புதுக்கோட்டை, ஆக.4- கிராமங்கள் தோறும் புத்தக வாசிப்பு அதிகரித்தால் ஜாதி, மத மோதல்கள் நடைபெறாது என்று புதுக்கோட்டை 5-ஆவது புத்தகத் திருவிழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பேசினார்.
விழாவில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: கரோனா தொற்றுக் காலம் நமக்கு மூன்று அம்சங்களைக் கற்றுத் தந்திருக்கிறது. அறிவோடு இருக்க வேண்டும், வலிமையோடு இருக்க வேண்டும், இயற்கை யைப் பாதுகாக்க வேண்டும். அறிவு சார்ந்து இருக்க இதுபோன்ற புத்தகத் திருவிழா முக்கியமானது. கிராமப்புறங்களில் நூலகங் களை மேம்படுத்தினால், ஜாதி, மத மோதல்கள் இருக்காது. இதை உணர்ந்துதான் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது அனைத்து கிராமங்களிலும் நூலகங்களைத் திறந்தார். புத்தக வாசிப்பும், விளையாட்டும் உடல் வலிமை யையும் மனவலிமையையும் தரு பவை என்றார்.
ரூ.1 லட்சம் நிதி
புத்தகத் திருவிழாவை தொடர்ந்து சிறப்பாக நடத்தி வரும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்துக்கு ரூ.1 லட்சம் வைப்புநிதியாக வழங்கினார் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன். மேலும், தனது தொகுதிக்குட்பட்ட அரசுப் பள்ளி நூலகங்களுக்கு நூல்களை வாங்கி பரிசளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
அமைச்சருக்கு பாராட்டு
சதுரங்க ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தி வருவதற்காக அமைச்சர் மெய்யநாதனுக்கு புத்தகத் திருவிழா குழுவின் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து டில்லி விஞ்ஞான் பிரசார் முதுநிலை விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன், அறிவியல் பலகை சார்பில் பா.சிறீகுமார் ஆகியோர் பேசினர். தொடர்ந்து ‘மை’ என்ற தலைப்பில் மேனாள் சட்டப் பேரவை உறுப்பினர் இராசு.கவிதைப்பித்தன் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது.
No comments:
Post a Comment