சனாதனத்தின் தொடர்ச்சியே 'நீட்' தேர்வு.. தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அரியலூர் பிரகடனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 7, 2022

சனாதனத்தின் தொடர்ச்சியே 'நீட்' தேர்வு.. தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அரியலூர் பிரகடனம்

கடந்த 30.7.2022 அன்று அரியலூர் மாவட்ட தலைநகரில் திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாடு வெற்றிகரமாக மாபெரும் எழுச்சியுடன் நடைபெற்றது. அனைவரும் எதிர்பார்த்ததை விட மிகப்பெரும் எண்ணிக்கை அளவில் தோழர்கள் கலந்து கொண்டனர் அதில் பெரும்பாலானோர் இளைஞர்கள் என்பது பெரும் நம்பிக்கைக்கும் சிறப்புக்கும் உரியது. அரியலூர் என்றுமே பெரியார் மண் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியது.

மாலை கருஞ்சட்டைப் பேரணியிலும், இரவு திறந்தவெளி மாநாட்டிலும் கலந்து கொள்ளும் வாய்ப்பு  பெற்றேன்.இன்னும் நூற்றாண்டுக்கு  திராவிட மாடல் ஆட்சிக்கு அழுத்தம் தரும் இயக்கமாக திராவிடர் கழகம் திகழும் என்பதை உணர்த்திய மாநாடுதான்  இது.

அரியலூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் தலைவர் விடுதலை.நீலமேகம், மண்டல இளைஞரணிச் செயலாளர்  மருவத்தூர்.செந்தில், மாவட்டச் செயலாளர் சிந்தனைச் செல்வன் மற்றும் இளைஞரணித் தோழர்களின் கடும் உழைப்பை திரும்பும் திசையெங்கும் திரண்டிருந்த கருப்புச்சட்டைகள் வெளிப்படுத்தியது.

என் தந்தையும் நானும் பெரியார் வழி வந்த கடவுள் மறுப்பாளர்கள் என்று மேடையில் பேசிய ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் க.சொ.க. கண்ணன் , திராவிடம் இயக்கம் வழிவந்த பெரியவர் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் அய்யா  கு.சின்னப்பா, ஆசிரியர் அவர்களின் தலைமையில் - இடையிலே மேடையில் ஒரு சுயமரியாதைத் திருமணம், மணமகன் திராவிட விஷ்ணு அவர்களுக்கு  "திராவிட வித்து" என்று பெயரிட்டார், ஆசிரியர்.

தொடர்ந்து கழகத்தின் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன்  உரையைத் தொடர்ந்து   பொன்.செந்தில்குமார்-இராதிகா தம்பதியினர் அடிமைச் சின்னமான தாலியை அகற்றிக் கொண்டனர்.

நேரம் கருதி  குறுகிய உரை ஆற்றிய அய்யா சு.அறிவுக்கரசு (அவரின் நீண்ட உரைக்காக  காத்திருந்த எனக்கு ஏமாற்றம்தான்),  

மானசீகமாக என்றும் திராவிடர் கழகத்துடன் பயணித்து வருபவன் நான் என்று பேச்சைத் தொடங்கிய அமைச்சர்  சா.சி. சிவசங்கர்  அவர்கள், "எனது தந்தை சிவசுப்ரமணியம் அவர்கள் பெரியாரை வைத்து மாநாடு நடத்தி பெருமை பெற்றது போல், இம்மாநாட்டில் நான் பங்கேற்பதில் பெருமை கொள்கிறேன்". ஜூலை,12 2017 நீட் தேர்வுக்கெதிராக திராவிடர் கழகம் நடத்திய போராட்டத்தில்  அனிதா கலந்து கொண்டதையும், அதை அண்ணன் சிவசங்கர் அவர்கள் வெளிப்படுத்தியதன் மூலம்  நீட் எதிர்ப்பு போராட்டம் தமிழ்நாடு முழுவதும் பரவியது குறித்தும் பேசினார். அவர்களின்  உரை நிச்சயம் திமுக அரசு நீட் விலக்கு பெற்று நமது கல்வி உரிமையை பாதுகாக்கும் என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்துவதாக அமைந்தது.

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அவர்களின் பேச்சு  திராவிட இயக்கம் தாழ்த்தப்பட்ட சமூகத்தவர்களுக்கு செய்ததென்ன என்ற கேள்விக்கு விடையாக அமைந்தது. இறுதியாக, வழக்கம் போல் பல குறிப்பு புத்தகங்களுடன் ஆசிரியர் வகுப்பெடுத்தார். ஆசிரியரின் வகுப்பு 'நீட்' விலக்கு பெற்று கல்வி உரிமையைப் பாதுகாக்க  திமுகவுக்கு பக்கபலமாகவும், தொய்வு ஏற்பட்டால் அழுத்தம் கொடுக்கும் விதமாகவும் கழகம் செயல்படும் என்ற கருத்தை உணர்த்தியது.

எந்த பிரதிபலனும்  இன்றி ஆசிரியரின் கட்டளைக்கு மட்டுமே திரண்ட கூட்டம் இது..

திராவிட இயக்கத்தை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது.

திராவிட இயக்கத் தலைவர்களுடன் புரட்சியாளர் அம்பேத்கர் உருவ ஒளிப்படமும் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது.

அம்பேத்கரும் திராவிடத்(சமத்துவத்தின்) தலைவர்தான்.

வாழ்க பெரியார்

ஜெய்பீம்

- வை.கலையரசன்


No comments:

Post a Comment