அரியலூர்: திராவிடர் கழக இளைஞரணி திறந்தவெளி மாநில மாநாட்டில் தமிழர் தலைவர் உரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 12, 2022

அரியலூர்: திராவிடர் கழக இளைஞரணி திறந்தவெளி மாநில மாநாட்டில் தமிழர் தலைவர் உரை

 கடைசி மூடநம்பிக்கைக்காரன் இருக்கின்ற வரையில் - பேதத்தை நிலைநாட்டவேண்டும் என்று கருதுகிற ஆதிக்கக்காரன், ஆணவக்காரன் - ஜாதிவெறியன் - மதவெறியன் இருக்கின்ற வரையில்

தந்தை பெரியாருடைய கொள்கைகள் ஆயிரங்காலத்துப் பயிராக - மருந்தாக இருக்கும்!

பெரியார்தான் அன்றும் தேவைப்பட்டார் - இன்றும் தேவைப்படுகிறார் - என்றும் தேவைப்படுவார்!

அரியலூர், ஆக.12 - பெரியார்தான்  அன்றும் தேவைப் பட்டார் - இன்றும் தேவைப்படுகிறார் - என்றும் தேவைப் படுவார்; கடைசி மூடநம்பிக்கைக்காரன் இருக்கின்ற வரையில், பேதத்தை நிலைநாட்டவேண்டும் என்று கருதுகிற ஆதிக்கக்காரன், ஆணவக்காரன், ஜாதிவெறி யன், மதவெறியன் இருக்கின்ற வரையில், பெரியாருடைய கொள்கை ஆயிரங்காலத்துப் பயிராக - மருந்தாக இருக் கும் தோழர்களே என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

அரியலூர்: திராவிடர் கழக இளைஞரணி 

திறந்தவெளி மாநில மாநாடு

கடந்த 30.7.2022 அன்று அரியலூரில் நடைபெற்ற திராவிடர் கழக இளைஞரணி திறந்தவெளி மாநில மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

திராவிடர் இயக்கம் - சுயமரியாதை இயக்கம் - அறிவாசான் தந்தை பெரியார் - இந்தக் கருப்புச் சட்டை அத்தனை பேருடைய உழைப்பு தான்.

இதை மாற்றவேண்டும் என்பதற்காகத்தானே இன் றைக்குப் போராட்டம் -

மனுதர்மம்தானே சனாதனம்!

அதை மாற்றவேண்டும் என்று சொல்வதுதானே சனாதனம்-

சனாதனம் என்றால் என்ன? 

மனுதர்மம்தானே சனாதனம்.

அந்த மனுதர்மத்தில் அதைத்தானே எழுதியிருக் கிறான்.

அதை எதிர்த்துத்தானே இந்த மாநாடு. இந்த இயக் கத்திற்கு ஏன் இளைஞர்கள் வருகிறார்கள்? நம்முடைய இன இழிவை சுட்டிக்காட்டுகின்றபொழுது, அவர்கள் சிந்திக்கிறார்கள்.

இன்றைக்கு இவ்வளவு இளைஞர்கள் வந்திருப்பதைப் பார்த்தவுடன், எனக்கே மலைப்பாகவும், திகைப்பாகவும் இருக்கிறது.

பெரியார் காலத்திற்குப் பிறகு இயக்கம் இருக்குமா? என்று கேட்டார்கள்.

அப்படி இருந்தாலும், வயதானவர்கள் ஊருக்கு ஓரிருவர் இருப்பார்கள் என்று ‘ஆருடம்’ கணித்தார்கள்.

ஆனால், அவர்கள் கணிப்பினைப் பொய்யாக்கி, இந்த இயக்கத்தில் இன்றைக்கு இவ்வளவு இளைஞர்கள் திரண்டிருக்கிறார்கள்.

பெரியார் என்ற பெயரானது உலகத்திலுள்ள பல நாடுகளாலும், பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கு அடையாளமாக இன்றைக்கு ஆகி இருக்கிறது.

என்ன காரணம்?

இதற்குத் தீர்வு அதுதான். இதற்கு மருந்தே அதுதான்.

நம்முடைய போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்களுடைய உரையில் சொன்னதைப்போல,

சனாதனத்தை மாய்க்க இந்த இயக்கம், அதை செயல் படுத்தக் கூடிய அளவிற்கு இருக்கின்ற ஆட்சிதான், இந்தியாவின் முதலமைச்சர்களில், முதல் முதலமைச் சராக இருக்கக்கூடிய ஒப்பற்ற முதலமைச்சர், நம்முடைய முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுடைய தலைமையில் நடைபெறக்கூடிய ஆட்சி.

எல்லோரும் படிக்கவேண்டும் என்பது திராவிடம்

‘திராவிட மாடல்’ என்பதினுடைய அடிப்படை வேறொன்றுமில்லை. திராவிடம் என்றால் என்னவென்று புரியாத மாதிரி கேட்கிறார்கள்.

காலையில் அரங்க நிகழ்ச்சியில்கூட சொன்னோம் மிகத் தெளிவாக.

எல்லோரும் படிக்கவேண்டும் என்பது திராவிடம்.

எல்லோரும் படிக்கக்கூடாது என்பதுதான் சனாதனம்.

இன்றைக்கு சனாதனம் என்று சொல்கிறார்களே, அன்றைக்கு என்ன பெயர்?

பஜனை மடம் நடத்துவதுபோன்று 

நடத்திக் கொண்டிருக்கிறார்

குலதர்மம்தான்; மனுதர்மம்தான். இங்கே ஓர் ஆளுநர் வந்து அமர்ந்துகொண்டு, சனாதனத்தைப்பற்றி விளக்கங்களைச் சொல்லிக்கொண்டிருக்கிறார் - பஜனை மடம் நடத்துவதுபோன்று நடத்திக் கொண்டிருக்கிறார். இதற்குமேல் நான் அவரைப்பற்றி சொல்ல விரும்ப வில்லை. ஏனென்றால், இங்கே அமைச்சர்கள் அமர்ந்திருக்கிறார்கள்; அதனால் எனக்குத் தடை - அவர்களுக்கு ஒரு சங்கடத்தை உருவாக்கக் கூடாது.

இங்கே அமைச்சர்கள் இல்லையென்றால், அதைப் பற்றி இன்னும் விரிவாகப் பேசலாம்.

எதையும் நாங்கள் மனம் போன போக்கில் சொல்லி விட்டுப்போகிறவர்கள் அல்ல. ஆதாரப்பூர்வமாக சொல்கிறவர்கள் நாங்கள்.

இந்த இயக்கம் எல்லோருக்கும் அறிவு கொளுத்து கின்ற இயக்கம். அதனால்தான், இந்த இயக்கத்தை நோக்கி ஏராளமான இளைஞர்கள் வருகிறார்கள். உலகம் முழுவதும் இன்றைக்குக் கிராக்கி ஏற்பட்டு இருக்கிறது.

பெரியாருடைய கொள்கை ஆயிரங்காலத்துப் பயிராக - மருந்தாக இருக்கும் தோழர்களே!

பெரியார்தான் தேவைப்படுகிறார் - அன்றும் தேவைப்பட்டார்  - இன்றும் தேவைப்படுகிறார் - என்றும் தேவைப்படுவார்; கடைசி மூடநம்பிக்கைக்காரன் இருக்கின்ற வரையில், பேதத்தை நிலைநாட்டவேண்டும் என்று கருதுகிறவன், ஆதிக்கக்காரன், ஆணவக்காரன், ஜாதிவெறியன், மதவெறியன் இருக்கின்ற வரையில், பெரியாருடைய கொள்கை ஆயிரங்காலத்துப் பயிராக - மருந்தாக இருக்கும் தோழர்களே!

சனாதன தர்மம், சனாதன தர்மம் என்று கொக்கரிக் கிறார்கள்.

இப்பொழுதுகூட சனாதனமா? திராவிடமா? என்று தொலைக்காட்சிகளில் விவாதம் நடக்கிறது.

ஒரு செய்தியை உங்களுக்குச் சொல்கிறேன். திரா விடர் கழகம் மாநாடு, பொதுக்கூட்டம் என்றால், ஏதோ வேடிக்கைப் பேச்சு பேசிவிட்டுப் போகக்கூடியவர்கள் அல்ல.

திராவிட மாடல் ஆட்சி பாதுகாப்பாக நடைபெறுவதற்கு என்ன பணியோ அப்பணியை செய்வதுதான் எங்களுடைய வேலை!

இந்த மாநாட்டினை ஏன் இங்கு நடத்துகின் றோம்? இன்றைய இளைஞர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்; இளைஞர்கள் வேகமாக செயல்படு வார்கள்; 100 இளைஞர்கள் அல்ல, 2 ஆயிரம் இளைஞர்கள் பேரணியில் பங்கேற்றார்கள் என்றால், அவர்கள் பதவிக்குப் போகவேண்டும் என்பதற்காகவா வந்தார்கள்? இரட்டைக் குழலில், ஒரு குழல் பதவியில் இருக்கும்; சமூகநீதியை செயல்படுத்தவேண்டும் என்பது மிகவும் முக்கியம்தான். ஆனால், இன்னொரு குழலாகிய எங்களுடைய பணி என்னவென்றால், பதவிப் பக்கம் போகமாட்டோம்; அவர்கள் செல்லும் பாதையில், முன்பே சென்று, எங்கெங்கே கண்ணி வெடி வைத்திருக்கிறார்கள் என்பதைப் பார்த்து, அதனைப் பாதுகாப்பாக அகற்றி, இந்த ஆட்சி பாதுகாப்பாக நடைபெறுவதற்கு என்ன பணியோ அப்பணியை செய்வதுதான் எங்களுடைய வேலை.

ஆகவே, இந்தக் குழலை நோக்கி, திராவிடர் கழகத்தை நோக்கி இளைஞர்கள் வருகிறார்கள். இங்கே அவர்கள் வந்தால், ஒரு பஞ்சாயத்துப் போர்டு பதவியாவது உண்டா? என்றால், கிடையவே கிடையாது.

பஞ்சாயத்துப் போர்டு பதவிக்குப் போகவேண்டும் என்று இங்கே வருபவர்களை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

ஆனால், யார் அந்தப் பஞ்சாயத்துப் பதவியில் அமரவேண்டும் என்று முடிவு செய்வது என்பது மிக முக்கியமானதாகும்.

நம் கையைக் கொண்டே நம் கண்ணை குத்த முயலுவோமா? என்றால்,  கிடையவே கிடையாது.

பேரணி, ஊர்வலத்தைப் பார்த்திருப்பீர்கள்; 2 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள்; காவிக் கட்சி போன்று, நாங்கள் என்ன பணம் கொடுத்து அழைத்து வருபவர்களா?

கண்டிப்பாக இல்லை நண்பர்களே!

காவிக் கட்சியில் ஏராளமானோர் சேருகிறார்கள் என்று இங்கே சொன்னார்கள். அவர்கள் வித்தை காட்டு கிறார்கள்; எங்கள் கூட்டத்திற்கு நிறைய பேர் வந்து விட்டார்கள் என்று.

தேடப்படும் குற்றவாளிகள் எல்லாம் 

காவிக் கட்சியில் சேருகிறார்கள்

உண்மைதான்; காவி கட்சிக்குப் போனால்தானே, எல்லா இடங்களும் காலியாக இருக்கின்றன. மற்ற கட்சிகளில் அப்படிப்பட்ட நிலை இல்லையே! மற்ற கட்சிகளில் சேரவேண்டும் என்றால், வரிசையில் நிற்க வேண்டி அல்லவா இருக்கிறது. ஆனால், காவிக் கட்சி யில் தயாராக இருக்கிறதே - அதுவும் யாருக்கு? தேடப் படும் குற்றவாளிகள் எல்லாம் அங்கே போய்தான் சேருகிறார்கள்.

அன்றைக்குக் காவல்துறையினர், கைவிலங்கு போட்டு அழைத்துச் சென்றவர்களை - இன்றைக்கு அதே காவல்துறையினர், அவர்களுடைய பக்கத்தி லேயே நிற்கிறார்கள்.

காவிக் கட்சிதான் நமக்கு பெரிய வாய்ப்பாயிற்றே என்று அவர்கள் நினைக்கிறார்கள். எவ்வளவு நாளைக்கு அவர்கள் இருப்பார்கள்?

அலங்காரத்திற்காகவோ, உவமைக்காகவோ சொல்லவில்லை!

எங்கள் தோழர்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல. தோழர்கள், இங்கே வந்திருக்கின்ற திராவிட இயக்கத் தோழர்கள், தூக்குக் கயிற்றை முத்தமிடக் கூடிய அளவிற்குப் போனாலும், எங்கள் தோழர்கள் அதற்கும் தயாராக இருக்கக் கூடியவர்கள்தான்.

இதை ஏதோ அலங்காரத்திற்காகவோ, உவமைக் காகவோ சொல்லவில்லை நண்பர்களே, உண்மை வரலாறு அதுதான்!

அனிதாவைப்பற்றி இங்கே சொன்னார்கள்; இது இந்தக் காலகட்டம் - தற்கொலை; ஆனால், படுகொலை நடந்திருக்கிறது இந்தக் கொள்கைக்காக - உடையார் பாளையம் வேலாயுதம். இன்றைய இளைஞர்களுக்கு அதனை நாம் நினைவூட்டவேண்டியது முக்கியம். 

உடையார்பாளையம் வேலாயுதம் எதற்காக தூக்கில் தொங்கினார்? என்ன காரணம்? இந்தக் கொள்கையை சொன்னதற்காக -

ஆனால், தூக்கில் தொங்கிய பிறகு, இந்த இயக்கம் இல்லாமல் போய்விட்டதா? இந்த இயக்கம் அழிந்து விட்டதா? எங்களை சிறைச்சாலையில் தள்ளியதும் இயக்கம் அழிந்துவிட்டதா? நெருக்கடி காலத்தைக் கொண்டு வந்தார்களே, அழிந்துவிட்டதா?

எங்களை அழித்துக் கொள்வதற்குக்கூட தயாராக இருக்கக்கூடியவர்கள்தான்

எனவேதான் நண்பர்களே, இந்த இயக்கம் என்பது உங்களுக்காக - மக்களுக்காக! எங்களுக் காக அல்ல - எங்களுக்குத் துளியளவுகூட சுயநலம் கிடையாது. கருப்பு மெழுகுவத்திகள் எரிந்து, எரிந்து உங்களுக்கு ஒளிகாட்டி, அதிலே எங்களை அழித்துக் கொள்வதற்குக்கூட தயாராக இருக்கக் கூடியவர்கள்தான் இந்தப் பணி செய்யக் கூடியவர்கள்.

ஆகவேதான், இன்றைக்குத் தமிழ்நாடு தனியாக இருக்கிறது. ஏன் தமிழ்நாட்டில், ‘திராவிட மாடல்’ ஆட்சி - இந்தியா முழுவதும் திரும்பிப் பார்க்கக் கூடிய அளவிற்கு இருக்கிறது.

திராவிட முன்னேற்றக் கழகத் தேர்தல் அறிக்கையைப் பற்றி ஸ்காட்லாந்தில் இருக்கக்கூடிய ஒரு பல்கலைக் கழகப் பேராசிரியர் ஆய்வு செய்து, அதனை புத்தகமாக எழுதியிருக்கிறார்.

என்னென்ன உறுதிமொழிகளை அவர்கள் சொன் னார்கள்?

எதை எதையெல்லாம் நடைமுறைப்படுத்தி இருக் கிறார்கள்?

இப்படி உலகிலேயே ஒரு இயக்கத்தினுடைய தேர்தல் அறிக்கையைப்பற்றி ஆய்வு செய்து, அதனை நடைமுறைப்படுத்தக் கூடிய ஆட்சி இவ்வளவு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று சொன்ன ஓர் ஆய்வு இருக்கிறதே, அது ‘திராவிட மாடல்’ ஆட்சிக்குத் தவிர, வேறு எந்த ஆட்சிக்கும் கிடையாது நண்பர்களே!

மிகப்பெரிய அளவில் எவ்வளவு பெரிய சமுதாய மாற்றம்.

இங்கே சொன்னாரே, முழங்காலுக்குக் கீழே வேட்டி கட்டிக்கொண்டு, காலுக்கு செருப்பு அணிந்து கொண்டு நடக்க முடியாத நிலை இருந்ததே - இப்போது அந்த நிலை இல்லை.

ஆகவேதான் நண்பர்களே, இந்த இயக்கம் என்பது உங்களுக்காக.

எல்லோரும் படிக்கவேண்டும் என்று சொல்வது ‘திராவிட மாடல்

அன்றைக்குப் படிக்காதே என்று சொன்னான், அதுதானே மனுதர்மம். இன்றைக்கு அதை சனாதனம் என்று சொல்கிறார்கள். எல்லோரும் படிக்கவேண்டும் என்று சொல்வது ‘திராவிட மாடல்’ - அதுதான் திராவிட இயக்கம்.

எங்களுடைய இயக்கம்தானே, அன்றைக்கு ஆட் சிக்கு வந்தவுடன் - நூறாண்டுகளுக்கு முன்பு வந்ததனால் தான், படிப்பு கட்டாயம் என்று கல்விக் கூடங்கள் திறக்கப்பட்டன.

ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களை, ஆதிதிரா விட சமுதாயத்தைச் சார்ந்த மக்களை உள்ளே வராதே என்று வெளியே நில் என்று சொன்னார்கள்; அவர்களை உள்ளே வா என்று சொன்னதோடு மட்டுமல்லாமல், அவர்களைப் பள்ளிக் கூடத்திற்குள் உட்கார வைத்து, சாப்பாட்டு போட்டதோடு மட்டுமல்லாமல், ஜாதி பெயரைச் சொன்னால், ஒருவேளை அவர்களுக்குத் தாழ்வு மனப்பான்மை வந்துவிடுமோ என்பதற்காக, ‘லேபர் ஸ்கூல்’ என்றார்கள்

ஏனென்றால், தொழிலாளியாக உழைக்கின்றவர்கள் எல்லாம் நம்மாட்கள்தான்.

சூத்திரன்களைப்பற்றி மனுதர்மத்தில் என்ன எழுதி வைத்திருக்கிறார்கள்? ஏழு வகைத் தொழிலாளர் பிரிவை சார்ந்தது என்றுதான் எழுதியுள்ளான்.

எனவே, தொழிலாளர்கள், அவர்கள் 

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்

இதுதானே திராவிட இயக்கம்.

உயர்ந்த ஜாதி, தொடக்கூடிய ஜாதி என்று நீங்கள் சொல்லிக் கொண்டிருந்தீர்களே, அதை மாற்றுவதுதானே!

என்ன காரணம் என்றால், மதம் சொல்லிற்று என்று சொன்னார்கள்.

எங்களுக்கு மதம் பிடிக்காது!

அருமைத் தோழர்களே நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.

எங்களுக்கு மதம் பிடிக்காது, அது எந்த மதமாக இருந்தாலும்; அதற்காக அடுத்த மதத்துக்காரனை உதைக்கமாட்டோம்; கடவுள் மறுப்பாளர்கள் என்று சொல்லும்பொழுது, கா.சொ.க.கண்ணன் அவர்கள் அழகாகச் சொன்னார், ‘‘நான் கடவுள் மறுப்பாளன்தான், வெளிப்படையாக எடுத்துச் சொன்னேன்’’ என்றார்.  நம்முடைய அமைச்சர் சிவசங்கர் அவர்களும் சிறப்பாகச் சொன்னார்.

அவ்வளவுதூரம் போகவேண்டாம்; சட்டமன்றத்தில் பதவியேற்றபோது எல்லோரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்களே, அரசமைப்புச் சட்டத்தில் இரண்டு வாய்ப்பு இருக்கிறது.

(தொடரும்)


No comments:

Post a Comment