தந்தை பெரியார் என் ஆசான் - என் கல்வியின் ஆசான் முத்தைய வேள் - தொண்டறம், உபசரிப்பு இவற்றில் சிறந்த குடும்பம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 7, 2022

தந்தை பெரியார் என் ஆசான் - என் கல்வியின் ஆசான் முத்தைய வேள் - தொண்டறம், உபசரிப்பு இவற்றில் சிறந்த குடும்பம்!

மாநிலக் கல்லூரியின் முன்னாள் மாணவர் ராஜா சர் முத்தையவேள் 

118 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் தமிழர் தலைவர் சிறப்புரை

சென்னை, ஆக.7 எனக்கு ஆசான் தந்தை பெரியார் என்றால், எனக்குக் கல்வி ஆசான் முத்தைய வேள் என்றார் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல்கலைக் கழக வேந்தர், டாக்டர் கி.வீரமணி அவர்கள்.

கடந்த 5.8.2022 அன்று  ராஜா சர். முத்தையா செட்டியார் 118 ஆம் பிறந்தநாள் விழா, சென்னை மாநிலக் கல்லூரியில் உள்ள திருவள்ளுவர் அரங்கில் பிற்பகல் 3 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்வை மாநிலக் கல்லூரியின் மேனாள் மாணவர்கள் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்திருந்தனர். இச்சங்கத்தின் துணைத் தலைவர் முனைவர் எஸ்.ராஜராஜன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். சங்கத்தின் தலைவர் எம்.ரூஸ்வெல்ட் முன்னிலை வகித்து உரை நிகழ்த்தினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் ஆர்.ராமன் தலைமை ஏற்று உரையாற்றினார். பெரியார் மணியம்மை அறி வியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல்கலைக்கழக வேந்தர், டாக்டர் கி.வீரமணி அவர்கள் இறுதியில் தலைமை விருந்தினர் உரை நிகழ்த்தினார்.

அவரது தலைமையுரை வருமாறு:

மிகுந்த சிறப்போடு டாக்டர் ராஜா சர் முத்தையா செட்டியார் அவர்கள் இந்த மாநிலக் கல்லூரியில் அதன் மேனாள் மாணவர் என்ற ஒரு தகுதியை வாய்ப்பாகக் கொண்டு, அண்ணாமலை பல்கலைக் கழகத்தை நிறுவியவர் டாக்டர் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் என்ற வரலாற்றை நிறுவியதற்குப் பிறகு, அந்தப் பல்கலைக் கழகத்தினுடைய அதிவேக வளர்ச்சி, அந்தப் பல்கலைக் கழகத்தினுடைய ஆக்கங்கள் எப்படி சமுதாயத்திற்கு மிகப்பெரிய அளவிற்குப் பயன்பட்டது என்பதை, பயன்பெற வைத்தவர் என்ற முறையிலே, அண்ணாமலை அரசர் அவர்களுக்குப் பிறகு, அவரு டைய மூத்த புதல்வரான டாக்டர் ராஜா சர் முத்தையா அவர்கள், மிகச் சிறப்பான வகையில் இணைவேந்தராக இருந்து, பெருமைப்படுத்தினார்.

அவர் வாழும் காலம் வரையில், அவர்தான் இணைவேந்தர். எங்களைப் போன்றவர்கள் இதுபோன்ற நிகழ்ச்சிக்கு வருகிறோம் என்பதற்கும்,  அருமைச் சகோதரர் பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் தோழர் எம்.ரூஸ்வெல்ட் அவர்கள் அழைத்தவுடனே, எந்தவித மான தயக்கமும் இல்லாமல், உடனடியாக ஒப்புக்கொண் டதற்கும் முக்கிய காரணம் என்ன என்பதை பின்னாலே சொல்கிறேன்.

டாக்டர் ராஜா சர் முத்தையா செட்டியார் அவர் களுடைய 118 ஆம் பிறந்த நாள் விழாவை, அவர் படித்த கல்லூரியினுடைய பழைய மாணவர்கள் என்ற உறவோடு இங்கே நடைபெறக்கூடிய இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கக்கூடிய அருமை முதல்வர் அவர்களே,

வரவேற்புரையாற்றிய இந்தக் கல்லூரியின் மேனாள் மாணவரும், மேனாள் பல்கலைக் கழகத் துணைவேந்தரு மான அருமை டாக்டர் எஸ்.ராஜராஜன் அவர்களே,

பழைய மாணவர்களுடைய சங்கத்தின் தலைவராக இருந்து, சீரிய முறையில் அதனை நடத்திக் கொண்டிருக் கக்கூடிய ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியும், கிராமப் பகுதிகளிலிருந்து ஏராளமான இளைஞர்கள் இதுபோன்ற கல்லூரிகளுக்கு வருவதற்கு ஒரு பெருந்துணையாக இருந்து, கல்விக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்து, அவர்களுக்கெல்லாம் புது வாழ்வு பெறுவதற்குக் காரணமாக இருந்த தமிழ் ஆர்வலர் அருமைத் தோழர் எம்.ரூஸ்வெல்ட் அவர்களே,

இந்நிகழ்வில் சிறப்பாகக் கலந்துகொள்கின்ற கழகத் துணைத் தலைவர் உள்பட அருமைத் தோழர்களே, சான்றோர்களே, மாணவச் செல்வங்களே, பேராசிரியப் பெருமக்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அழைத்த உடனே தயக்கமில்லாமல் இந்தக் கல்லூரி நிகழ்வில் கலந்துகொண்டு உங்களையெல்லாம் மீண்டும் ஓராண்டிற்குள்ளேயே சந்திக்கக்கூடிய ஓர் அரிய வாய்ப்புக் கிடைத்ததென்றால், அதைப் பெரு மகிழ்ச்சி யான வாய்ப்பாகக் கருதுகிறேன்.

காரணம் என்னவென்றால், இங்கே நண்பர்கள் சொன்னதைப்போல, டாக்டர் ராஜா சர் முத்தையா செட்டியார் அவர்கள், இணைவேந்தராக அண்ணா மலைப் பல்கலைக் கழகத்தில் இருந்த நிலையிலே, அந்தப் பல்கலைக் கழகம் மட்டும் அப்பொழுது தொடங்கி இருந்து, தொடர்ந்து அது ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த, தென்னார்க்காடு மாவட்டத்தைச் சார்ந்த எங்களைப் போன்றவர்கள் எல்லாம் படிக்கக் கூடிய, பட்டதாரிகள் ஆகக்கூடிய வாய்ப்பு அந்தப் பல் கலைக் கழகம் இல்லையானால், நிச்சயம் கிடைத் திருக்காது.

நன்றித் திருவிழா!

பல்லாயிரக்கணக்கானோருக்கு இன்றைக்குக் கல்விக் கண்ணை அந்தப் பல்கலைக் கழகம் திறந்திருக்கிறது. அதிலே பயன்பெற்ற ஒரு மாணவன் நான்.

எங்களைப் பொறுத்தவரை இது நன்றித் திருவிழா. அவருக்கு இது 118 ஆவது பிறந்த நாள் விழா என்றாலும், எங்களைப் போன்றவர்களுக்கு, அவருடைய தொண்டி னாலே, தொண்டறத்தினாலே பயன்பெற்ற, பயன் பெறுகின்ற எங்களைப் போன்றவர்களுக்கு இது ஒரு நன்றி காட்டும் திருவிழா!

எனவேதான் நன்றி என்பது மனிதருடைய அடை யாளம்.

மனிதம் என்று சொன்னாலே, தனித்தன்மை நன்றி. 

அய்ந்தறிவு படைத்தவர்களுக்கு நன்றி தெரியாது. நன்றி தெரியாதவர்கள் எல்லாம் அய்ந்தறிவு படைத்தவர் களா? என்ற கேள்வியை கேட்டு சிக்கலை உண்டாக் காதீர்கள்.

ஏனென்றால், பல பேர் இப்போது நன்றியை மறந்துவிட்டவர்களாக இருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட சூழலிலே, ஆறாவது அறிவு என்று சொன்னால், யாரால் நாம் பயன்பெற்றோமோ, அவர்களுக்கு நன்றி காட்டவேண்டும்.

‘‘எந்நன்றி கொன்றாருக்கும் உய்வுண்டு’’ என்று ஒரே வரியில் வள்ளுவர் சொன்னார்.

அந்த வகையிலேதான், நாம் உய்வைத் தேடிக் கொள்ளவேண்டாமா? வாய்ப்புக் கிடைக்கும்பொழுது பற்றுக் கொள்ளவேண்டாமா?

அதுதான், எங்களுடைய அரசர், அவரைப் பொறுத்த வரையில், ஒரு செய்தியை உங்களுக்குச் சொல்கிறேன்; மாணவர்களாகிய நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.

‘முத்தைய வேள்’ என்று அழைத்தேன்!

பல்கலைக் கழகத்தினுடைய வெள்ளி விழா வின்போது நான் அங்கே மாணவன்.

அப்பொழுது பேச்சுப் போட்டி நடத்தினார்கள். அதற்காக மூன்று தலைப்புகளைக் கொடுத்தார்கள்.

1955 ஆம் ஆண்டு என்று நினைக்கின்றேன்.

அதில் ஒரு தலைப்பு, ‘‘ராஜா சர் முத்தையா செட்டி யார் அவர்களுடைய தொண்டு பணிகள்’’ என்பதாகும்.

என்னுடைய உணர்வு உங்களுக்குத் தெரியும்.

ஜாதி மறுப்பாளன் என்ற முறையிலே, ஒவ் வொரு முறையும் அவரைப்பற்றி சொல்லும் பொழுது, 

ஏனென்றால், மரியாதைக்காக ஜாதிப் பட் டத்தை எப்படி வைத்துவிட்டார்கள் என்றால் நம்முடைய நாட்டில், பெரியாருக்கே அந்த நிலை என்றால், மற்றவர் களுக்கு சொல்லவேண்டிய அவசியமில்லை.

ஜாதிப் பட்டத்தை இணைத்தால்தான் மரியாதை - அதை வெட்டிவிட்டுச் சொன்னால், மரியாதைக் குறைவு - வெறும் பெயரைச் சொன்னால் என்ற நிலை இருக்கின்ற காரணத்தினால்,

அந்தப் பேச்சுப் போட்டியின்போது நீதிபதிகள் எல்லாம் அமர்ந்திருக்கின்றார்கள்; மிக முக்கிய மானவர் களும், எங்களுடைய பேராசிரியர்களும் அமர்ந்திருந் தார்கள்.

பெரியாருடைய தொண்டன் என்ற முறையில், ''டாக்டர் ராஜா சர் முத்தையா செட்டியார் அவர் களுடைய தொண்டு பணிகள்'' தலைப்பில் நான் பேசும்பொழுது,

‘‘செட்டியார்'', ‘‘செட்டியார்'' என்று ஒவ்வொரு முறையும் சொல்லவேண்டிய அவசியம் வரவேண் டிய நிலையைத் தவிர்ப்பதற்காக, ஒரு சொல்லாக் கத்தை நாங்கள் இணைத்தோம்.

அதுதான் ராஜா சர் முத்தைய வேள் என்று நான் சொன்னேன்.

முத்தைய வேள் அவர்கள் என்று.

அதற்குப் பிறகு பேசிய அனைவரும் டாக்டர் முத்தைய வேள் என்று சொன்னார்கள்.

ஆகவே, அவரை வைத்துக்கொண்டு நான் பேசும் பொழுதெல்லாம், டாக்டர் முத்தைய வேள் அவர்கள், ராஜா அவர்கள், அரசர் அவர்கள் என்றுதான் பேசுவேன்.

அவர் எங்களுடைய இணைவேந்தர்; அவர் இணைவேந்தராக இருந்தாலும், பல்கலைக் கழகத்தை நடத்தியவர்.

ஒரு நிறுவனத்தைத் தொடங்கி விடுவது என்பது -அது ஓர் அரிய பணிதான்.

நீதிக்கட்சி ஆட்சியில் தொடங்கப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக் கழகம்

அதேபோல, அண்ணாமலை பல்கலைக் கழகம் என்பது அந்தக் காலத்திலே சென்னை பல்கலைக் கழகத்திற்கு அடுத்தபடியாக இருந்தது.

நீதிக்கட்சியின் ஆதரவோடு டாக்டர் சுப்பராயன் அவர்கள் முதலமைச்சராக இருந்த நேரத்தில், தனிச் சட்டத்தைக் கொண்டு வந்து இதை நிறைவேற்றினார்கள்.

அதற்கு முன்பு அது மீனாட்சிக் கல்லூரியாக இருந்தது. இங்கேகூட, நம்முடைய துணைத் தலைவர் ராஜராஜன் அவர்கள் சொன்னார்கள்; இந்தக் கல்லூரிகூட பல்கலைக் கழகமாக வரலாம் என்று.

நிச்சயமாக அதற்கு முழுத் தகுதி உண்டு. நிறைய பல்கலைக் கழகம் வரவேண்டும் என்று இருந்தாலும், முன்னுரிமை இந்தக் கல்லூரிக்குத்தான் இருக்கும்.

நம்முடைய முதல்வர் ஒரு செய்தியை சொன்னார். ஒருவேளை அப்படிப் பல்கலைக் கழகமாக வந்தால், உங்களுடைய எண்ணிக்கைக் குறையுமோ - குறைய வாய்ப்பு இருக்குமோ என்று சொன்னார்.

ஆனால், இந்தச் சிக்கலுக்கும் நம்முடைய முதல மைச்சர் அவர்கள் தீர்வு காணுவார். அதிலொன்றும் சந்தேகமேயில்லை. எந்தச் சிக்கலுக்கும் தீர்வு காணக் கூடியவர் அவர்.

வடக்கே சிறு இடங்கள் எல்லாம் பல்கலைக் கழகமாக இருக்கின்றன. உத்தரப்பிரதேசம், மற்ற இடங்களுக்குச் சென்றால், பல்கலைக் கழகம் என்ற போர்டு போட்டி ருப்பார்கள், இங்கே இருக்கின்ற இந்தக் கட்டத்தின் ஒரு பகுதி அளவுகூட இருக்காது.

வடக்கே இருந்தவர் அவர், அவருக்குத் தெளிவாகத் தெரியும்.

நம்முடைய பல்கலைக் கழகங்களில் போதிய இடங் கள், மாணவர்கள், அதற்குரிய வாய்ப்புகள் எல்லாம் இருக்கிறது.

அண்ணாமலைப் பல்கலைக் கழகம் தனிச் சட்டமானது - அதற்கு என்னென்ன செய்யவேண்டுமோ அத்தனையும் செய்தார்கள்.

அதற்கு முன்பு அது மீனாட்சிக் கல்லூரியாக இருந்தது.

ஆங்கிலத்தில் ஒரு சொல்லாடல் உண்டு -

அதாவது, ‘‘சிறப்புமிகுந்த ஒரு தந்தையின், சிறப்பு மிகுந்த ஒரு பிள்ளை’’ என்று.

எனவே, அவருக்குப் பிறகு அந்தப் பணியை - அண்ணாமலை அரசருக்குப் பிறகு, முத்தைய வேள் அவர்கள், சிறப்பாக அதனைச் செய்து முன்னெடுத்துச் சென்றார்கள்.

இந்த அளவிற்கு ஒரு நிறுவனத்தை உருவாக்குவது, அதைக் கட்டிக்காப்பது என்பதைவிட, அந்த நிறுவன ருக்குப் பிறகு, அதனைத் தொடர வைப்பது என்பது இருக்கிறதே, அது சாதாரணமான பணியல்ல.

தொடர்ந்து நடத்துபவர்கள் சிறப்பானவர்கள்!

இன்னுங்கேட்டால், தொடங்குபவர்களைவிட, அதைத் தொடர்ந்து செய்பவர்கள் சிறப்பானவர்கள்.

ஓர் இயக்கத்தைக்கூட தொடங்குவது என்பது எளிது. ஆனால், அதை நிலைநாட்டுவது, அதைப் பரப்புவது, அதனுடைய பணிகளை சிறப்பாக ஆக்குவது, தன்னலமற்றதாக அதைப் பாதுகாப்பது என்பது, அது ஒப்பற்ற ஒரு பணி. அந்தப் பணியை தலையாய செய்த மிகப்பெரிய பெருமை - படமாக இருப்பவர் மட்டுமல்ல, பாடமாக நமக்கெல்லாம்- நிறுவனங்கள் நடத்துபவர் களுக்கு இருப்பவர் அருமை செட்டிநாட்டு அரசர் அவர்கள் - பல்கலைக் கழகத்தினுடைய இணை வேந்தராக இருந்தவர்.

நம்முடைய முதல்வர் அவர்கள், ஆவலோடு என்னிடம் கேட்டார்கள்; நீங்கள் அவரோடு பேசியிருக்கிறீர்களா? என்று.

ஒவ்வொரு முறையும் அவர் வரும்பொழுதெல்லாம் மிகச் சிறப்பாக வருவார். நாங்கள் எல்லாம் மாணவர்கள்; ஆனால், எல்லோரையும் அழைத்துப் பேசுவார்.

நான் திராவிடர் கழகத்துக்காரன்; பெரியாருடைய தொண்டன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து என்று அவருக்குத் தெரியும்.

ஆனால், மற்றவர்களுடைய கொள்கையில் அவர் தலையிடவே மாட்டார்; விருப்பு - வெறுப்பெல்லாம் அவர் காட்டமாட்டார்.

அதேநேரத்தில், இவர் ஒரு நல்ல பேச்சாளர் என்று அழைத்து உற்சாகப்படுத்துவார். மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துவார்.

‘என் கல்விக்கு ஆசான்!’

என்னைப் பொறுத்தவரையில், அறிவாசான் வெண்தாடி வேந்தர் தந்தை பெரியார் அவர்கள்.

அதேபோல, கல்விக்கு ஆசானாக இருந்து எனக்கு வாய்ப்பைக் கொடுத்தவர் என்றால், எங்கள் இணைவேந்தர் முத்தையா அவர்கள்.

ஏனென்றால், கல்விக் குடும்பத்தில் அவ்வளவு வாய்ப்பைக் கொடுத்தவர்.

எங்களை அழைத்துப் பேசுவார்கள்.

இது ஒரு பாகம்.

28 வயதிலே சென்னையின் முதல் மேயாரானவர் அவர். சில நாள்களுக்கு முன்பு வரையில், அவர் கொடுத்த அங்கிதான்; அவர் அறிமுகம் செய்த பழக்கம் தான் அது. 

எல்லாவற்றையும்விட மிக முக்கியமானது நண்பர் களே, இன்றைக்கும் அவர் படத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவேண்டியது என்னவென்றால்,

மற்ற சிறப்புகள் - அவர் தொழிலதிபராக இருந்தார்; தமிழிசைக்காகப் பாடுபட்டார் - கல்வி அமைச்சராக இருந்தார் - இப்படியெல்லாம் ஒரு பெரிய வரலாறு இருந்தாலும், இன்றைய நிலையில், அவரிடமிருந்து தெரிந்துகொள்ளவேண்டியது என்னவென்றால், மீண்டும் இந்தித் திணிப்பு நடக்கக் கூடிய இந்தக் காலகட்டத்திலே, அவர்தான் இந்தி எதிர்ப்புப் போராளியாக எல்லா இடங்களிலும் இருந்தார். அதுதான் மிகவும் முக்கியம்.

காங்கிரசு கட்சியினுடைய சட்டமன்ற உறுப்பினராக காரைக்குடி தொகுதியிலிருந்து அவர் வெற்றி பெற்றார். அதற்கு முன்பு அவர் நீதிக்கட்சியைச் சார்ந்தவர்.

காமராசர் அவர்கள்தான், அவரை காரைக்குடி தொகுதியில் நிறுத்தி, அவரை வெற்றி பெற வைத்தார், மிகப்பெரிய அளவிற்கு.

இந்தி எதிர்ப்புத் தீரர்!

அப்போதுகூட ஒரு சுதந்திர மனிதராக - கட்சிக் கட்டுப்பாடு என்பதைப்பற்றிக் கவலைப்படாமல், எந்த மேடை கிடைத்தாலும் இந்தித் திணிப்பை என்றைக்கும் எதிர்த்தே தீரவேண்டும்; அதற்கு ஒருபோதும் தமிழ்நாட்டில் இடம் கிடையாது என்று சொல்லத் தவறாதவர் ராஜா சர் முத்தையா அவர்கள்.

தான் பெரிய பதவியில் இருக்கிறோம் என்கின்ற எண்ணம் இல்லாமல், பெரிய பெரிய பதவியில் இருப்பவர்கள், அறிமுகமானவர்கள். எல்லோரிடமும் பழகுவார்; எல்லோரிடமும் இன்முகத்தோடு பழகுவார்.

அத்தகைய அதிசயங்களை மட்டும்தான் நம்முடைய மாணவ இளைஞர்கள் தெரிந்துகொள்ளவேண்டும். மற்ற செய்திகள் - அவர் தொழிலதிபராக இருந்தார்; இத்தனை தொழில்களை நடத்தினார்; மேயராக இருந்தார் என்றெல் லாம் சொல்வார்கள்.

ஆனால், நாங்கள் சொல்கின்ற செய்திகளை, எங் களைத் தவிர மற்றவர்கள் யாரும் சொல்லமாட்டார்கள். ஆகவேதான், அந்தச் செய்திகளை உங்களுக்குச் சொல்லவேண்டும் என்று விரும்புகிறேன்.

1938 இல் கட்டாய இந்தியை ராஜகோபாலாச்சாரியார் திணிக்கிறார். அந்த நேரத்தில், தந்தை பெரியார் தலைமையில், நாவலர் சோமசுந்தர பாரதியார், 'தமிழ்க் கடல் மறைமலையடிகள்'  மறைமலையடிகளார் போன்றவர்கள் - தமிழறிஞர்கள் ஒரு பக்கத்தில் சேர்ந்து இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கின்றனர்.

தந்தை பெரியாரை, மூன்றாண்டுகள் என்று தண் டனை விதித்து பெல்லாரி சிறையில் அடைக்கிறார்கள். வெயில்காலம் என்பதால், பெரியாருடைய உடல்நலத் திற்குப் பாதிப்பு ஏற்பட்டது.

(தொடரும்)


No comments:

Post a Comment