந்த பார்வை. அந்தப் பார்வைக்கு 'விடுதலை' வித்திட்டது.

தமிழ்நாட்டை - குறிப்பாக பெரியார் திடலை சமூகநீதியின் தாய்வீடாக வடபுலத் தலைவர்கள் அனைவரும் நினைக்கக் காரணம், ஆசிரியரும் விடுதலையும் தான். சமூகநீதித் தத்துவத்துக்கான கேள்வியை எழுப்புவதற்கும் பதிலைப் பரப்புவதற்கும் ஒன்றே ஒன்று தேவை. அந்த ஒன்றாக ‘விடுதலை’ ஆசிரியர் இருந்தார். கைகாட்டியா கலங்கரை விளக்கமா, மைல் கல்லா, தொலை நோக்கியா, எக்ஸ்ரேயா, ஸ்கேனா எதுவாக வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள். அதுவாக இந்த அரை நூற்றாண்டு காலம் இருந்தவர் ‘விடுதலை’ ஆசிரியர்.

அடுத்த நூற்றாண்டுக்கும் - மனித சமுதாயத்துக்குத் தேவை என்பதை மனித சமுதாயம் மறுக்காது. உணவும், மருந்தும் போல உதவப் போவதுதான் ‘விடுதலை’. அதன் தயாரிப்பு ரெசிபி என்பது ஆசிரியர் அவர்களே!

அவர் ஆசிரியராகவும் இருக்கிறார். மாண வராகவும் இருக்கிறார். தலைவராகவும் இருக்கிறார். தொண்டராகவும் இருக்கிறார். எண்ணமாகவும் இருக்கிறார். எழுத்தாகவும் இருக்கிறார்.

‘விடுதலை’யை உருவாக்குபவராகவும் இருக்கிறார்.

கெடுதலையைத் தடுப்பவராகவும் இருக்கிறார்.

அவர் பெரியாராகவும் இருக்கிறார். வீரமணியாகவும் இருக்கிறார்.

வாழ்க ‘விடுதலை!’

வாழ்க ‘ஆசிரியர்!’.

No comments:

Post a Comment