இந்தியா ஒரு நாடு என்னும் சதியின் பின்னணி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 3, 2022

இந்தியா ஒரு நாடு என்னும் சதியின் பின்னணி!

2014 - நவம்பரில் தெற்கு இரயில்வே குரூப்-டி பணியாளர் தேர்வு  ஒன்றை நடத்தியது. இதற்காக தமிழ் நாளேடுகளில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கும்போது இணைக்கும் சான்றிதழ் நகல்களுக்கு அரசு அதிகாரிகளின் சான்றொப்பம் பெற வேண்டியதில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆங்கில நாளிதழ் விளம்பரங்களில் வெளியிடும்போது அரசு அதிகாரிகளின் அத்தாட்சி பெற்ற சான்றிதழை இணைக்கவேண்டும் என்று குறிப்பிடப் பட்டிருந்தது.

இதனால் சான்றிதழ்களில் அத்தாட்சி பெறாமல் விண்ணப்பித்திருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டரை இலட்சம் பேரின் விண்ணப்பங்களை இரயில்வே நிராகரித்துவிட்டது. பீகார் போன்ற வட மாநிலங்களிலிருந்து விண்ணப்பித்திருந்தவர்களுக்கு தேர்வு நடத்தி டிராக்மேன், போர்ட் மேன், சபாய்வாலா, கலாசி போன்ற பணிகளுக்கு ஆயிரக்கணக்கானவர்களை பணியில் சேர்த்துவிட்டது. 

2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக இருந்த 4,460 பணியிடங்களுக்கு விளம்பரம் செய்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 15 என நிர்ணயிக்கப்பட்டியிருந்தது. இதற்கான விளம்பரம் வட இந்தியாவில் மார்ச் 15ஆம் தேதியே வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டிலோ 15 நாள்களுக்கு முன்புதான் விளம்பரம் செய்யப்பட்டது. இணையத்தில் தமிழர்கள் விண்ணப்பித்தபோது சர்வர் வேலை செய்யவில்லை. அதற்குமுன்பே வட இந்தியர்கள் அனைவரும் விண்ணப்பித்துவிட்டனர்.

சென்னை பெட்ரோலிய நிறுவனத்தில் வேதியியல் பொறியாளர் பணிக்கான நேர்காணலுக்கு ஒரு பணிக்கு மூவர் வீதம் 66 பேர் அழைக்கப்பட்டனர். அதில் ஒருவர் கூட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் அல்லர்.

இந்த பெட்ரோலிய நிறுவனத்தில் 2003க்குப் பிறகு வட இந்தியர் படிப்படியாக உள்ளே திணிக்கப்பட்டனர். இப்போது வட இந்தியர்கள் மட்டுமே அதிகாரிகளாக நியமிக்கப்படுகின்றனர். அதற்கு ஏதுவாக நேரடியாக ஆட்களைத் தேர்வு செய்ததை மாற்றி, போட்டித் தேர்வுகளை நடத்தும் பொறுப்பை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளனர். போட்டித் தேர்வுகளில் முறைகேடு செய்து வட இந்தியர்கள் மட்டும் அதிகாரிகளாக நியமிக்கப்படுகின்றனர். இப்போது தொழில் பழகுநர், அலுவலக உதவியாளர்கள் உள்ளிட்ட பணிகளிலும் வட இந்தியர்கள் நுழைக்கப்படுகின்றனர்.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் எழுத்தர் மற்றும் அதிகாரி பணியிடங்களில் சேருவதற்கு அய்.பி.பி.எஸ் நடத்தும் தேர்வில் வெற்றி பெறவேண்டும். ஆனால், பாரத ஸ்டேட் வங்கி மட்டும் தன்னிச்சையாகவே கிளார்க் உள்ளிட்ட சிறப்பு அதிகாரிகளைத் தேர்வு செய்ய போட்டித் தேர்வு நடத்துகிறது. 2018இல் ஜூனியர் அசோசியேட் பொறுப்புக்கு 17,400 காலிப் பணியிடங்களை நிரப்பியது. இதில், தமிழ்நாட்டுக்கு மட்டும் 1,420 காலிப் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டன. இதிலும் வட இந்தியா மற்றும் கேரளாவைச் சேர்ந்தவர்களே தேர்வு செய்யப்பட்டனர்.

சென்னையில் இயங்கி வரும் வருமானவரித் துறை அலுவல கத்தில் 100 சதவிகித வட இந்தியர்கள் வேலை செய்வதாக அந்த அலுவலகத்திலேயே புத்தகம் வெளியிட்டிருக்கிறார்கள்.

நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு கடந்த 8 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உள்ள என்.எல்.சி. இந்தியா, பாரத் மிகுமின் நிறுவனம், வங்கிகள், வருமானவரித்துறை, சுங்க இலாகா, இரயில்வே துறை உள்ளிட்ட அனைத்துப் பொதுத் துறை நிறுவனங்களிலும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களையே பணியில் அமர்த்தி இருக்கிறது.

பொதுத்துறை நிறுவனங்களாக தென் மண்டல பாரத் பெட்ரோலியம், என்.எல்.சி. மற்றும் ஒன்றிய அரசு அலுவலகப் பணிகளுக்கு 2016 ஆம் ஆண்டிலிருந்து ஒரு தமிழர்கள் கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஏற்கெனவே பணியில் இருக்கும் தமிழர்கள் ஓய்வு பெற்று விட்டனர். அந்தப்பணிகளுக்கு வட இந்திய அதிகாரிகள் ஒப்பந்த அடிப்படையில் வட இந்தியர்களை கொண்டு வந்து பின்னர் அவர்களை விதிகளை மாற்றி நிரந்தரப் பணியாளர்கள் ஆக்கிவிடுகின்றனர்

ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் வேலை வாய்ப்பில் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று குஜராத், உத்தரப்பிரதேசம், கருநாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் தனிச் சட்டமே இயற்றி உள்ளன.

தமிழ்நாட்டில் சுமார் ஒரு கோடி படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு இன்றித் தவிக்கும் நிலையில், வெளி மாநிலங்களிலிருந்து பணியாளர்களைக் கொண்டுவந்து ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் திணித்துவருவது அநீதியின் உச்சம் அல்லவா?

‘தென்னக ரயில்வேயில் 1765 பணி இடங்களில் 1600 வட இந்தியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அஞ்சல் துறைக்கு தமிழில் நடைபெற்ற தேர்வில் அரியானா, பீகார் மாநிலத்தவர் அதிக மதிப்பெண் எடுத்தது போன்ற விவகாரங்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கடும் விமர்சனம் செய்தது.

இப்படி பிற மாநிலத்தவர் இங்கு வேலையை அபகரித்துக் கொண்டிருக்க, ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ் உள்ளிட்ட அதிகாரிகளை நியமிக்கும் குடிமைப்பணி தேர்வில் கடந்த 2010ஆம் ஆண்டில் 12 விழுக்காடாக இருந்த தமிழ்நாட்டு இளைஞர்களின் தேர்ச்சி, இப்போது 5 விழுக்காடாக குறைந்துள்ளதிலும் சதி இருக்கிறது.

"தமிழ்நாடு தமிழருக்கே", "தமிழ்நாட்டு ஆட்சி தமிழ ருக்கே" என்று முழங்கிய மாநிலத்தில், 'தமிழ்நாட்டு வேலையை தமிழருக்கு கொடுங்கள்’ என்று யாசகம் கேட்கும் நிலை உருவாகியுள்ளது.

அந்தமானில் தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்தபோது வங்கதேச விடுதலைப் போரில் அகதிகளாக வந்தவர்களுக்கும், இராணுவப் பணியில் இருந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களின் உறவினர்களுக்கும் தாரளமாக இடம் கொடுத்தனர்.  இதனால் நாளடைவில் வங்காளிகள், பீகாரிகள் மற்றும் ஹரியானிகள் தமிழரைவிட அதிக எண்ணிக்கையில் பெருகினர். இதன் விளைவு இன்று அந்தமானில் தமிழர்கள் மிகச்சிறுபான்மையினராக இருக்கும் காரணத்தால் அங்கு தமிழும், தமிழர் நலனும் முற்றிலும் பறிக்கப்பட்டு இந்தி மற்றும் இந்திமொழி பேசுபவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தியா ஒரே நாடு என்னும் சூழ்ச்சியின் பின்னணியில் பதுங்கி இருக்கும் சதி வலையைப் புரிந்து கொள்வீர்!

No comments:

Post a Comment