இலங்கை கடற்படையினர் அட்டூழியம் தமிழ்நாட்டு மீனவர்கள் சிறைபிடிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 23, 2022

இலங்கை கடற்படையினர் அட்டூழியம் தமிழ்நாட்டு மீனவர்கள் சிறைபிடிப்பு

நாகை, ஆக.23 எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர்.   தமிழ் நாட்டைச் சேர்ந்த மீனவர்கள், கடலில் மீன்பிடிக்கும்போது   இலங்கை கடற் படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி சிறைபிடிக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. கடந்த 10ஆம் தேதி நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த நாகை மீன வர்கள் 9 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் நாகை, மயிலாடுதுறை மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர்  சிறை பிடித்து சென்ற சம்பவம் மீனவர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

10 மீனவர்கள் சிறைபிடிப்பு 

நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்தவர் கலையரசன்(வயது 40). இவருக்கு சொந்தமான விசைப்படகில் இவரும், அக்கரைப்பேட்டையை சேர்ந்த சஞ்சிகண்ணு, ஆனந்த், கமல நாதன், ராஜா மற்றும் மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரை சேர்ந்த ஆகாஷ், ரீகன், பிரவீன் ஆகியோர் உள் பட 10 மீனவர்கள் நாகை அக்கரைப் பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 20-ஆம் தேதியன்று விசைப்படகில் மீன்பிடிக்க சென்றனர்.

இவர்கள், கோடியக்கரைக்கு தென்கிழக்கே முல்லைத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி நாகை, மயிலாடு துறையை சேர்ந்த 10 மீனவர்களையும் சிறைபிடித்தனர். பின்னர் மீனவர்களை கைது செய்ததுடன், அவர்கள் வந்த விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து திரிகோண மலைக்கு கொண்டு சென்றனர். 

ஒரே மாதத்தில் 2 சம்பவங்கள் 

நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்ற சம்பவம் நாகை, மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒரே மாதத்தில் இதுபோன்ற 2 சிறைபிடிப்பு சம்ப வங்கள் நடந்து உள்ளதால் நாகை, மயி லாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் மிகுந்த கவலையில் ஆழ்ந்து உள்ளனர். உயிரை பணயம் வைத்து தொழில் செய்யும் தங்களை நிம்மதியாக தொழில் செய்ய விடாமல் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதால் தங்களுக்கு ஏற்பட்டு வரும் சொல்லொணா துயரத்திற்கு எப்போதுதான் தீர்வு கிடைக்குமோ? என்று வேதனை தெரிவித்தனர்.

 கோரிக்கை 

எனவே இனிமேலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடராத வண்ணம் தாங்கள் நிம்மதியாக கடலுக்கு சென்று மீன்பிடித்து வர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய, மாநில அரசுகளுக்கு தமிழ்நாட்டு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


No comments:

Post a Comment