பெரியார் மண்ணான தமிழ்நாட்டில் ''காவி வித்தை''கள் எடுபடாது!
திராவிடத்தினுடைய மூச்சுக்காற்று ‘விடுதலை’ நாளேடு!
மன்னார்குடி, ஆக.24 திராவிடத்தினுடைய மூச்சு என்பது இருக்கிறதே, அதன் பிராண வாயுக்குப் பெயர் தான் நண்பர்களே ‘விடுதலை’ ஏடு! மூச்சுக் காற்றுக்கு நாம் நன்றி சொல்கிறோமா? அதுபோன்று ‘விடுதலை’ நாடெங்கும் பரவவேண்டும் என்ற நோக் கமே இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியமானதாகும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
மன்னார்குடியில் நடைபெற்ற கலந்துரையாடல்
கடந்த 13.8.2022 அன்று மாலை 60 ஆயிரம் ‘விடுதலை’ சந்தா திரட்டுவது குறித்து மன்னார்குடியில் நடைபெற்ற மன்னார்குடி, பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடு துறை, காரைக்கால் மாவட்டங்களின் திராவிடர் கழக கலந்துரையாடலில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை யாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
நம்முடைய கைகளில் இருக்க வேண்டிய, இனப் போரிலே பயன்படுத்தவேண்டிய ஓர் ஆயுதம் ‘விடுதலை’ என்றாலும்,
இந்தக் காலகட்டத்தில் அது பரவலாக எல்லோர் கைகளிலும் தவழவேண்டும்; எல்லோர் மனதிலும் ஊடுருவவேண்டும் என்று நினைக்கின்றோம்.
அதற்கு என்ன காரணம்?
எதிரிகளை மக்களுக்கு
அடையாளம் காட்டக்கூடிய கலங்கரை வெளிச்சம் ‘விடுதலை’
நமக்காகவா - நம் பெருமைக்காகவா - அல்லது ‘விடுதலை’ ஆசிரியராக இருக்கிறேன், ஆகவே இத்தனைப் பேர் படிக்கிறார்கள் என்கின்ற கித்தாப்புக்கும், பெருமைக்கும் நம்மை ஆளாக்கிக் கொள்வதற்கா? இல்லை நண்பர்களே, இன்றைய காலகட்டத்தில் நம்முடைய எதிரிகள் மோசமான எதிரிகள். ஒரு நாணயம் இல்லாத எதிரிகள் - எந்த நிலைக்கும் கீழிறங்கி எல்லா வகையிலும் இறங்கக் கூடியவர்கள் அவர்கள் - அப்படிப்பட்ட எதிரி களை மக்களுக்கு அடையாளம் காட்டக்கூடிய ஒரே ஒரு கலங்கரை வெளிச்சம் இருக்கிறது என்றால், அது ‘விடுதலை’ என்ற நாளேடுதான்.
‘விடுதலை’ நாளேட்டை எல்லோரையும் படிக்க வைக்கவேண்டும்.
ஆனால், இன்றைக்கு முகக்கவசம் அணியுங்கள், தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என்று சொன்னாலும் பல பேர் கேட்பதில்லையே!
‘விடுதலை’ நாளிதழை
மக்கள் மத்தியில் புகுத்தவேண்டும்
அதுதான் கரோனா தொற்றிலிருந்து நம்மைக் காப் பாற்றும் என்று சொன்னாலும் கேட்பதில்லை. அதற்கே பெரிய விளம்பரங்கள் செய்யவேண்டி இருக்கிறதே. அதுபோல, ‘விடுதலை’ நாளிதழை இன்னும் மக்கள் மத்தியில் புகுத்தவேண்டும்.
ஆகவே நண்பர்களே, நம்முடைய இலக்கு 60 ஆயிரம் ‘விடுதலை’ சந்தாக்கள் என்று சொன்னார்களே, அது எப்படி?
தமிழ்நாட்டினுடைய மக்கள் தொகை 6 கோடிக்கு மேல். நம்முடைய இலக்கு 60 ஆயிரம் சந்தாக்கள் என்று சொல்லும்பொழுது ஒரு சதவிகிதத்திற்கும் கீழே - நன்றி காட்டுவதற்கு நாம் இவ்வளவு கடும் உழைப்பை மேற்கொண்டிருக்கின்றோம். இதுதான் நம்முடைய இனத்தினுடைய கதி - இதை நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.
பல பேர் கொள்ளிக்கட்டையை எடுத்துத் தலையை சொறிந்துகொள்கிறார்கள். நம்முடைய எதிரிகளுடைய பத்திரிகைகளை - யார் நம்மை, நம் கொள்கையை கேலி செய்து விமர்சிக்கிறார்களோ அந்தப் பத்திரிகைகளைத் தான் வாங்குகிறார்கள். அய்யா அந்தக் காலத்திலேயே சொன்னது உங்களுக்கெல்லாம் தெரியும்.
‘விடுதலையின் வீர வரலாறு' என்ற புத்தகத்தில் அந்தத் தகவல்கள் எல்லாம் இருக்கின்றன. அந்தப் புத் தகத்தை வாங்கிப் படித்தால் இந்த உண்மைகளை யெல்லாம் நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.
இங்கே முருகைய்யன் அவர்கள் சொன்னார் அல் லவா - அய்யா பயன்படுத்துகின்ற சொல்லை நீங்கள் பார்க்கவேண்டும்.
குலக்கல்வித் திட்டம்
தொடர்ந்திருந்தால்...
‘விடுதலை’க்கு இதுவரையில் ஏற்பட்டு இருக்கிற லாபம் - சமுதாய லாபமாகும்.
குலக்கல்வித் திட்டம் தொடர்ந்திருந்தால், இன்றைக்கு நாட்டில் இவ்வளவு பள்ளிக்கூடங்கள் வந்திருக்குமா? இவ்வளவு பட்டதாரிகள் வந்திருப்பார்களா? இவ்வளவு பெண்கள் படித்திருப்பார்களா? அவர்கள் எல்லாம் படித் ததினால்தானே உத்தியோகங்களுக்குச் சென்றிருக் கிறார்கள்.
இன்றைக்கு எல்லாத் துறைகளிலும் நம் சமுதாயத்து பிள்ளைகள் இருக்கிறார்களே - இன்றைக்கு மாவட்ட ஆட்சித் தலைவராக, காவல்துறை உயரதிகாரிகளாக இருக்கிறார்களே அவர்கள் எல்லாம் ஒடுக்கப்பட்ட சமுதாயத்திலிருந்து எப்படி வந்தார்கள்?
மண்டல் கமிசன் -
69 சதவிகித இட ஒதுக்கீடு -
இவையெல்லாம் எப்படி சாத்தியமாயிற்று?
‘விடுதலை’ நாளிதழின் வரலாற்றையெல்லாம் மக்களிடம் எடுத்துச் சொல்லவேண்டும்
‘விடுதலை’ என்ற மாபெரும் கருவியினால்தான். அந்த வரலாற்றையெல்லாம் மக்களிடம் எடுத்துச் சொல்லவேண்டும்.
‘விடுதலை’யினுடைய தொண்டு கண்ணுக்குத் தெரியாது - சுவாசிக்கின்ற காற்று போன்றது.
நம்முடைய இயக்கத்தினுடைய பெருமை பல பேருக்குத் தெரியாது.
பெரியார் தேவை, தேவை என்று உணருகின்றோமே - பெரியாரையும், விடுதலையும் பிரிக்க முடியாது.
பெரியாருடைய கருவிதான் ‘விடுதலை’ - பெரியாரு டைய கருத்துகள் அதன்மூலம் பரவக்கூடியது என்கிற வாய்ப்புகள் வரும்பொழுது, ஏற்கெனவே நான் சொன்ன உதாரணம் உங்களுக்கெல்லாம் நினைவில் இருக்கும்.
மனிதன் உயிரோடு இருக்கிறான் என்பதற்கு என்ன அடையாளம்?
மனிதன் உயிரோடு நடமாடுகிறான் என்பதற்கு அடையாளம் மூச்சுக் காற்றுதான். ‘பிராண வாயு' என்பதுதான்.
பேச்சு, மூச்சு இல்லாமல் ஆயிற்று என்று ஒரு சிலர் சொல்வார்கள்.
24 மணிநேரமும் அந்த மூச்சுக் காற்று இருப்பதினால்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அந்த மூச்சுக் காற்றினுடைய முக்கியத்துவம்பற்றி நாம் நினைக்கின்றோமா? என்றால் இல்லை.
சில நேரங்களில், அந்த மூச்சுக் காற்றைப்பற்றி நினைக்கவேண்டிய நேரம் வரும்!
எப்பொழுது?
மூச்சுத் திணறல் ஏற்படும்பொழுது. அப்பொழுதுதான் அவசர அவசரமாக மருத்துவனைக்கு அழைத்துச் சென்று, தீவிர சிகிச்சைப் பிரிவில் படுக்க வைத்து, மூக்கில் குழாய் பொருத்தி, ஆக்சிஜன் கருவியை இயக்கும்பொழுதுதான், மூச்சுக் காற்றுக்கு இவ்வளவு சக்தி இருக்கிறது என்று நினைக்கத் தோன்றும்.
திராவிடத்தினுடைய மூச்சுக் காற்றுதான் ‘விடுதலை’ ஏடு
அதுபோன்று, திராவிடத்தினுடைய மூச்சு என்பது இருக்கிறதே, அதன் பிராண வாயுக்குப் பெயர்தான் நண்பர்களே ‘விடுதலை’ ஏடு என்பதாகும்.
மூச்சுக் காற்றுக்கு நாம் நன்றி சொல்கிறோமா? அதுபோன்று ‘விடுதலை’ நாடெங்கும் பரவவேண்டும் என்ற நோக்கமே இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியமானதாகும்.
மின் மினிப் பூச்சிகள் மின்சாரத்தோடு போட்டிப் போடக் கூடிய அளவிற்கு இன்றைக்கு அவர்கள் கற்பனை செய்துகொண்டிருக்கிறார்கள்.
காவி ஒருபோதும் கருப்பை அழிக்க முடியாது - போட்டி போட முடியாது. திராவிடம் வெல்லும். ‘திராவிட மாடல்’ ஆட்சியை அசைக்க முடியாது.
‘‘அதிகாரம் இருக்கிறது - அதிகாரத்திற்குமேலே அதி காரத்தைப் பயன்படுத்தக் கூடியவர்கள் இருக்கிறார்கள்; வித்தைகள் எங்களுக்குத் தெரியும்; கார்ப்பரேட் முத லாளிகள் எங்கள் பைக்குள் இருக்கிறார்கள் - ஆகவே நாங்கள் நினைப்பது எல்லாவற்றையும் செய்வோம்’’ என்று சொன்னால், மற்ற இடங்களில் உங்களுடைய வித்தைகள் எடுபடும்.
பெரியார் மண்ணான தமிழ்நாட்டில்
காவி வித்தைகள் எடுபடாது!
ஆனால், இது பெரியார் மண் - சமூகநீதி மண் - இந்த இடத்தில் உங்களுடைய வித்தைகள் எடுபடாது என்று சொன்னால், அதற்கு என்ன காரணம்?
கண்ணிவெடிகள் எங்கிருந்தாலும் அதைக் கண்டுபிடிக்கக்கூடிய கருவியான ‘விடுதலை’ போன்ற நாளேடுகள். நம்முடைய இயக்கம்.
ஆகவேதான், ‘விடுதலை’யைப் பரப்பவேண் டும்; பலப்படுத்தவேண்டும் என்பதுதான் நம்மு டைய நோக்கம்.
ஒரு சிறிய உதாரணத்தை உங்களுக்குச் சொல் கிறேன். செய்தியாளர்கள்கூட என்னிடம் கேட் டார்கள்; அதை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். உற்சாகத்தோடு நீங்கள் வருகின்ற 10 நாள்களும் பணியாற்றவேண்டும். எவ்வளவு பெரிய வெற்றிகள் நாம் கேட்காமலேயே, தானே வந்து நம்முடைய கதவைத் தட்டுகின்றன.
பெரியார் விதைத்தார்; உழைத்தார் - அதனால், கதிர்கள் நன்றாக விளைந்து நிற்கின்றன. நான் அடிக்கடி சொல்லுகின்ற உதாரணம் உங்களுக் கெல்லாம் நினைவில் இருக்கலாம்.
1946 இல் மதுரையில் நடைபெற்ற
கருப்புச் சட்டை மாநாடு
1946 ஆம் ஆண்டு கருப்புச் சட்டை படை என்ற ஓர் அமைப்பை அமைத்தார்கள்; அதற்கு இந்தப் பகுதியைச் சார்ந்த எஸ்.கருணானந்தம், ஈ.வெ.கி.சம்பத் ஆகிய இரண்டு பேரையும் அமைப்பாளராக போட் டார்கள்.
அன்றைக்குக் கருப்புச் சட்டைக்கு ஒரு பெரிய சிறப்பு ஏற்படுத்தவேண்டும் என்பதற்காக கருப்புச் சட்டைப் படை மாநாடு, 1946 ஆம் ஆண்டு மதுரையில் நடை பெற்றது.
காலையில் வைகை ஆற்றங்கரையில் பெரிய பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. கருப்புச் சட்டையோடு உணர்வாளர்கள் வருகிறார்கள். அய்யா, அண்ணா போன்ற தலைவர்கள் எல்லாம் வருகிறார்கள்.
மாநாடு நடைபெறுவதைப் பார்ப்பனர்களால் பொறுத் துக் கொள்ள முடியவில்லை. அன்றைக்குப் பார்ப்பனர் களுக்குப் பெரிய பாதுகாப்புக் கூடாரம் - இன்றைக்குப் பா.ஜ.க. போன்று, அன்றைக்குக் காங்கிரஸ் இருந்தது.
கருப்புச் சட்டைத் தோழர்கள்மீது
அபாண்டமான பழி சொன்னார்கள்!
வைத்தியநாதய்யர்கள் மற்றும் சிலர் திட்டம் போட்டு, காலிகளையும், கூலிகளையும் பயன்படுத்தி, மாநாட்டுப் பந்தலுக்குத் தீ வைத்தார்கள். கருப்புச் சட்டைத் தொண் டர்களின்மேல் அபாண்டமான பழி சொன்னார்கள். கோவில்களுக்குச் சென்ற பெண்களையெல்லாம் அவ மானப்படுத்தினார்கள், கேவலப்படுத்தினார்கள் கருப்புச் சட்டைக்காரர்கள் என்று பொய்யான தகவல்களைச் சொன்னார்கள்.
இன்றைக்கு எப்படி பொய்யான தகவல்களை உரு வாக்குவதற்கே ஒரு கட்சி இருக்கிறதே, அதேபோன்று, வதந்திகளைப் பரப்பி, உள்ளூர்க்காரர்கள் ஆத்திரப்பட்டு நம்மாட்களை அடிப்பது போன்று செய்து, மாநாட்டினை அதற்குமேல் நடத்த முடியாத அளவிற்கு செய்தார்கள். அய்யா அவர்கள், ‘‘தோழர்களே, பத்திரமாக ஊருக்குத் திரும்புங்கள்’’ என்று சொன்னார்.
அன்றைய ஆட்சி காங்கிரஸ் ஆட்சி - பார்ப்பன ஆட்சி - வேறு வழியில்லாமல் தோழர்கள் திரும் பினார்கள்.
இது நடந்தது 1946 ஆம் ஆண்டு. ஏறத்தாழ 77 ஆண்டுகளுக்கு முன்பு.
போராட்டம் என்று வந்தால், கருப்புச் சட்டையைத்தான் கருவியாகக் கையாளுகிறார்கள்!
ஆனால், வரலாறு எப்படி திரும்புகிறது என்று சொன்னால், இன்றைக்குத் தமிழ்நாட்டில் எந்தக் கட்சியாக இருந்தாலும், போராட்டம் என்று வரும்பொழுது, அந்தப் போராட்டத்தை வலிமை யாக நடத்தவேண்டும் என்று அவர்கள் நினைத் தால், அதற்கு அவர்கள் கையாளுகின்ற கருவி - கருப்புச் சட்டைதான்.
எல்லாக் கட்சிக்காரர்களும் கருப்புச் சட்டை யைத் தைத்து வைத்திருக்கிறார்கள். கருப்புச் சட்டை இல்லாத கட்சிக்காரர்களே கிடையாது. காவிக்கு அந்தச் சிறப்பு உண்டா?
ஆகவே, எல்லோரும் கருப்புச் சட்டையைத் தைத்து வைத்திருக்கிறார்கள் தமிழ்நாட்டில். ஆனால், பெரியார் இப்பொழுது தமிழ்நாட்டோடு நிற்கவில்லை.
எங்கே போயிருக்கிறார்?
கருப்பு உடையை அணிந்து டில்லியையே
ஒரு கலக்குக் கலக்கினார்கள்
டில்லிக்குப் போயிருக்கிறார் - அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்கள் உள்பட கருப்பு உடையை அணிந்து, ராகுல் காந்தி கருப்பு உடையை அணிந்து, மேனாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருப்புச் சட்டையை அணிந்து, அத்துணை காங்கிரஸ் தோழர்களும் நியாயம் தேவை, நீதி தேவை என்று, விலைவாசியைக் கட்டுப் படுத்தவேண்டும் என்று போராட்டம் நடத்தியபொழுது, கருப்பு உடையை அணிந்து டில்லியையே ஒரு கலக்குக் கலக்கினார்கள். (தொடரும்)
No comments:
Post a Comment