சென்னை அண்ணா நகரிலுள்ள அண்ணா பூங்கா பகுதிக்குள்ளேயே ஆக்கிரமித்து வழிபாட்டிடமாக மாற்றும் முயற்சி நடைபெற்று வருவதை சுட்டிக்காட்டி சென்னை மாநகராட்சி ஆணையருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு, அறிஞர் அண்ணா பெயரில் நடைபெறும் சென்னை அண்ணாநகர் டவர் பூங்காவில் வழிபாடுகள் நடைபெறலாமா?
எனது முந்தையக் கடிதம்: 26.7.2022 மற்றும் 4.8.2022
வணக்கம்.
எனது 26.7.2022 தேதியிட்ட கடிதத்தில் அண்ணா நகர் டவர் பூங்காவில் ஒரு குறிப்பிட்ட மரத்தை வழிபடும் செயல்பாடு குறித்து குறிப்பிட்டிருந்தேன். ஆகஸ்ட் 2-ஆம் தேதி அந்த பகுதியில் நடைப்பயணத்தின்போது, அந்த மரத்தை யாரும் நெருங்கா வண்ணம் மரத்தைச் சுற்றி, வெட்டப்பட்ட செடிகள் வைத்து தடுக்கப்பட்டிருந்தது கண்டு மகிழ்வாக இருந்தேன்.
ஆனால், 4.8.2022 அந்த வழியே நடைபயணம் சென்ற போது, அந்த தடுப்புச் செடிகள் முற்றிலும் அகற்றப்பட்டு, மீண்டும் அங்கே வழிபாடு செய்யப்பட்டது அறிந்து திடுக்குற்றேன்.
இன்றுவரை அதே நிலை நீடிப்பது மிகவும் கவலைக் குரியது. அரசின் பொதுவான இடத்தில் மதச்சார்பு நடவடிக் கைகள் நடப்பது தவிர்க்கப்பட வேண்டும்.மேலும் இது அத்து மீறிய செயலாகும். இது தொடர்பான ஒளிப்படத்தை இத்துடன் இணைத்துள்ளேன்.
தாங்கள் உடன் தலையிட்டு, அந்த அடர்வனக் காடுகள் பகுதியில் மூன்று பக்கமும் தடுப்பு வேலிகள் உள்ளது போல், நான்காவது பகுதியிலும் தடுப்பினை ஏற்படுத்திடவும், வெளியாட்கள் இங்கே நுழையக்கூடாது என்பதான அறிவிப்புப் பலகையும் வைத்தால் இது போன்ற நிகழ்வுகள் தடுக்கப்படும். அண்ணா பெயரில் உள்ள ஒரு பூங்கா, பகுத்தறிவு பூங்காவாக இல்லாவிட்டாலும், மதச்சார்பற்ற முறையில் இருந்திட சென்னை மாநகராட்சி உரிய நட வடிக்கை எடுத்திட வேண்டும்.
இது குறித்து எடுக்கப்பட்ட ஒளிப்படங்கள் இணைக்கப் பட்டுள்ளன.
தங்கள்,
கோ.கருணாநிதி, அண்ணாநகர், சென்னை.
No comments:
Post a Comment