சென்னை,ஆக.20- பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளில் திருத்தங்கள் செய்து, தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் ஆண்கள், பெண் பயணிகளை முறைத்துப் பார்த்தல், விசில் அடித்தல், கண் சிமிட்டுதல், பாலியல் ரீதியிலான பாடல்களைப் பாடுதல், வார்த்தைகளை உச்சரித்தல் போன்ற ஆபாச செயலை செய்யக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெண் பயணிகளின் நாகரிகத்தை சீண்டும் நோக்கில் பெண் பயணி அல்லது சிறுமிகளிடம் தவறான நடத்தையில் ஈடுபடும்போது, நடத்துநர் நியாயமான எச்சரிக்கையுடன் பயணிகளை இறக்கிவிடலாம் அல்லது வழியில் ஏதேனும் காவல் நிலையத்தில் ஒப்படைக்கலாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பெண் பயணிகள் அல்லது சிறுமிகளுக்கு வாகனத்தில் ஏறவோ, இறங்கவோ உதவுகிறேன் என்ற சாக்குப்போக்கு சொல்லி தொடக்கூடாது, அவர்களின் பயணத்தின் நோக்கம் குறித்து கேள்விகள் கேட்கக் கூடாது, விரும்பத் தகாத மற்றும் வெளிப்படையான பாலியல் உணர்வுகளை உள்ளடக்கிய செயல்களில் ஈடுபடக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பேருந்துகளில் புகார் புத்தகத்தை பராமரிக்க வேண்டும், நடத்துநர் இல்லாதபோது ஓட்டுநரே பொறுப்பேற்க வேண்டும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment