பெரியாரை விட்டுப் பிரியாமல் இருந்திருந்தால்.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 7, 2022

பெரியாரை விட்டுப் பிரியாமல் இருந்திருந்தால்....

 

உடன்பிறப்பே,

தேர்தல் களம் புகுந்திட பல்வேறு  கட்சிகளின்  பாசறைகள் ஏறத்தாழத் தயார் நிலையில் அமைக்கப்பட்டு விட்டன.   எதிர் வரிசையில்  நிற்கக் கூடிய  அணி தேர்ப் புரவி  ஆட்பெரும்  படையை  உற்றுப் பார்க்கிறேன்.   எதிர் வரிசையில்  இந்திரஜித்தனைக் காண முடியாத காரணத்தை உணர்ந்து கொண்ட வுடன் - களத்தில்  அந்த  யோசனைக்கு இடமளிப்பது  நமது குறியைக் குலைத்துவிடும் என்பதால் அதைப்பற்றி அதிகமாக கவலைப் படாமல், ஒருசில நிமிடங்கள் அது பற்றிய சிந்தனையிலே ஈடுபட்டேன்.

5000 ஆண்டுகளுக்கு  மேலான  வரலாறு  கொண்ட  திராவிட  உணர்வு  பட்டுப்போகாமல்  காப்பாற்றி வந்த  பெரியாரெனும் பேருருவில் -  பிரிவுக் கணைகள்  புகுந்து  -  இரு  இயக்க மானோம். அவற்றில் ஓர் இயக்கம்  அண்ணா தலைமையில்  இன உணர்வு   பகுத்தறிவு இயக்கமாகவும் -  பிறிதொரு இயக்கம் பகுத் தறிவு கவலையின்றி;  ஆனால்  பண்பாடு  காத்திடும்  இயக்கமாக அருமை நண்பர் எம்.ஜி.ஆர்.  தலைமையிலும்  இயங்கிய   ஏற்றமிகு  நிலைக்கண்டு  - அதன்  எழிலைக் குறைத்திட  எத்தனையோ  சதிகள்,  சாகசங்கள்! அத்தனைக்கும் ஈடு கொடுத்து  ஒன்றை  ஒன்று  வென்றும்  - ஒன்றால் ஒன்று வீழ்ந்தும் -  அவ் விரு   திராவிட இயக்கங்களும்  தேசத்தை ஆளும் சக்தியாக  செழித்து  வளர்ந்தது  கண்டு  -  அவ்விரண்டையும்  அழித்தொழிக்க  அய்தீகப் படை திரண்டது. இரு படைகளும்  ஒரு  படையாய்  இருந்து  -  செரு பகை  வீழ்த்திட  அணி வகுப்போம்  வாரீர்  என்று  வடக்கிருந்து  பறந்து வந்த சமரசப் புறாவையும் - அதன் சிறகொடித்து விரட்டிவிட்டனர்  சதிகாரர்கள்.  அதன் பிறகும்  அமைதியில்லை -  சகோதர யுத்தம் தொடரட்டுமென்றும் - அப்போதுதான் சர்க்கரை தம் வாய்க்கு நிறைய கிடைக்கு மென்றும் எண்ணியோர்  கண்ணியம்  துறந்த காரியத்தில்  ஈடுபட்டதால்  -  திண்ணியராம்  திரா விடத் தலைவர்கள்  உருவாக்கிய இயக்கம்,  சிதைந்து  சிதறுண்டு  போக  சிலந்திகள் வலைபின்னத் தொடங்கின.    அந்த வலையில் சிக்காத இயக்கம் தான் அண்ணா உருவாக்கிய தி.மு.க. எனும்  இந்தத் தீரர்கள் மிகு இயக்கம்.   அதனால்தான்  வலை அறுந்திடவும்  இல்லை - விலை போகவும் இல்லை - நிலை குலையாத  நேர்மை,  நியாயம்,  நீதி, உண்மை,  உறுதி, வாய்மை அனைத்தும்  கொண்டு  வலிமை சேர் இயக்கமாக  அறப்போர்  வாள் தூக்கி  அணி வகுப்பில் முந்தி நிற்கிறது.    எந்த வொரு  இயக் கமும்  ஜனநாயக வழித் தடத்தில் தேர்தலைச் சந்திக்க களம் இறங்கி விட்டால் - ஜனநாய கத்தைக் கட்டிக் காக்க வேண்டிய பொதுமக்கள் மாத்திரமல்லாமல்  அந்தப் பொது மக்களிடத் திலே  -  தமது கட்சிக்காக  ஆதரவு திரட்டக் கூடிய தொண்டர்கள்,  தோழர்கள்  அணி வகுத்துக் குவிந்திடுவது  இயல்பேயாகும்.  அவர்கள் எந்த வரிசையினராயினும்  நம் வரிசையினர்  என்றே  போற்றிப் புகழ்வோம். எதிரெதிர் அணியிலே அவர்கள்  நிற்க நேரிட்டாலும் அவர்களும் நாமும் சேர்ந்து  ஜன நாயகக் கோயில் திருப்பணியை  நடத்தவே - நடத்தி முடிக்கவே -  அதில் எழிலும் ஏற்றமும் கண்டு  களிக்கவே  -  நாம் சேர்ந்துள்ளோம் இந்த இயக்கத்தில் என்ற நினைப்போடு  பணியாற்றினால்  மாண்பு  காத்திட - மனித நேயம்  போற்றிட - நாம் பிறந்த  மண்ணின்  புகழ்  பெருக்கிட - நம்மை  நாமே அர்ப்பணித்துக் கொண்டவர்களாவோம்.

நம் வியர்வையால்  கிடைக்கும் வெற்றியைப் போற்றிடவும் - நமது அயர்வினால்  அதனை விடுத்து  அதற்காக ஜனநாயக மாண்பினையே  தாக்கிடவு மான  நிலைக்கு  நம்மை நாமே  தள் ளிக் கொள்ளாமல்  இருக்கத்தான் -  காற்றடிக்கும்  நேரத்திலேயே  பதர் போக்கி  -  பயன் விளைக்கும்  தானிய மணிகளைக் குவித்து வைத்ததுபோல்  நமது படையின் வீரர்களை அணி வகுத்து வைத்திருக்கிறோம்.

சோர்வறியாத  படை  -

சோடை போகாத  படை  -

சொர்க்கம் அழைக்கிறது வா என்றாலும், அதில்

சொக்கிப் போய்  சொன்னது ஒன்று;  செய்வது  ஒன்றாக  -

போரிடுவது  போன்ற  போலிப் படையல்ல  இப்படை;

இப்படை தோற்கின் எப்படை ஜெயிக்கும்?

என  நம் அண்ணா அடிக்கடி சொல்வாரே

அப்படையே  இப்படையாம்!

பெரியாரை விட்டுப் பிரியாமல்  இருந்திருந் தால் - இடையில்  இப்படை  பெறும்  வெற்றிதான்  இமாலய  வெற்றியாகும் - இமாலயத்தை  வளைக்கும்  வெற்றியாகும்.

எனினும்  என் தலைவர் இருந்த நாற்காலி காலியாகவே இருக்கிறது  என மொழிந்து - பெரியாரின்  தொண்டனாக - அவரின் சீடனாக - அவரின்  கொள்கை நாதமாக  விளங்கிய  அண்ணா -

நமையெல்லாம்  ஒருங்கிணைத்து  -  பொருதடக்கை வாள் கொடுத்து  -  ஜனநாயக அறப்போரில்  வென்றிடுக  தம்பிகாள்!  என்று  அனுப்பி வைத்தார்.  அவர்களில் ஓரிரு  தம்பிமார்கள்  எங்கெங்கோ சிதறிப் போயினர்  என்றாலும் -  அங்கெல்லாம்  அலைந்து  திரிந்து  அவர்களையும்  ஒன்றிணைக்க  -  அரும்பாடு பட்டவனின் கரம்தான்  இந்தக் கரம்.

இந்தக் கரம் தழுவும் உணர்விலே  கட்டுண்டு - வாரீர் அனைவரும்  ஒருங் கிணைந்து  களம்  காண்போம்  என்ற ழைக்கும்  வேளை இது!

திராவிடர்கள் நெல்லிக்காய் மூட்டை களா?

திராவிடர்கள் நெல்லிக்காய்  மூட்டை  என  எதிரிகள்  துள்ளிக் குதிக்கும் நிலைதனை  மாய்ப்போம்.

விடுபட்டோர்  -

விரட்டப்பட்டோர்  -

துரத்தப்பட்டோர் -

விலை போகாது  வெங்குருதி  தனிற் கமழ்ந்த எங்கள் வீர மூச்சு - தமிழ்  மூச்சு  எனத் தடந்தோள்  தட்டி  வந்தி டுவீர்  வாகை  சூட  என்று கண்மூடி  தவம் இருக்கும்  துறவிகளைப்  போல்  -  தூய  ஞானிகளைப் போல் - நான் தவம் இருக்கின்றேன் -  படை  பலம்  போதாது  என்ப தால் அல்ல! இருக் கின்ற  படை  இன்னும்  வலிமையாய்  - உறுதியாய் -  நிச்சயம்  வாகை சூடுவ தாய்  அமைய வேண்டும்  என்பதற்காக!

என்னரும்  உடன்பிறப்புக்காள்!  என் உயிரினும்  இனியோரே!

இன்ப முடிவினை  எல்லோரும்  சேர்ந்து சுவைப்போம்!

வருக!  வருக!  வரிப்புலி வரிசையே  வருக!

அன்புள்ள,

மு.க.

- நன்றி: 'முரசொலி', 22.3.2011

No comments:

Post a Comment