லக்னோ, ஆக.24 பாரதீய ஜனதா ஆளும் உத்தரப்பிரதேசத்தில் சமூகநீதித் தலைவர்களின் சிலைகள் அனைத்தும் மாநகராட்சி குப்பைக் கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.
மாயாவதி உத்தரப்பிரதேச முதலமைச்சராக இருந்தபோது மாநிலத்தில் முக்கிய சாலைகளின் சந்திப்புகளில் சமூகநீதிக்காகப் பாடுபட்ட தலைவர்களான டாக்டர் அம்பேத்கர், சாகுமகராஜ், ஜோதிராவ் புலே போன்ற தலைவர்களின் சிலைகளை அமைத்தார்,
அவருக்குப் பிறகு முதலமைச்சராக இருந்த அகிலேஷ் அந்த சிலைகள் உள்ள பகுதிகளைப் பூங்காவாக்கி அதனை மாநகராட்சி மற்றும் தனியார் நிறுவனப் பங்குகளுடன் தூய்மைப்பணி மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். இந்த நிலையில் 2017 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் பாஜக பெரும்பான்மை வெற்றி பெற்றது, நீண்ட இழுபறிக்குப் பிறகு சாமியார் ஆதித்யநாத் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
அதன் பிறகு சிக்கன நடவடிக்கை என்று கூறி தலைவர்களது சிலைகள் உள்ள பகுதிகளின் பரமாரிப்பு ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது, அதன் பிறகு சிலைகள் சாலைப் போக்குவரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று கூறி சாலை ஓரம் தூக்கி வைத்தனர். தற்போது சிலைகள் அனைத்தும் மாநகராட்சி குப்பைக் கிடங்கில் கொண்டு சென்று வைக்கப்பட்டுள்ளன. இதில் பல சிலைகள் முற்றிலும் சேதமடைந்து விட்டன. மீதமுள்ள சிலைகள் மிகவும் மோசமான நிலையில் சிதிலமடைந்து காணப்படுகின்றன.
உலகில் வேறு எங்குமே காணப்படாத கலாச்சார அழிப்பு இந்தியாவில் ஆயிரம் ஆண்டுகளாக நடந்தது இன்றும் தொடர்கிறது. ஆரியர்கள் கைபர்போலன் கணவாய் வழியாக வந்த உடனேயே சிந்துவெளி நாகரிகத்தை முற்றிலும் சிதைத்தனர், அதன் பிறகு கங்கைச் சமவெளியில் ஒடுங்கிப்போனவர்கள் தந்திரமாக சுங்கன்மூலம் மவுரியப் பேரரசை அழித்து பார்ப்பனரான சுங்கனை மன்னராக்கி பவுத்த - சமண அடையாளங்களை பவுத்த சமண மரபை ஆதரித்த ஆட்சியாளரின் அடையாளங்களைச் சிதைத்தனர். இன்று சமூகநீதிக்காகப் பாடுபட்ட தலைவர்களின் சிலைகளையும், அவர்கள் மக்களுக்கு அளித்த பங்கினையும் திட்டமிட்டு அழித்து வருகின்றனர்.
கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து மாசிடோனியாவின் மைசீனியர்கள், அவர்களை அடுத்து ரோமர்கள், பிறகு ஒட்டமன் பேரரசு பிறகு இரண்டாம் உலகப்போரில் நாஜிக்கள் என பல நூற்றாண்டுகளாக பல்வேறு ஆளுமைகளின்கீழ் வந்தாலும், ஒவ்வொரு பேரரசும் அதற்குமுன்பு இருந்த பேரரசுகளின் நினைவுச் சின்னங்களை அழகுபடுத்தினார்களே தவிர சீர்குலைக்கவில்லை
எடுத்துக்காட்டாக ரோமர் காலத்தில் கட்டப்பட்டு சீர்குலைந்த நிலையில் இருந்த பிரமாண்ட நாடகமேடைகளை ஒட்டமன் பேரரசின் ஆட்சியில் அதனை அழகுற சீர்படுத்தி அவர்களும் கலைகளை வளர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மாயன் கலாச்சார அடையாளங்களை தென் அமெரிக்காவை ஸ்பானியர்கள் கைப்பற்றியதும், அழியும் நிலையில் இருந்த மாயான் கலாச்சார சின்னங்களை புதுப்பித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment