சென்னை, ஆக.3 ஜிஎஸ்டி அறிமுகப் படுத்தப்பட்ட பின் மாநிலங்களுக்கு வரி விதிப்பதில் அதிகாரம் பெருமளவில் குறைந்துள்ளது என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனி வேல் தியாகராஜன் நேற்று (2.8.2022) வெளியிட்ட அறிக்கை: நாடாளு மன்றத்தில் 1ம் தேதி (நேற்று முன்தினம்) விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி உயர்வு, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகள் ஆகியவை குறித்து ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார்.
இதுகுறித்து நான் சில விளக்கங்களை அளிக்க விரும்புகிறேன். பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை ஒன்றிய அரசு குறைத்திருந்தபோதும் மாநில அரசு குறைக்கவில்லை என்று ஒன்றிய நிதியமைச்சர் கூறினார். நவம்பர் 2021இல், ஒன்றிய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான தனது வரிகளை குறைப்பதற்கு முன்பே, தமிழ்நாடு அரசு ஆகஸ்ட் 2021இல் பெட்ரோல் மீதான வரியில் மூன்று ரூபாய் குறைத்துள்ளது. மேலும், ஒன்றிய அரசின் வரி குறைப்பால் பெட்ரோல் மீதான மாநில அரசின் வரி 1 ரூபாய் 95 பைசா குறைந்துள்ளது. அதாவது, பெட்ரோல் மீதான மாநில அரசின் வரி 4 ரூபாய் 95 பைசா குறைந்துள்ளது.
அதேபோல் டீசல் மீதான மாநில அரசின் வரி 1 ரூபாய் 76 பைசாவாக குறைந்துள்ளது. எனவே, தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல் மீதான வரி 5 ரூபாய் குறைக்கப்படும் என்று கூறியதில், 4 ரூபாய் 95 பைசா குறைக் கப்பட்டுள்ளது. டீசல் மீதான வரி 4 ரூபாய் குறைக்கப்படும் என்று கூறியதில் 1 ரூபாய் 76 பைசா குறைக்கப்பட்டுள்ளது. மேலும், மாநில அரசு மீன்வளத் துறை யிலும், போக்குவரத்துத் துறையிலும் கூடுதலாக டீசல் மானியம் வழங்கி வருகிறது. சரக்கு மற்றும் சேவை வரிகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின், மாநிலங் களுக்கு வரி விதிப்பதில் அதிகாரம் பெருமளவில் குறைந்துள்ளது. இவ் வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment