வைர வியாபாரி மெகுல் சோக்சி மீது வெளிநாட்டுச் செலாவணி மோசடி வழக்கு, ஊழல், கடனை திரும்ப செலுத்தாத வழக்கு உள்பட கிரிமினல் குற்ற வழக்குகளை மத்திய புலனாய்வு அமைப்பும், அமலாக்கத்துறையும் பதிவு செய்துள்ளன
பஞ்சாப் நேஷனல் வங்கியில் நீரவ் மோடியும், அவரது உறவினர் மெகுல் சோச்சியும் ரூ.13,500 கோடி அளவில் மோசடி செய்துவிட்டு 2018-ஆம் ஆண்டு வெளிநாடு தப்பிச் சென்றனர். இதில் நீரவ் மோடி லண்டனுக்கும், மெகுல் சோக்சி ஆன்டிகுவா தீவுக்கும் தப்பிச் சென்றனர்,
நீரவ் மோடி 2019 மார்ச் மாதம் லண்டனில் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியா அழைத்து வரும் முயற்சி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்பட்டது. மெகுல் சோக்சி ஆன்டிகுவாவில் குடியுரிமைப் பெற்று மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகிறார்.
வங்கிகளில் பணம் பெற்று திரும்ப செலுத்தாமல் நாட்டை விட்டு ஓடிப் போனவர்கள் என்றால் விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி இவர்கள்தான் நினைவுக்கு வருபவர்கள்.
ஆனால், 2015-ஆம் ஆண்டிலிருந்து 2019-ஆம் ஆண்டு வரையான நான்கு ஆண்டுகளில் மோசடி வழக்குகளிலிருந்து தப்பிப்பதற்காக இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குத் தப்பியோடியவர்களின் எண்ணிக்கை 38.
இதில் மிகப் பெரும் மோசடி செய்தவர்கள் சந்தேசர் சகோதரர்கள், வங்கிகளில் ரூ.15,000 கோடி அளவில், மோசடி செய்துவிட்டு, தங்கள் குடும்பத்தோடு 2017-ஆம் ஆண்டு வெளிநாடு தப்பிச் சென்றனர். இவர்கள் அல்பேனியா நாட்டில் குடியுரிமைப் பெற்று வசித்துவருகின்றனர்
2015-2019 வரையில் தப்பியோடிய 38 பேரில் 2 பேர் மட்டுமே இன்றுவரை இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். மீதமுள்ள 36 பேர் இன்னும் வெளிநாடுகளில்தான் உள்ளனர். இவர்களில் 20 பேர் மீது வெளிநாட்டுச் செலாவணி மோசடி வழக்குகள் உள்ளன. 11 பேர் மீது பொருளாதார குற்றங்களுக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2020 ஆம் ஆண்டு, ரூ.414 கோடி மோசடி வழக்கில் டில்லியைத் தலைமையிடமாகக் கொண்ட "ராம் தேவ் இன்டர்நேஷனல் லிமிடெட்" நிறுவனத்தின் இரு இயக்குநர்களும், ரூ.350 கோடி மோசடி வழக்கில் பஞ்சாப் பாசுமதி ரைஸ் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் ஒருவரும் வெளிநாடு தப்பிச் சென்றுள்ளனர்.
இவ்வாறு வங்கிகளில் பெருமளவு கடன் பெற்று மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்புவது என்பது இந்தியாவில் தொடர்கதையாகி விட்டது. தப்பியோடியவர்கள் ஏதாவது ஒரு நாட்டில் தஞ்சம் அடைந்து குடியுரிமை பெற்றுவிட்டால், அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வருவது சிக்கலாகிறது. அதிகபட்சம் அவர்களது சொத்துக்களை முடக்குவது மட்டும்தான் இந்திய அரசால் செய்யக் கூடியதாக இருக்கிறது. அந்த வகையில் விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல்சோக்சி தொடர்புடைய ரூ.18,170 கோடி மதிப்பிலான சொத்துக்களை இது வரையில் அமலாக்கத்துறை கைப்பற்றியுள்ளது. இதில் ரூ.9,371 கோடி மதிப்பிலான சொத்துகள் வங்கிகளிடம் ஒப் படைக்கப்பட்டுள்ளன. அந்த மூவர் வங்கிகளுக்கு ஏற்படுத்திய இழப்பு ரூ.22,515 கோடி. அந்த வகையில் 40 சதவீதம் மட்டுமே இதுவரையில் வங்கிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
2020-2021-ஆம் நிதி ஆண்டில் வங்கி மோசடி எண்ணிக்கை 15 சதவீதம் அளவில் குறைந்திருப்பதாக சமீபத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஆண்டறிக்கை கூறுகிறது. 2019-2020ஆம் நிதி ஆண்டில் வங்கிகளில் கடனாகப் பெற்று மோசடி செய் யப்பட்ட தொகை ரூ.1.25 டிரில்லியனாக உள்ளது. (டிரில்லியன் ஒரு லட்சம் கோடி) பொதுத் துறை வங்கிகளில் 2019-2020ஆம் நிதி ஆண்டில் 4,410 கடன் மோசடிகள் நடைபெற்றுள்ள நிலையில், சென்ற நிதி ஆண்டில் அது 2,903 ஆக குறைந்துள்ளது. பொதுத்துறை வங்கிகளில் 2019-2020ஆம் நிதி ஆண்டில் மோசடி செய்யப்பட்ட தொகை ரூ.1,48,224 கோடியாக இருந்தது.
சென்ற நிதி ஆண்டில் அது ரூ.81,901 கோடியாக குறைந் துள்ளது. ஆனால் தனியார் வங்கிகளில் மோசடிகள் பெரிய அளவில் அதிகரித்துள்ளன. 2019-2020ஆம் நிதி ஆண்டில் தனியார் வங்கிகளில் நடந்த, மோசடிகளின் எண்ணிக்கை 3,065, அந்த எண்ணிக்கை 2020-2021ஆம் நிதி ஆண்டில் 3,719 ஆக அதிகரித்துள்ளது 2019-2020ஆம் நிதி ஆண்டில் மோசடி செய்யப்பட்ட தொகை ரூ.14,711 கோடி 2020-2021ஆம் நிதி ஆண்டில் அது 35 சதவீதம் உயர்ந்து ரூ.46,335 கோடியாக உள்ளது.
மோடி ஆட்சியில் பொருளாதார வளர்ச்சியின் இலட்சணம் இந்த யோக்கியதையில்தான் உள்ளது - உஷார்! உஷார்!!
No comments:
Post a Comment